லிந்துலை வைத்தியசாலையில் வைத்தியர், தாதியர் பணிப்புறக்கணிப்பு | தினகரன்

லிந்துலை வைத்தியசாலையில் வைத்தியர், தாதியர் பணிப்புறக்கணிப்பு

லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகள் இன்று (13) காலை முதல் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

குறித்த வைத்தியசாலையில் 10 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றும் இரு தாதியர், வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகளுக்கு பாதகம் விளைப்பதாக தெரிவித்து வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் என சுமார் 15 பேர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதால் வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இருந்த போதிலும் வைத்திய சேவைக்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள பெண் தாதியர் இருவர் உட்பட மொத்தம் ஐந்து தாதியர்கள் மாத்திரம் சேவையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் வெளிநோயளர் பிரிவுக்கு வருகை தரும் இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு வைத்தியர்கள் ஊடான சேவையை பெறுவதில் இன்று (13) காலை முதல் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நோயாளராக அனுமதிக்கப்பட்டவர்களும் சிரமத்திற்குள்ளாகும் அதேவேளை வெளிநோயளர்களுக்கு தனியார் வைத்தியசாலைகளில் மற்றும் மருந்தகங்களில் மருந்துகளை பெற்றுக்கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிந்துலை வைத்தியசாலையில் 13 வருடங்களாக சேவையாற்றி வரும் இரண்டு தாதியர்களுக்கு இடமாற்ற கடிதம் வந்துள்ள போதிலும், இவர்கள் செல்லாது வைத்தியசாலையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து வருவதுடன் லிந்துலை பிரதேசத்தை சேர்ந்த தோட்ட பகுதி மற்றும் கிராம பகுதியிலிருந்து வரும் நோயாளர்களுக்கு உரிய சேவையை இவர்கள் வழங்காது புறுக்கணித்து வருவதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கு இவர்கள் ஊடாக பாரிய சிரமங்கள் ஏற்படுவதை கண்டித்தே இப்பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

பல் வைத்தியர் உட்பட மொத்தம் நான்கு வைத்தியர்கள் இவ்வைத்தியசாலையில் சேவையாற்றுவதுடன், 12 சிற்றூழியர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

கடந்த காலங்களில் இவ்வைத்தியசாலையில் பாரிய வைத்திய குறைபாடுகள் நிகழ்வதாக மக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் பக்கதிலும் பெரியதாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இங்கு பணியாற்றும் குறித்த தாதியர்கள் இருவர் வைத்திய நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயலை செய்து வருகின்றனர். இது தொடர்பில் மத்திய மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிக்ள மற்றும் நுவரெலியா மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் தலையீடு செய்து உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும்பட்சத்தில் இப்பிரதேச மக்களுக்கு உரிய வைத்திய சேவையை எம்மால் வழங்க முடியும் என பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள வைத்தியர்கள் மேலும் தெரிவித்தனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...