அசிரத்தையின் விளைவாக அநியாய உயிர்ப்பலிகள்! | தினகரன்

அசிரத்தையின் விளைவாக அநியாய உயிர்ப்பலிகள்!

வருடத்தின் இறுதிப் பகுதி இயற்கை அனர்த்த காலம்

நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட நாடே இலங்கை. இது 'இந்து சமுத்திரத்தின் முத்து' என்றும் அடையாளப்படுத்தப்படுகின்றது. வருடம் முழுவதும் எவ்வித அசௌகரியங்களும் இன்றி வாழக் கூடிய சீதோஷண நிலையும் இந்நாட்டில் காணப்படுகின்றது.

அதேநேரம் வட கீழ் பருவப் பெயர்ச்சி, தென் மேல் பருவப் பெயர்ச்சி மற்றும் இடைப் பருவப் பெயர்ச்சி என்றபடியான மழைவீழ்ச்சிக் காலநிலைகளின் ஊடாக மழையையும் இந்நாடு பெற்றுக் கொள்கின்றது. அத்தோடு இது பல்வேறு இயற்கை வளங்கள் நிறைந்த நாடும் கூட.

இவை இவ்வாறிருக்க, இந்நாட்டில் இயற்கையாகவே அமைவுற்ற 103 ஆறுகளும், கங்கைகளும் காணப்படுகின்றன. அவற்றிற்கு மேலதிகமாக சுமார் 70 பாரிய நீர்த்தேக்கங்கள், குளங்கள் அடங்கலாக நூற்றுக்கணக்கான நடுத்தர மற்றும் சிறுகுளங்களும் கூட நாட்டிலுள்ளன.

இதேவேளையில் இந்நாடு பல்வேறு விதமான இயற்கை அனர்த்தங்களையும், எதிர்பாராத விபத்துகளையும் எதிர்கொள்ளவே செய்கின்றது. இவ்வாறான அனர்த்தங்களுக்கும் விபத்துகளுக்கும் பெரும்பாலும் வருடத்தின் நடுப்பகுதியிலும் குறிப்பாக இறுதிக் காலப்பகுதியிலும் இந்நாடு முகம் கொடுப்பது வழமையானது. வெள்ளம், மண்சரிவு, கடுங்காற்று என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை. அத்தோடு வரட்சி, இடிமின்னல் போன்ற இயற்கை அனர்த்தங்களையும் இந்நாடு எதிர்கொள்ளவே செய்கின்றது.

அதேநேரம் சூறாவளி, சுனாமி பேரலை போன்ற பாரிய இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த அனுபவத்தையும் கூட இந்நாடு கொண்டிருக்கின்றது. இவ்வாறான இயற்கை அனர்த்தங்களினால் பெரும் உயிர்ச்சேதங்களும், சொத்து அழிவுகளும் ஏற்படுத்தப்படுகின்றன. அத்தோடு பொருளாதார ரீதியிலான இழப்புக்களுக்கும் நாடு முகம் கொடுக்கின்றது.

இவை இவ்வாறிருக்க, கடலிலும் கங்கை, குளங்களிலும் நீராடும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழத்தல், ஆறுகளிலும், நீரூற்றுக்களிலும் நீராடும் போது திடீரென அள்ளுண்டு செல்லப்பட்டு உயிரிழத்தல் போன்றவாறான உயிரிழப்புக்களுக்கும் சேதங்களுக்கும் இந்நாடு முகம் கொடுக்கின்றது.இவையும் நாட்டுக்கு இழப்புக்களை ஏற்படுத்தவே செய்கின்றன.

ஆனால் இயற்கை அனர்த்தங்களாலும், திடீர் இயற்கை விபத்துகளாலும் ஏற்படுகின்ற உயிர்ச்சேதங்களையும், பாதிப்புகளையும் குறைத்துக் கொள்ளவோ அல்லது தவிர்த்துக் கொள்ளவோ முடியும் என்பதே சமூகவியல் நிபுணர்களின் கருத்தாகும். இதற்கு இயற்கை அனர்த்தங்கள் மற்றும் திடீர் விபத்துக்கள் தொடர்பான அறிவும், விழிப்புணர்வும் இன்றியமையாதவை.

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படல் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இதுவே துறைசார் நிபுணர்களின் அபிப்பிராயமும் கூட. இதற்கு பல காரணிகள் துணைபுரிகின்றன.

அவற்றில் மனிதனே பிரதான இடத்தைப் பிடித்திருக்கின்றான். அவனது தவறானதும், பிழையானதுமான செயற்பாடுகளின் விளைவாக காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தினால்தான் சொற்ப நேர காலத்தில் பலத்த மழை பெய்வதும் அவற்றினால் வெள்ள நிலைமையும் ஏற்படுகின்றது.மலையகப் பிரதேசங்களில் மண் சரிவுகள் ஏற்படவும் அவை துணைபுரிகின்றன. அத்தோடு வருடா வருடம் வரட்சி நிலைக்கு நாடு முகம் கொடுக்கவும் இக்காலநிலை மாற்றம் பக்கதுணையாக விளங்குகின்றது.

அந்த வகையில் கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கை முகம் கொடுத்த வெள்ளம், மண்சரிவு, கடுங்காற்று, வரட்சி, இடிமின்னல் ஆகிய இயற்கை அனர்த்தங்களை எடுத்துப் பார்த்தால் இந்த எல்லா அனர்த்தங்களும் ஒவ்வொரு வருடமும் இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதனால் பலர் உயிரிழந்திருப்பதையும், சேதங்கள், இழப்புக்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதையும் பதிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வழங்கிய தகவல்கள் நல்ல எடுத்துக்காட்டாக உள்ளன.

