சட்டவிரோத ஆர்ப்பாட்டம்; பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 31 பேருக்கு பிணை | தினகரன்

சட்டவிரோத ஆர்ப்பாட்டம்; பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 31 பேருக்கு பிணை

 

அம்பாந்தோட்டையில் கடந்த ஒக்டோர் 06 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 31 பேர் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி, மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாந்தோட்டையிலுள்ள இந்திய துணைத்தூதரகம் முன்னால், கடந்த ஒக்டோர் 06 ஆம் திகதி மேற்கொண்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்‌ஷ, டீ.வீ. சானக, பிரசன்ன ரணவீர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதோடு, நாமல் ராஜபக்‌ஷ மற்றும் டீ.வீ. சானக, மாகாண சபை சம்பத் அதுகோரல உள்ளிட்ட 08 பேர் கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கெடிகார, ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன உள்ளிட்ட 31 பேர் இன்று (13) அம்பாந்தோட்டை நீதவான் மஞ்சள கருணாரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது நீதவான் அவர்களை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

தலா ரூபா 05 இலட்சம் கொண்ட சரீர பிணைகள் இரண்டின் அடிப்படையில்  அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர்களை கைது செய்ப்பட்டிருந்தனர்.

 


Add new comment

Or log in with...