அரசியலமைப்பு சபையை செல்லுபடியற்றதாக்க வேண்டும் | தினகரன்

அரசியலமைப்பு சபையை செல்லுபடியற்றதாக்க வேண்டும்

சபாநாயகருக்கு விஜேதாச கடிதம்

அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது தவறு.இது செல்லுபடியற்றது என அறிவிக்குமாறு கோரி முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ நேற்று சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் .

வழிப்படுத்தும் குழு மற்றும் அறிக்கைகள் என்பன அரசிலமைப்புக்கு முரணானது என்று குறிப்பிட்டுள்ள அவர், இதன் செயற்பாடுகள் ஆரம்பம் முதல் செல்லுபடியற்றதென அறிவிக்குமாறும் கோரியுள்ளார். இந்தகடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அடங்கலான சகல கட்சித் தலைவர்கள்,மதத் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி எந்தவொருஅரசியல் கட்சியினதும் தலைவராக களமிறங்கியிருக்கவில்லை. அவர்அரசியல் கட்சியொன்றின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகியிருந்த சாதாரண நபரொருவராகவே இருந்தார். அரசியலமைப்பு மாற்றங்களுக்கோ அல்லது சட்டதிருத்தங்களுக்கோ ஆணைகோருவதற்கான உரிமை அவருக்குகிடையாது.

தற்போதைய அரசியலமைப்பை ரத்து செய்வதற்கும் புதியஅரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்குமான நடைமுறையொன்றை 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் இரண்டாவதுஅத்தியாயத்தினூடாக வழங்கப்பட்டுள்ளது.

சபைக்கு சமூகமளிக்காத உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து மூன்றில் இரண்டுபெரும்பான்மை உறுப்பினர்களது ஆதரவுடன் அரசியலமைப்பு நிறைவேற்றப் படவேண்டும். , அரசியலமைப்பின் 85 ஆவது உறுப்புரைக்கமைய சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலமும் அங்கீகரிக்கப்படவும் வேண்டும்.

தற்போதைய ஜனநாயகம் தொடர்பில் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் தனிநாடொன்றை உருவாக்குவதற்கு இலங்கைக்குள்ளோ அல்லது வெளியிலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொருநபரும் ஆதரவளிக்கவோ ,ஊக்குவிக்கவோ ,நிதியளிக்கவோ அல்லது பரிந்து பேசவோ கூடாது என்று அரசியலமைப்பில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும்,2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் (21) திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட வழிப்படுத்தும் குழுவின் அறிக்கையின் சில முன்மொழிவுகள் நாட்டை பிளவுப்படுத்த வழிவகுக்கக் கூடும்.

2016 ஆம் ஆண்டுமார்ச் மாதம் 09 ஆம் திகதி நான் உள்ளிட்ட எம்.பி.க்களினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு சபையை செல்லுபடியற்றதாகக்க வேண்டும். இதற்கமைய,வழிப்படுத்தும் குழுவையும் அதன் அறிக்கைகளையும் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் செல்லுபடியற்ற தென்றும் அறிவிக்க வேண்டும்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

Or log in with...