அனைத்து மக்களின் நலன், நிலைபேறான அபிவிருத்தி | தினகரன்

அனைத்து மக்களின் நலன், நிலைபேறான அபிவிருத்தி

* வரவு செலவுத்திட்டத்தில் சிறந்த முன்மொழிவுகள்
* சமூக, பொருளாதார, அரசியல், நிதி, வர்த்தக நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்கள்

நாட்டின் அனைத்து மக்களினதும் நலன்கள், எதிர்கால சந்ததியினருக்கான நிலைபேறான அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஒரு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக, பொருளாதார, அரசியல், நிதி, வர்த்தக நிபுணர்கள் பாராட்டியுள்ளனர்.

2018 ஆம் ஆண்டுக்கான நல்லாட்சி அரசின் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இலங்கையை 2025 ஆம் ஆண்டாகும் போது செல்வம் கொழிக்கும் நாடாக உருவாக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் எதிர்பார்ப்புக்கான இலக்கை அடைவதற்குத் தேவையான நடைமுறைச் சாத்தியமான விடயங்களை உள்ளடக்கியதாக இந்த வரவு-செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மிக விரைவாக  நடைமுறைப்படுத்த வேண்டும்

இந்த வரவு –செலவு திட்டம்தொடர்பாக கருத்துதெரிவித்த கொழும்பு மாவட்ட வர்த்தக சபையின் தலைவர் கலாநிதி அமில கங்கானம்கே கூறுகையில்,

புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு இலகு நிபந்தனை உடனும் இலகு வைப்பு மூலமாகவும் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு புதிதாக திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

இதேபோன்று உற்பத்திகளின் தரம் மற்றும் அவற்றின் குணநலம் மேம்மையாவதற்கு புதிய தொழில்நுட்பம், அறிவு, மனிதவள ஆற்றல் என்பவற்றை மேம்படுத்துவதற்கு இந்த வரவு செலவுத்திட்டம் மிகவும் முக்கியமானதாகும்.

நாட்டின் விவசாயத்துறையை எடுத்துக் கொண்டால் நவீனமயப்படுத்தல் குறைந்த செலவு போன்ற வேலைத்திட்டங்களுக்கு ஊடாகவும் அனர்த்தங்களினால் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு காப்புறுதி திட்டம் உருவாக்கியிருப்பது வரப்பிரசாதமாக அமையும். சிறிய அளவிலான தொழிற் முயற்சியாளர்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் வரவேற்கத்தக்கது. என்றாலும் இவை மிக விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் மத்திய வங்கிப் பணிப்பாளர் மற்றும் பிரபல பொருளாதார விற்பனர் வின்சன் மேர்வின் பெர்னாண்டோ கருத்து தெரிவித்தபோது, நாட்டின் அரச வருமானம், அரச உத்தியோகத்தர்களின் சம்பளம், உரம், சமுர்த்தி உதவி மற்றும் வட்டிகளை செலுத்துதல், மீண்டுவரும் செலவினம் போன்றவற்றை செலுத்த முடியாத நிலையிலேயே ஆரம்பத்திலேயே இருந்தோம். சம்பளம் செலுத்த முடியாத அளவுக்கு வருமானம் இல்லையென்றால் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கு தேவையான பணம் எங்கே. என்ற கேள்வி நாட்டுக்கு இருந்தது.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் அரச வருவாயை விட மீண்டுவரும் செலவினத்தை குறைப்பதற்கான இலக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் முழுமையான வருமானம் 2326 பில்லியன் ரூபா. மீண்டுவரும் செலவினமாக 1250 பில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி எமது வருமானத்துக்கு மீண்டுவரும் செலவினத்தையாவது செலுத்தக்கூட முடியுமாக இருக்கிறது. இது மிகப்பெரிய வெற்றி. 2017 ஆம் ஆண்டிலிருந்து இந்நிகழ்வு நடந்தது. நீண்டகால அபிவிருத்திகான ஒரு அடிப்படையை உருவாக்குவதுதான் வரவு செலவுத்திட்டத்தின் விசேட அம்சம். புதிய உற்பத்திக்கான பொருளாதாரத்தை நோக்கிச் செல்வது அவசியம். அதேபோன்று ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதும் அவசியம். அதற்கான இலக்கை கொண்டிருப்பதும் மிக முக்கியம்.

