பாதுகாப்பு குறித்து வீரர்கள் அச்சம் பாகிஸ்தான் செல்லுமா மேற்கிந்திய தீவு அணி | தினகரன்

பாதுகாப்பு குறித்து வீரர்கள் அச்சம் பாகிஸ்தான் செல்லுமா மேற்கிந்திய தீவு அணி

பாகிஸ்தானில் தங்களது பாதுகாப்பு குறித்து முன்னணி வீரர்கள் அச்சம் வெளியிட்டதன் காரணமாக அந்நாட்டுக்கான கிரிக்கெட் விஜயத்தை மேற்கிந்தியத் தீவுகள் பிற்போட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவித்தன

பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும்பொருட்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி அங்கு செல்வதாக இருந்தது.

இரண்டு அணிகளுக்கும் வாய்ப்பு ஒன்று உருவாகும்போது இந்த கிரிக்கெட் விஜயத்தை அடுத்த வருடம் நடத்துவது குறித்து திட்டமிடப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்தது.

பாகிஸ்தானுக்கான விஜயத்தை மேற்கிந்தியத் தீவுகள் பிற்போட்டமை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.

‘‘சில வீரர்களுடன் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை பேசியபோது அவர்கள் பாகிஸ்தான் செல்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. சிரேஷ்ட வீரர்களான கிறிஸ் கெய்ல், கீரொன் பொலார்ட், ட்வேன் ப்ராவோ போன்றவர்கள் இந்தத் தொடர் இடம்பெற்றால் அதில் தாங்கள் பங்குபற்றப்போவதில்லை என தெளிவாக கூறினர்’’ என ஒரு வட்டாரம் தெரிவித்தது.

‘‘பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைவரங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முகவர்கள் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த போதிலும் பாதுகாப்பு குறித்து மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் சங்கம் அச்சம் வெளியிட்டது’’ என அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.

பாதுகாப்பு தொடர்பாக ஆராய்வதற்கு சென்ற பாதுகாப்பு நிபுணர்கள் சமர்ப்பித்த சாதகமான அறிக்கைகளைத் தொடர்ந்து உலக பதினொருவர் அணி லாகூருக்கு கடந்த செப்டெம்பர் மாதம் விஜயம் செய்து 3 சர்வதேச இருபது போட்டிகளில் விளையாடியிருந்தது.

அதன் பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும் கிட்டத்தட்ட பலம் குன்றிய அணி ஒன்றை ஒற்றை சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் விளையாட லாகூருக்கு கடந்த 29ஆம் திகதி அனுப்பியிருந்தது.

ஆனால் இந்த இரண்டு கிரிக்கெட் விஜயங்களும் சில மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களைத் திருப்திப் படுத்தியதாகத் தெரியவில்லை என இன்னுமொரு வட்டாரம் தெரிவித்தது.

நியூஸிலாந்துக்கு மெற்கிந்தியத் தீவுகள் எதிர்வரும் 25ஆம் திகதி பயணிக்கவுள்ளமை மற்றும் லாகூரில் பனிமூட்டம் நிலவுகின்றமை என்பனவே இந்த விஜயம் பிற்போடப்படுவதற்கான காரணங்கள் என இன்னுமொரு வட்டாரம் தெரிவித்தது.

‘‘மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையினர் தங்களது முயற்சியிலிருந்து விலகாதததுடன் இந்த கிரிக்கெட் விஜயம் இடம்பெறும் எனவும் அவர் கள் அர்ப்பணிப்புடன் செயற்படு கின்றார்கள்’’ என அந்த வட்டாரம் குறிப்பிட்டது. 


Add new comment

Or log in with...