2018ஆம் ஆண்டில் அதிக போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கையின் மெய்வல்லுனர்கள் | தினகரன்

2018ஆம் ஆண்டில் அதிக போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கையின் மெய்வல்லுனர்கள்

2018ஆம் ஆண்டானது அதிக உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டித் தொடர்களை கொண்டிருப்பதால் இலங்கையின் சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சி வீர வீராங்கனைகளுக்கு தங்களது திறமைகளை வெளிக்காட்ட அதிக சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தரும் விதமாக அமையவுள்ளது.

இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டு வீரர்களுக்கான ஒன்றியம் அண்மையில் அடுத்த வருடத்திற்கான போட்டித் தொடர் அட்டவணையினை வெளியிட்டிருந்தது. இதனடிப்படையில் அடுத்த வருட ஆரம்பத்தில் 2018ஆம் ஆண்டின் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான தேர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி நடைபெறும் இத்தேர்வு முகாம் மூலம் மாத்திரமே இலங்கை வீர, வீராங்கனைகள் பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்க முடியும் என்பதோடு, வீரர்களை தெரிவு செய்யும் இறுதி வாய்ப்பாகவும் இந்த முகாம் அமையவுள்ளது. அதோடு இதில் இலங்கையின் தேசிய ஒலிம்பிக் சம்மேளனமும் 13 வீர வீராங்கனைகளுக்குரிய இடத்தினையே (7 ஆண்கள், 6 பெண்கள்) வழங்கவிருப்பதனால் பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சி வீர வீராங்கனைகள் இடையில் மிகவும் போட்டித்தன்மை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுநலவாய போட்டிகளில் தேர்வு செய்யப்படும் தடகள வீர, வீராங்கனைகளே இந்தோனோசியாவில் அடுத்த வருட ஒகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கருத்திற் கொள்ளப்படுவர்.

இலங்கையின் கனிஷ்ட தடகள வீர, வீராங்கனைகளும் அடுத்த வருடத்தில் பல சர்வேதச தொடர்களில் பங்கேற்கவுள்ளனர். இது இளம் வீர, வீராங்கனைகளும் அவர்களது பயிற்றுவிப்பாளர்களும் அடுத்த வருடத்தில் அதிக வேலைச்சுமை கொண்டவர்களாக மாறுவர் என்பதனை உறுதி செய்கின்றது.

இலங்கையின் தடகள வீரர்களுக்கான சம்மேளம் அடுத்த வருடத்தின் மே மாதம் சுகததாஸ மைதானத்தில் தெற்காசிய கனிஷ்ட வீரர்களுக்கான சம்பியன்ஷிப் விளையாட்டுத் தொடரினை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. அடுத்த வருடத்திற்கான இப்போட்டிகள் உயர்தரமான (Class A) சுவட்டில் நடைபெறும். ஏனெனில், சீர்குலைந்து காணப்படும் சுகததாஸ அரங்கின் சுவட்டு நிகழ்ச்சிகளுக்கான பகுதியும், மைதான நிகழ்ச்சிகளுக்கான பகுதிகளும் புணர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றன.

அடுத்த வருட பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தெற்காசிய கனிஷ்ட வீரர்களுக்கான விளையாட்டுத் தொடர் அடுத்த வருட ஜூன் மாதத்தில் ஜப்பானின் கிபு நகரில் ஆரம்பமாகும் ஆசிய இளையோர் விளையாட்டுத் தொடருக்கான இலங்கையின் வீர வீராங்கனைகளை தெரிவு செய்வதிலும், ஆர்ஜென்டீனாவில் அடுத்த வருட ஒக்டோபரில் மூன்றாவது தடவையாக நடைபெறும் கோடைகால இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான வீர வீராங்கனைகளை தெரிவு செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் பல அடுத்த வருடத்தில் நடைபெறவிருப்பதனால் சுகததாஸ மைதானத்தின் சீரமைப்பு பணிகள் குறிப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு, இலங்கையின் தடகள வீரர்களுக்கு போதிய பயிற்சிகள் செய்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் சர்வதேச மட்டத்தில் சாதிப்பார்கள் என நம்பிக்கை கொள்கின்றோம்.


Add new comment

Or log in with...