அதேநேரம் 2004 டிசம்பர் மாதம் இடம்பெற்ற சுனாமி பேரலை அனர்த்தம் சுமார் 35,000 க்கும் மேற்பட்டோரை காவுகொண்டதோடு கோடிக்கணக்கான பெறுமதி மிக்க சொத்துக்களையும் அழித்து சேதப்படுத்தியது. வெள்ளப்பெருக்கினாலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்படுவதோடு பலரும் உயிரிழக்கவே செய்கின்றனர். அத்தோடு அண்மையில் ஏற்பட்ட வரட்சி காரணமாக கூட பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழப்புக்கள், சொத்து மற்றும் உயிர்ச்சேதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.அந்த வகையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள மெதமுலனவில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கம் காரணமாக மூவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அதாவது திறந்த வெளியில் காயவைக்கப்பட்டிருந்த நெல்லை மழையில் நனையாது எடுத்து வரச் சென்ற சமயமே அவர்கள் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்தனர். நெல் அங்கு திறந்த வெளியில்தான் காயவைக்கப்பட்டிருந்தது.

பொதுவாக திறந்த வெளியில் மழைக்காலத்தில் இடி, மின்னல் தாக்கம் மிக அதிகமாகும். அத்தோடு பச்சை மரங்களினாலும் இடி மின்னல் கடத்தப்பட முடியும். அதன் காரணத்தினால்தான் இடிமின்னல் காலத்தில் திறந்த வெளியில் நடமாடுதல், வேலை செய்தல், விளையாடுதல் மற்றும் பச்சை மரங்களுக்கு கீழ் இருப்பதையும் தவிர்த்துக் கொள்ளுமாறுஆலோசனை வழங்கப்படுகின்றது.

மேலும் கங்கைகளிலும், நீரூற்றுக்களிலும் குளங்களிலும் மழை காலங்களில் நீராடக் கூடாது என்று ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த ஆலோசனையை பெரும்பாலானவர்கள் பொருட்படுத்துவதில்லை. குறிப்பாக உல்லாசப் பயணம் செல்லுபவர்கள் பெரும்பாலும் கங்கை, ஆறு மற்றும் நீரூற்றுக்களைக் கண்டால் நீராடுவர். இவற்றில் நீராடுவது இலங்கையருக்கு அலாதியான பிரியமும் கூட. ஆனால் மழைகாலத்தில் நீராடுவது ஆபத்துமிக்கது என்பதை பெரும்பாலானவர்கள் பொருட்படுத்துவதில்லை.

அண்மையில் மாத்தளை பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்த நாத்தாண்டியவைச் சேர்ந்த இரு குடும்ப உறுப்பினர்கள் 12 பேர் தெலக்கு ஓயாவில் நீராடியதன் விளைவாக ஏற்பட்ட விபத்து நல்ல உதாரணமாகும். அதாவது கடந்த ஒக்டோபர் மாத இறுதிப் பகுதியில் அப்பகுதிக்கு சுற்றுலா சென்ற இவர்கள் அந்த ஓயாவில் நீராடத் தொடங்கும் போது அங்கு சுமார் இரண்டு மூன்று அடிகள் உயரத்திற்குத்தான் தண்ணீர் காணப்பட்டது.

ஆனால் அந்த ஓயாவில் திடீரென நீர் அதிகரிப்பதையும், அதனால் உயிராபத்து ஏற்படும் என்பதையும் அவர்கள் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை. அவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென 8 அடி உயரத்திற்கு தண்ணீர் வந்ததோடு நீராடியவர்களையும் அள்ளிச் சென்றது.

அவ்வாறு அள்ளிச் செல்லப்பட்டவர்களில் நால்வரை மாத்திரமே உயிருடன் மீட்க முடிந்தது. ஏனைய 08 பேரும் பிரேதங்களாகவே மீட்கப்பட்டனர். இது மிகக் கவலைக்குரிய நிலைமையாகும். இதேபோன்று மழை காலங்களில் குளங்களிலும் நீர்த்தேக்கங்களிலும் நீராடியவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருக்கின்றார்கள். அத்தோடு கடலில் குளித்த பலர் திடீரென அலைகள் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர்.

இவ்வாறு இயற்கை அனர்த்தங்களாலும் திடீர் விபத்துக்களாலும் வருடா வருடம் பலர் இந்நாட்டில் உயிரிழக்கவே செய்கின்றனர். குறிப்பாக அண்மைக் காலமாக இந்நாட்டில் வருடத்தின் இறுதிக் காலப்பகுதியில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் மிக அதிகமாகும். இது தொடர்பில் இலங்கை நிறையவே அனுபவத்தைக் கொண்டிருக்கின்றது.

அதன் காரணத்தினால் வருடத்தின் இறுதிக் காலப்பகுதியில் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் திடீர் விபத்துக்கள் தொடர்பில் மிகுந்த முன்னெச்சரிக்கையோடும் விழிப்புடனும் செயற்பட வேண்டியது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.அப்போது இயற்கை அனர்த்தங்கள் மற்றும் திடீர் இயற்கை விபத்துகள் மூலம் ஏற்படக் கூடிய பாதிப்புக்களையும் சேதங்களையும் பெரிதும் குறைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

மர்லின் மரிக்கார்...


Add new comment

Or log in with...