நொண்டிக் குதிரையே தொடர்ந்தும் சவாரி | தினகரன்

நொண்டிக் குதிரையே தொடர்ந்தும் சவாரி

மஹிந்த அணி

குதிரையில் சவாரி செய்பவர் மாறினாலும் குதிரை மாறாது. நொண்டிக் குதிரை தொடர்ந்தும் சவாரியில் ஈடுபடுவதைப் போன்று அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டம் அமைந்திருப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதாரத்தை சிதைக்கும் வகையில் முன்வைத்த வரவு,செலவுத்திட்டத்தைப்போல, எந்தவொரு பொருளாதார முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்காத வகையில் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் அமைந்திருப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வரவு, செலவுத்திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், நாம் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளுக்கு அல்லது நிபந்தனைகளுக்கு ஏற்ற வகையிலேயே வரவு, செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். 2016ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. நாணய நிதியத்திலிருந்து கடனைப் பெறுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு வெளியே சென்று மங்கள சமரவீரவினால் வரவு, செலவுத்திட்டத்தை தயாரிக்க முடியாது.

அதிக வரிச்சுமையை சுமத்தும், மஹிந்த ராஜபக்‌ஷ நிர்வாகத்தைவிட பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை அதிகரித்துள்ளது. நூற்றுக்கு நூறுவீதம் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்காது, கடன்சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட வரவு, செலவுத்திட்டமாக இது அமைந்துள்ளது என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நிதி நெருக்கடி, வாழ்க்கைச்செலவு, வேலைவாய்ப்பு நெருக்கடி என்பவற்றுக்கு இந்த வரவு, செலவுத்திட்டத்தில் எந்த யோசனைகளும் இல்லை. அது மாத்திரமன்றி தேசிய வியாபாரத்துறை சீர்குலைந்துள்ளது. வெற்றியளிக்காத பொருளாதார சிக்கலை அதிகரிக்கும் வரவு, செலவுத்திட்டமாக இது அமைந்துள்ளது என்றும் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...