சிறுபான்மை சமுகங்களின் மனங்களை ஈர்த்த பட்ஜட் | தினகரன்

சிறுபான்மை சமுகங்களின் மனங்களை ஈர்த்த பட்ஜட்

நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்திருக்கும் தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சாதாரண மக்களிடம் சபாஷ் வாங்கியிருப்பதாகவே பரவலாக பேசப்படுகிறது. வறுமைக்கோடடில் வாழுகின்ற மக்கள் குறித்து அவர் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார். நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் மக்கள் மனங்களை வென்றதொரு வரவு செலவுத்திட்டமாக இதனைக் கருதமுடிகிறது. அது மட்டுமன்றி வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மை மக்கள் குறித்து சற்று அதிகமாகவே கவனம் செலுத்தப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. பல கோணங்களிலும் எதிர்கால இலக்குகளை அடிப்படையாகக் கொண்டதாக இந்த வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தை நோக்கும், ஆய்வுக்குட்படுத்தும் எவரும் கண்களை மூடிக்கொண்டு அரசியல் நோக்கங்களை வைத்துக்கொண்டு விமர்சிக்காமல் ஆழமாகப் பார்க்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தையும், மக்களின் எதிர்பார்ப்புகளையும் மனதிலிருத்திக் கொண்டே நிதியமைச்சர் இதனை தயாரித்திருக்கிறார். மேல் மட்டத்தினரைத் திருப்திப்படுத்துவதை விடுத்து இலக்கு நோக்கிய பயணத்துக்கான காத்திரமானதொரு பட்ஜட்படாக இது அமைந்திருக்கின்றது.

“பசுமை மற்றும் நீல வரவு செலவுத் திட்டம், என்ரர் பிரைஸஸ் ஸ்ரீலங்கா” என்று நிதியமைச்சர் மகுடமிட்டிருப்பினும் கூட நாட்டு மக்கள் பார்வையில் இதுவொரு சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை உள்வாங்கிய பட்ஜட்டாகவே நோக்கமுடிகிறது. மக்களின் முகச்சுளிப்புக்கு இடமின்றி ஓரளவுக்கேனும் மன ஆறுதல் கொள்ளக்கூடிய விதத்தில் ஒவ்வொரு விடயத்தையும் கவனத்துக்கு எடுத்து மத்தியஸ்த நிலையிலிருந்து பட்ஜட் தயாரிக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது. உடனடியான நின்று அவசரத்துக்கான பட்ஜட்டாக இல்லாமல் தூரநோக்குடன் கூடியதான 2020 ஆம் ஆண்டை இலக்கு வைத்து தனது மூளையைப் பயன்பத்தியிருக்கிறார் நிதியமைச்சர்.

கடந்த சுமார் பத்து ஆண்டுகளுக்கிடையில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜட்டுகளி்ல் சிறுபான்மைச் சமூகங்கள் விடயத்தில் கண்துடைப்பான போக்குகளே கையாளப்பட்டு வந்துள்ளன. நிவாரணம் என்ற பெயரில் சில சில்லறைகளை வீசிவிடும் தன்மையே காணப்பட்டன. ஆனால் இம்முறை வடக்கு கிழக்கிற்கு கூடுதலான நிதியொதுக்கப்பட்டிருப்பதோடு மலையக தோட்டத் தொழிலாளருக்கான லயன் வீடுகளுக்குப் பதிலாக அவர்களுக்கான நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொடுக்கவும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதுவொரு ஆரோக்கியமான போக்காகும்.

அது மாத்திரமன்றி 30 வருடகால யுத்தத்தின் போது வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அல்லது வெளியேறிய முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நோக்குகின்ற போது இதனை சிறுபான்மைச் சமூக நலன்சார் வரவு செலவுத் திட்டமாகக் கூட கொள்ள முடிகிறது.

ஒரே பார்வையில் நோக்கும்பேது சிறுபான்மை மக்கள் திருப்தி கொள்ளும் வகையில் முன்மொழிவுகள் அமைந்திருக்கின்றன. முஸ்லிம் அரசியல் தலைமைகள் கருத்து வெளியிடுகின்ற போது சிறுபான்மைச் சமூகங்களுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்கள் பட்ஜட்டில் உள்வாங்கப்பட்டிருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும் சிலருக்கு பட்ஜட் குறித்து ஜீரணிக்க முடியாத நிலையும் காணப்படவே செய்கிறது.

வடக்கு கிழக்கு மீள் குடியேற்றத்துக்கு மூவாயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருக்கும் அதேவேளை முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக புறம்பாக 2.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி வடக்கு கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 750 மில்லியன் ரூபாவை நிதியமைச்சர் தனியாக ஒதுக்கியுள்ளார்.

30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை மீளக்கட்டியெழுப்புவதில் நல்லாட்சி அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில் அங்கு நவீனபொருளாதார மத்திய நிலையமொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவையும் அறிவித்துள்ளார். யதார்த்தபூர்வமாக சிந்தித்துப் பார்க்கின்ற போது கனதியான பெறுமானங்களைக் கொண்ட வரவு செலவுத் திட்டமாக இது அமைந்திருக்கின்ற போதிலும் சில நீலக் கண்களுக்கும். சிவப்புக் கண்களுக்கும் மங்களவின் பட்ஜட் மங்கலாகவே தென்படுகின்றது.

பக்கத்துக்குப் பக்கம் அபிவிருத்தி குறித்தும் பொருளாதார முன்னேற்றத் திட்டங்கள் தொடர்பாகவும் சுமார் இரண்டரை மணி நேரமாகப் பேசிய எதுவும் ஒன்றிணைந்த எதிரணியினர் செவிகளில் ஏறாமலிருந்தமை வியப்புக்குரியதொன்றாகும். மறுபுறம் சொல்வதானால் அவர்களது காதுகளில் அவை ஏறப்போவதில்லை. அது அவர்களுக்கு அவை நாராசமாகவே கேட்கும்.

எது எவ்வாறாக இருந்த போதிலும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து விட்டார். இதில் நன்மை பயக்கும் விடயங்கள் நிறையவே காணப்படுகின்ற போதிலும் சில முன்மொழிவுகள் திருப்திதரக்கூடியதாக அமையாதிருக்கலாம். சில பொது முன்மொழிவுகளில் சற்றுக் கடுமையான போக்கு கடைப்பிடிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அவை குறித்து பட்ஜட் விவாதத்தின் போது கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்துவது அவசியமானதாகும். முன்னரெல்லாம் பட்ஜட் விவாதங்களின் போது சிறுபான்மைப் பிரதிநிதிகள் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி தீர்வு தேடிக்கொண்டதை ஹன்சார்ட்களை பார்த்தால் அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் கடந்த ஒரு சில வருடங்களாக சிறுபான்மை உறுப்பினர்கள் குறிப்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜட் விவாதங்களில் மௌனிகளாக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியாக வேண்டியுள்ளது. இம்முறை அவ்வாறு நடந்துகொள்ளாமல் சிறுபான்மை முஸ்லிம்களின் கல்வி, சுகாதாரம், மௌலவி ஆசிரியர் நியமனம், முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு நிதியொதுக்கீட்டு விவாதங்களில் முழு அளவில் பங்கேற்று உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள கவனம் செலுத்த வேண்டும். என்பதை ஒரு அறிவுறுத்தலாக அவர்களது காதுகளில் போட்டுவைக்கின்றோம்.


Add new comment

Or log in with...