இறுதிப்போட்டியில் கைகலப்பு; இரு அணிகளும் இணைச்சம்பியனாக தெரிவு | தினகரன்

இறுதிப்போட்டியில் கைகலப்பு; இரு அணிகளும் இணைச்சம்பியனாக தெரிவு

அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியின் போது இரண்டாவது பாதி ஆட்டத்தில் மைதானத்தில் இரு கழகங்களின் வீரா்கள் மோதிக் கொண்டதில் போட்டி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இரு அணிகளுக்கும் இணைச்சம்பியன் விருது வழங்கி வைக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் துார்ந்து போயுள்ள உதைப்பந்தாட்டத்துறையை விருத்தி செய்யும் முகமாக இச்சுற்றுப்போட்டி அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகத்தினால் கடந்த ஞாயிறன்று முழு நாளும் நடாத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.

அட்டாளைச்சேனையில் உள்ள 12 கழகங்கள் பங்கு கொண்ட இச்சுற்றுப்போட்டி அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகத்தின் விளையாட்டுப் பிரிவிற்கான ஆளுநரும்,பொத்துவில் பிரதேச செயலக உப பிரதேச செயலாளருமான எம்.ஏ.சீ.நஸீல் தலைமையில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை மைதானத்தில் நேற்று முன் தினம் மாலை(12.11.2017) நடைபெற்றது.

இதன் இறுதிப்போட்டிக்கு அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகமும்,அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக்கழகமும் தெரிவு செய்யப்பட்டது.முதல் பாதியில் சுப்பர் சொனிக்கழம் 1 கோலினைப் போட்டு முன்னிலையில் இருந்தனர்.இரண்டாவது பாதியில் சோபர் கழக வீரரினால் ஒரு கோல் போடப்பட்டு இரு அணிகளும் சமனிலையில் இருந்தன.

பின்னர் விளையாடும் போது மைதானத்தில் இரு கழக வீரா்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதன் காரணமாகவும் நேரம் முடிவடைந்ததனாலும் நடுவரின் தீர்ப்புக்கமைவாக இறுதியில் போட்டி சமனிலையில் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் இரு அணிகளுக்கும் இணைச்சம்பியன் கிண்ணம் அணித்தலைவர்களிடமும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் வழங்கி வைத்தார்.

இதன் போது அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகத்தின் பதவி வழியிலான உத்தியோகத்தர்களால் இணைச்சம்பியனான இரு அணியின் வீரா்களுக்கும் பதக்கங்கள் அணிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ்,அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகத்தின் பதவி வழியிலான முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

(ஒலுவில் கிழக்கு தினகரன், அட்டாளைச்சேனை விசேட நிருபர்கள்)


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...