அரச அதிகாரிகள் முதுகெலும்புடன் பணிபுரியும் நிலை உருவாகியுள்ளது | தினகரன்

அரச அதிகாரிகள் முதுகெலும்புடன் பணிபுரியும் நிலை உருவாகியுள்ளது

 

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என்பவற்றின் நிதிக் கட்டுப்பாடு, செயற்றுகை என்பவற்றை மதிப்பீடு செய்து விருது வழங்கும் நிகழ்வு இன்று (13) பாராளுன்ற குழு அறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

இதன் ​போது தங்க விருது வழங்கப்பட்ட அரச நிறுவனங்களிடையே கணக்காய்வு திணைக்களத்திற்கு முதலிடமும் பிரதமர் அலுவலகம், தேர்தல் திணைக்ளம் என்பவற்றுக்கு முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களும் கிடைத்தன.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர்களாக இருந்தவர்களுக்கு தமது பதவியை விட்டும் செல்ல நேரிட்டிருக்கிறது. பதவி இழந்தவர்களும் உள்ளனர்.

சுமார் 14 இலட்சம் அரச ஊழியர்கள் நாட்டிலுள்ளனர். இது 13 பேருக்கு ஒருவராகும். கஷ்ட பகுதிகளில் பணியாற்றும் அரசாங்க ஊழியர்கள் சிறந்த சேவையாற்றி வந்துள்ளனர். இவர்கள் பிரதேச அரசியல்வாதிகளுக்கு நல்லது, கெட்டதை எடுத்துக் கூற அஞ்சவில்லை. இவர்களின் முதுகெழும்பை அரசியல்வாதிகள் உடைத்தார்கள். கணக்காய்வு அதிகாரி ஒருவருக்கு கண்டியில் வைத்து அசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆயினும் தற்போது மீண்டும் முதுகெலும்புடன் பணிபுரியும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்றும் முதுகெலும்புடன் செயற்படும் சில அதிகாரிகள் இருக்கின்றனர்.

சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயற்படுகின்றன. அரச சேவையை சிறப்பானதாக மாற்ற வேண்டும்.

2015 மாற்றத்தினூடாக இதற்கான அடித்தளம் இடப்பட்டது. 25 - 30  வருடங்கள் நீடித்த இந்த நிலைமையை ஒரேயடியாக மாற்ற முடியாது.

சகல அரச அதிகாரிகளும் முன்மாதிரியாகவும்  பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.
சிறப்பாக செயற்பட்ட அரச நிறுவனங்களுக்கு இன்று தங்க, வெள்ளி விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டன.

இதே போன்று இந்த பட்டியலில் இறுதியில் உள்ள மோசமாக செயற்பட்ட நிறுவனங்களையும் அழைத்து இவ்வாறு தங்க, வெள்ளி விருதுகள் வழங்க வேண்டும். அவற்றின் குறைபாடுகளை திருத்தி இதே போன்று சிறந்த நிலைமைக்கு மாற்ற வேண்டும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

(RSM)


Add new comment

Or log in with...