அமைச்சர் ப.திகாம்பரம்

தூர நோக்குடையதாகவே இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் கடன் வாங்கியே அபிவிருத்தியை முன்னெடுத்து வந்தது. பின்னர் இக்கடனை மக்களே செலுத்த வேண்டி ஏற்பட்டது. எனினும் இந்த அரசாங்கம் மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றாது, வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில் இத்திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் மலையக மக்களுக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கூடாகவும் தோட்ட மக்களுக்கு பாரிய நன்மைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும்.

முஜிபூர் ரஹூமான் எம்.பி

இந்த வரவு செலவுத் திட்டம் எதிர்காலத்தை நோக்கிய சிறந்ததொரு ஆரம்பமாகும். இது நாட்டின் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதனால் இங்கு சிறுபான்மை சமூகத்தினருக்கும் ஏனையோரைப் போன்றே சமனான பயன்கள் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. சுகாதாரம், போக்குவரத்து, சுற்றுலாத்துறை, விளையாட்டுத்துறை, உயர் கல்வி ஆகிய அனைத்து துறைகளுக்கும் இதன் மூலம் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ளோருக்கு வீடுகள் வழங்கப்படவுள்ளன. அதேபோன்று வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கும் பல நன்மைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு சுமையின்றிய சிறந்ததொரு வரவு செலவுத் திட்டமாக இது அமைந்துள்ளது.

முத்துசிவலிங்கம் எம்.பி.

இம்முறை வரவு செலவுத் திட்டம் பெரும் ஏமாற்றம் அளித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் தினகரனுக்குத் தெரிவித்தார். தோட்டத்துறையினருக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தினால் எவ்வித பயனும் கிட்டவில்லையென்றும் அவர் கூறினார்.

அரசாங்க மற்றும் தனியார் துறையினருக்கு சம்பள உயர்வு வழங்கப்படுமென பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டது. நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசிக்கேற்ப தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்குமாயின் அதனைக் காரணம் காட்டி தோட்டத் தொழிலாளர்களுக்கும் கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பள உயர்வை நாம் பெற்றுக் கொடுத்திருப்போம். ஆனால் நாம் எதிர்பார்த்தது போன்று அவ்வாறான விடயங்கள் இம்முறை முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பாரிய நன்மைகள் இல்லாதபோதும் வரி சுமை இல்லாத வரை இந்த வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு திருப்தியளிப்பதாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு வருடத்துக்குள் 25 ஆயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பதென்பது இயலாத காரியமாகும். நுவரெலியா மாவட்டத்தில் லபுக்கலை தோட்டத்திலேயே முதன் முறையாக தோட்டத் தொழிலாளிகளுக்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மலையகத்தில் நிலவும் குளிருடன் கூடிய காலநிலை மற்றும் திறைசேரியிலிருந்து கிடைக்கும் பணம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வருடத்துக்கு ஆகக்கூடியது 5 ஆயிரம் வீடுகளையே அமைக்க முடியும்.

அங்கஜன் இராமநாதன் எம்.பி

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை இது நல்லிணக்கத்துக்கான மிகச்சிறந்ததொரு வரவு செலவுத் திட்டமாகும்.

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பல சிறப்பம்சங்கள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன. இது சுற்றாடல் பாதுகாப்பை கருத்திற் கொண்ட வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்வாண்மையாளர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளமை மிகவும் விசேடமான விடயமாகும். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டங்களின்போது யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை நான் முன்வைத்திருந்தேன். அக்கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிக்கு நன்றி கூற நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். உண்மையில் எனக்கு இவ்விடயம் மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. றுஹுணு பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான கல்விப் பிரிவின் பேராசிரியர் சனி அத்தப்பத்து,

நீண்டகால அபிவிருத்திக்கான முதலீட்டை இலக்காகக் கொண்டு இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்கால இலக்கு மிக அவசியமானது. நாட்டின் பொருளாதாரம் முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த நடைமுறை ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கான ஒரு பின்னணியை இந்த வரவு செலவுத்திட்டம் உருவாக்கியிருக்கிறது.

புதிய முதலீட்டாளர்களுக்கு அதேபோல எமது சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடி முன்மொழிவுகளைக் கொண்டதாக இந்த வரவு செலவுத் திட்டத்தைக் குறிப்பிடலாம். முதலீடுகளை செய்பவர்களுக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நாட்டின் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி அதனூடாக பயனைப்பெறுவதற்கு தேவையான கொள்கை அளவிலான தீர்மானங்களை எடுப்பதற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழிகாட்டப்பட்டிருக்கிறது.


Add new comment

Or log in with...