ஒரே மேடையில் 85 மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை படைக்க டுபாய் வாழ் இந்திய சிறுமி திட்டம் | தினகரன்

ஒரே மேடையில் 85 மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை படைக்க டுபாய் வாழ் இந்திய சிறுமி திட்டம்

டுபாயில் வசிக்கும் 12 வயது இந்திய சிறுமி சுசிதா சதிஷ், ஒரே மேடையில் 85 மொழிகளில் பாடத் திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் ஏற்கெனவே உள்ள கின்னஸ் சாதனையை அவர் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டுபாயில் உள்ள தி இந்தியன் ஹை ஸ்கூலில் 7-ம் வகுப்பு படிக்கிறார் சுசிதா சதிஷ். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட அவர் வரும் டிசம்பர் 29 அன்று ஒரே மேடையில் 85 மொழிகளில் 85 விதமான பாடல்களைப் பாடத் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசும் சுசிதா, ''ஒரு வருடத்தில் 80 மொழிகளில் பாடல்கள் பாடக் கற்றுக் கொண்டேன். கூடிய விரைவில் புதிதாக 5 மொழிகளைக் கற்று கின்னஸ் சாதனை நிகழ்த்த உள்ளேன்.

முதன்முதலில் ஜப்பானிய மொழியில்தான் பாடல் கற்றுக்கொண்டேன். ஒரு வருடத்துக்கு முன்பு என் தந்தையின் ஜப்பானிய தோழி வீட்டுக்கு வந்தார். அவர் ஜப்பானிய மொழியில் பாடல் பாடினார். எனக்கு அப்பாடல் பிடித்துப் போகவே அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டேன்.

பொதுவாக ஒரு மொழிப் பாடலைக் கற்றுக் கொள்ள எனக்கு 2 மணி நேரம் ஆகும். ஃப்ரெஞ்சு, ஹங்கேரியா மற்றும் ஜெர்மானிய பாடல்கள் எனக்கு மிகவும் கடினமான இருந்தன. ஆனால் முறைப்படி அவற்றைக் கற்ற நான், 85 மொழிப் பாடல்களைப் பாடி விரைவில் கின்னஸ் சாதனையை முறியடிக்க உள்ளேன்'' என்றார்.

முன்னதாக ஆந்திர மாநிலம் காந்தி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த கேசிராஜு ஸ்ரீனிவாஸ், 2008-ல் 76 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...