‍‍காமினி செனரத் உட்பட மூவர் கைது | தினகரன்

‍‍காமினி செனரத் உட்பட மூவர் கைது

* நாளை 15 ஆந் திகதி வரை விளக்கமறியல்

* அரச நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்திய குற்றம்

அரசாங்கத்தின் 4 பில்லியன் ரூபா நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளனிப் பிரிவு பிரதானியான காமினி செனரத் உள்ளிட்ட சந்தேக நபர்கள் மூவரையும் நாளை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டில் கொழும்பு கொள்ளுப்பிட்டி ஹோட்டல் செயற்றிட்டமொன்றுக்கென அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப்படிருந்த 18.5 பில்லியன் ரூபா நிதியிலிருந்து 4 பில்லியன் ரூபா நிதியை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச் சாட்டின் பேரிலேயே காமினி செனரத் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தமது சட்டத்தரணிகள் மூலம் நேற்று சரணடைந்த மூன்று சந்தேக நபர்களான காமினி செனரத், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் பியதாச குடபலகே மற்றும் சமுர்த்தி முன்னாள் ஆணையாளர் நீல் பண்டார ஹப்புவின்ன ஆகியோர் மீதான வழக்கு விசாரணைக்கென எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார். குறித்த வழக்குடன் சம்பந்தப்பட்ட சட்டபூர்வ மற்றும் சம்பவம் குறித்த ஆவணங்களைப் பரிசோதித்த பின்னர் அடுத்த விசாரணைக்கான திகதி குறித்த உத்தரவை தான் வழங்கவுள்ளதாகவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

மனுதாரர் மற்றும்எதிர்த்தரப்பினர் தங்கள் வாதங்களை எழுத்துருவில் 14 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டுமென ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ‘பீ’ அறிக்கையின் பிரகாரம். கடந்த 2012 இல் அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 18..5 பில்லியன் ரூபாவிலிருந்து 4 பில்லியன் ரூபாவை சட்டவிரோதமான முறையில் முதலீடு செய்த வகையில் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக அவர்கள் மூவரும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

கேள்விக்கிடமான குறித்த நிதியானது, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் இணைக்கப்பட்ட கான்வில் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட வேண்டியிருந்த கொள்ளுப்பிட்டி கிராண்ட் ஹையாட் றிஜென்சி ஹோட்டலுக்கென்றே ஒதுக்கப்பட்டிருந்தது. ஹெயாட் றிஜென்சி ஹோட்டல் செயற்றிட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான அலி சப்ரி, அனில் சில்வா மற்றும் சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸ ஆகியோர் குறித்த கான்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அரச நிறுவனம் ஒன்றல்ல என காரணப்படுத்தி அரச சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்த முடியாதென வாதிட்டனர். அதேவேளை, நிதி மோசடி விசாரணைப்பிரிவின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் அரச நிறுவனமொன்றல்ல என்ற எதிர்த்தரப்பு வாதங்களை அடியோடு மறுத்துரைத்தார்.சந்தேக நபர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை நவம்பர் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 


Add new comment

Or log in with...