பொருளாதார தாராளமயமாக்கலுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை | தினகரன்

பொருளாதார தாராளமயமாக்கலுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை

நாட்டை தாராளமயப்படுத்தப்பட்ட மற்றும் உலக மயப்படுத்தப்பட்ட பொருளாதாரமொன்றுக்கு கொண்டு செல்வதற்கான மக்கள் ஆணை அரசாங்கத்துக்குக் கிடையாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான முதல் நாள் விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்டிருக்கும் கடன் நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு பதில் தேடும் முயற்சியாகவே அடுத்த வருடத்துக்கான வரவு-செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு-செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்த யோசனைகள் மீண்டும் அடுத்த வருடத்துக்கான வரவு-செலவுத்திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளன. உயர்தர மாணவர்களுக்கு டெப் இயந்திரம் வழங்குவது போன்ற யோசனைகள் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவினமாக 2,326 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதுடன், 3,001 பில்லியன் ரூபா மொத்த செலவினமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1,970 பில்லியன் ரூபா கடன் செலுத்த தேவைப்படுகிறது. இந்த வரவு-செலவுத்திட்டத்தில் கடன் செலுத்தலுக்கான உச்சநிலைக்கு செல்கின்றீர்கள்.

உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்காமல் வெளிநாட்டு தொழில்முயற்சியாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான யோசனைகளே இதில் முன்வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, அரச நிறுவனங்கள் சேவைக்கான அறவீடு என்ற யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அது எதற்கானது என்பது பற்றி சரியான தெளிவுப்படுத்தல்கள் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...