அரசியல் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக அரச மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரி அனந்தன் | தினகரன்

அரசியல் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக அரச மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரி அனந்தன்

 தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான குமரி அனந்தன், பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாரதமாதா கோயில் அமைக்க வலியுறுத்தி சென்னையிலிருந்து பாப்பாரப்பட்டிக்கு கடந்த அக்டோபர் 2-ம் திகதி குமரி அனந்தன் நடைபயணத்தை தொடங்கினார். நடைபயணத்தின் இறுதியில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற அவரை கைது செய்த பொலிஸார், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வந்து விட்டனர்.

அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்த அவர், பல்வேறு தலைவர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டார். இதன்பிறகு தொடர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 4-ம் திகதி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன், 4 முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை எம்பியாகவும் இருந்தவர். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தவர். இவரது மகளும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவர். மருமகன் சௌந்தரராஜன் பிரபல சிறுநீரகவியல் மருத்துவர். பேரன், பேத்தியும் மருத்துவர்களாக உள்ளனர். அதேபோல் பிரபல வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான வசந்த் அன்ட் கோ நிறுவனத்தின் தலைவரும், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவுமான எச்.வசந்தகுமார் இவரது சகோதரர் ஆவார்.

இத்தகைய பின்புலம் கொண்ட அவரால், மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். ஆனால் எளிமையான வாழ்க்கையையே விரும்பும் குமரி அனந்தன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், குமரி அனந்தன் போன்ற பிரபலங்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அரிய நிகழ்வாக பேசப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் பல ஆண்டுகளாகவே தனது உடல்நலம் தொடர்பான விஷயங்களுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையை நாடி வருகிறார். அதேபோல் குமரி அனந்தனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பற்றி ‘தி இந்து’விடம் குமரி அனந்தன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மிகத் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், என்னைப் போன்ற அரசியல்வாதிகள் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றால்தான், சாதாரண மக்களுக்கும் அரசு மருத்துவமனை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். என்னைப் பொருத்தமட்டில் நான் ஆடம்பரத்தை விரும்புவதில்லை. எனக்கென்று சொந்த வீடு கிடையாது. ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில்தான் வசிக்கிறேன். முன்னாள் எம்பி, முன்னாள் எம்எல்ஏ என்ற முறையில் கிடைக்கும் ஓய்வூதியத்தை வைத்து எனக்கான தேவைகளைப் பார்த்துக் கொள்கிறேன். மகள், மருமகன் போன்றோர் மருத்துவர்களாக இருந்தாலும் அவர்களுக்கென ஏராளமான பணிகள் உள்ளன. எனவே அவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

இவ்வாறு குமரி அனந்தன் கூறினார்.


Add new comment

Or log in with...