தேய்கிறது செல்வாக்கு! | தினகரன்

தேய்கிறது செல்வாக்கு!

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை வீழ்த்தி மோடியின் செல்வாக்கு காரணமாக பி.ஜே.பி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. பின்னர் வந்த உத்தரப் பிரதேச தேர்தல் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் மோடியின் செல்வாக்கு காரணமாக அந்தக் கட்சிக்கு வெற்றி கிடைத்தது.

இப்போது மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தில் வெற்றி பெறுவதை விடவும் மோடியின் பிறந்த மண்ணில் வெற்றி பெறுவதை பி.ஜே.பி தலைவர்கள் பெரும் கௌரவமாகக் கருதுகின்றனர்.

மத்திய உளவுத்துறையின் சார்பில் சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் இரகசியமாக ஒரு தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில், பி.ஜே.பிக்கு மக்களிடம் செல்வாக்கு குறைவதாகத் தெரியவந்தது. மோடியின் செல்வாக்கும் சரிந்து வருவதாக புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன. இதனால்தான் சட்டப்பேரவைத் தேர்தல் திகதி அறிவிப்பை தள்ளிவைத்து, குஜராத்துக்கு சில சலுகை அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.

குஜராத்தில் அடுத்தடுத்து மூன்று முறை தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றுப் பேசினார். மேலும், குஜராத்தில் இருக்கும் வணிகர்களின் வாக்குகளைப் பெறும் வகையில் இப்போது உணவு விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு வியாபாரங்களுக்கான ஜி.எஸ்.டி வரியின் சதவிகிதத்தை மத்திய அரசு குறைத்திருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் ABP செய்தி நிறுவனம் சார்பில் கடந்த ஓகஸ்ட் மாதத்திலும், ஒக்டோபர் மாதத்திலும் தனித்தனியே கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. அதில் கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த கருத்துக் கணிப்பில் பி.ஜே.பி-க்கு 59 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பது தெரியவந்தது.

ஆனால், ஒக்டோபர் மாதம் நடந்த கருத்துக் கணிப்பில் 47 சதவிகிதம் வாக்குகள்தான் கிடைக்கும் என்று தெரியவந்திருக்கிறது. இரண்டு மாதங்களுக்குள் 12 சதவிகித வாக்குகள் குறைந்திருக்கின்றன.

அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஓகஸ்ட் மாதக் கணிப்பில் 29 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒக்டோபர் மாதம் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் 41 சதவீதம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவிகிதம் வாக்குகள் அதிகரித்திருக்கின்றன.

குஜராத் முதல்கட்டத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 9-ம் திகதி நடக்க உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியின் பிரசார யுக்தியால் மேலும் செல்வாக்கு அதிகரிக்கும் என்று அதன் தலைவர்கள் நம்புகிறார்கள்.

குஜராத்தின் செளராஷ்டிரா பகுதியிலும், வடக்கு குஜராத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. பி.ஜே.பி-க்கு மத்திய குஜராத், குஜராத்தின் தெற்கு பகுதியில் செல்வாக்கு இருக்கிறது.

இந்த கருத்துக்கணிப்புக்குப் பின்னர் பி.ஜே.பி தலைவர்களிடம் மேலும் கவலை அதிகரித்திருக்கிறது. மோடியின் சொந்த மண்ணில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார். எனவே, பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்ட தலைவர்கள் குஜராத்தில் முகாமிட்டு தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தை பி.ஜே.பி ஆட்சியில் இருந்து விடுவித்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத்தில் சமூக வலைதளங்கள் மூலமும் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா-வில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள ஆர்வலர்களின் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “பி.ஜே.பி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்குச் சென்று பார்த்தால், அந்தத் தலைவர்களின் முகங்கள் எல்லாம் இறுக்கமாக இருக்கின்றன. யாருமே இப்போது சிரிப்பது இல்லை. பி.ஜே.பி-யின் தலைவர்கள் கவலையில் இருக்கின்றனர். நாம் எதிர்காலத்தைப் பார்க்கிறோம். நாம் சந்தோஷமாக இருக்கிறோம்” என்றார்.

முன்னதாக கடந்த 11-ம் திகதியன்று குஜராத் காந்தி நகரில் பிரசாரத்தைத் தொடங்கிய ராகுல், “2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பி.ஜே.பி எங்களைப் படுதோல்வி அடைய வைத்தது. இப்போது அதிலிருந்து மீண்டு, வலுவான நிலையில் இருக்கிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கே.பாலசுப்பிரமணியம்


Add new comment

Or log in with...