கருணாநிதியுடன் சரத், ராதிகா சந்திப்பு: தி.மு.க. கூட்டணிக்கு அச்சாரம்? | தினகரன்

கருணாநிதியுடன் சரத், ராதிகா சந்திப்பு: தி.மு.க. கூட்டணிக்கு அச்சாரம்?

தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் சந்தித்து நலம் விசாரித்தனர். அதனால் தி.மு.க. கூட்டணியில் இணைய சரத்குமார் அச்சாரம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருணாநிதியின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இ.கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு என வரிசையாக தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரிக்கின்றனர்.

சமீபத்தில் பிரதமர் மோடியும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது சந்திப்பு தமிழக அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் ச.ம.க. தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோர் நேற்று முன்தினம் கருணா நிதியை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இது குறித்து சரத்குமார் கூறுகையில், ''எம்.ஜி.ஆருக்கு பின் எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர் கருணாநிதி; அதற்காகவே அவரை சந்தித்து நலம் விசாரித்தேன்'' என்றார். ஜெ. மறைவுக்கு பின் முதல்வர் பழனிசாமி அணியை சரத்குமார் ஆதரித்தார்.

தற்போது மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார். எனவே தி.மு.க. கூட்டணியில் இணைந்து லோக்சபா தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடுவதற்காகவே கருணாநிதியை சந்தித்து தி.மு.க. உறவை புதுப்பித்து உள்ளார் என அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Add new comment

Or log in with...