ஹெரோயின் பக்கற்றுக்களை விழுங்கி கடத்தி வந்த நபர் விமான நிலையத்தில் கைது | தினகரன்

ஹெரோயின் பக்கற்றுக்களை விழுங்கி கடத்தி வந்த நபர் விமான நிலையத்தில் கைது

ஹெரோயின் பக்கற்றுக்களை விழுங்கி நாட்டுக்குள் கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜை நேற்று(13) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 1.08 மணியளவில் இடம்பெற்றது. கட்டுநாயக்கவிமான நிலையத்திலுள்ள பொலிஸ் போதைவஸ்து தடுப்பு பிரிவுக்கு கிடைத்த, இரகசிய தகவலையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார். டோஹா கட்டாரிலிருந்து கியு. ஆர் 668 விமானத்தில் வந்திறங்கிய நிலையில், இவரைக் கைது செய்த அதிகாரிகள் ஹெரோயின் பக்கற்றுக்களை இவரிடமிருந்து மீட்டெடுத்தனர். சந்தேக நபரை விசாரணைக்கு உட்படுத்தியபோது ஹெரோயின் பக்கற்றுக்களை விழுங்கி இரகசியமாக கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டார்.

பொலிஸ் போதை வஸ்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேக நபரை மலசல கூடத்துக்கு அழைத்துச் சென்று 42 பக்கற்றுக்களையும் மலவாயிலாக வெளியேற்றினர்.

மேலும் பல பக்கற்றுக்கள் தனது வயிற்றுக்குள் இருப்பதாக அந்நபர் கூறியதையடுத்து, பொலிஸார் அவரை உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அவரது வயிற்றிலுள்ள எஞ்சிய ஹெரோயின் பக்கற்றுக்களை மீட்ப்பதற்கான முயற்சிகளை வைத்தியர்கள் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மீட்கப்பட்டுள்ள 42 பக்கற்றுக்களின் மொத்த நிறை இதுவரை கணக்கிடப்பட வில்லை என விமான நிலையத்தின் போதைவஸ்து தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...