சவூதி முற்றுகை: மிகப்பெரிய பஞ்சத்தை நெருங்கும் யெமன் | தினகரன்

சவூதி முற்றுகை: மிகப்பெரிய பஞ்சத்தை நெருங்கும் யெமன்

பாதுகாப்புச் சபையில் முறையீடு

உதவி விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படாவிட்டால் கடந்த பல தசாப்தங்களில் இடம்பெறும் உலகின் மிகப்பெரிய பஞ்சத்தை யெமன் எதிர்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

மோதல் நீடிக்கும் யெமன் மீதான சவூதி கூட்டுப்படையின் முற்றுகையை தளர்த்தும்படி மனிதநேய விவகாரங்களுக்கான ஐ.நா செயலாளர் நாயகம் மார்க் லோவ்கொக் வலியுறுத்தியுள்ளார்.

சவூதி தலைநகர் ரியாத் மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீசியதை அடுத்து யெமனின் வான், தரை மற்றும் கடல் மார்க்கங்களை கூட்டுப் படை கடந்த திங்கட்கிழமை மூடியது. அந்த ஏவுகணை சவூதி தலைநகருக்கு அருகில் இடைமறித்து அழிக்கப்பட்டது.

கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் விநியோகிப்பதை தடுக்க இந்த முற்றுகை அவசியமென சவூதி அரேபியா கூறியுள்ளது.

கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவதான குற்றச்சாட்டை ஈரான் மறுத்து வருகிறது. சவூதி தலைமையிலான கூட்டுப்படை 2015 தொடக்கம் யெமனில் சண்டையிட்டு வருகிறது. இந்த விடயம் குறித்து கடந்த புதன்கிழமை பாதுகாப்பு சபையிடம் மூடிய அறையில் விளக்கம் அளித்த லோவ்கொக், அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

“முற்றுகை அகற்றப்படாத நிலையில் யெமனில் பஞ்சம் ஒன்று ஏற்படும் என்பதை பாதுகாப்பு சபையிடம் நான் கூறினேன்” என்று லொவ்கொக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“பல மில்லியன் பேர் பாதிக்கும் பல தசாப்தங்களில் மிகப்பெரிய பஞ்சமாக அது இருக்கும்” என்று அவர் கூறினார்.

மில்லியன் கணக்கான மக்களின் உயிர்காக்கும் நிவாரண உதவிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது ஒரு ‘பேரழிவு’ சூழலை ஏற்படுத்தி இருப்பதாக ஐ.நா மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஏற்கனவே எச்சரித்தது.

900,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கும் கொலரா நோயை எதிர்த்து போராடுவதற்கு முக்கியமான மருந்துகளை கொண்ட கப்பல் யெமனை அடைவது தடுக்கப்பட்டிருப்பதாக செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டிருந்தது.

ஏழு மில்லியன் யெமன் மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

யெமன் தற்போது மக்கள் உயிர்வாழ தேவைப்படும் அனைத்திற்கும் இறக்குமதியை நம்பியுள்ளது. ஆனால் தற்போதைய முற்றுகையால் உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவம் என எதனையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யெமன் யுத்தத்தில் கொல்லப்பட்ட 8,670 க்கும் அதிகமானோரில் 60 வீதமானவர்கள் பொதுமக்களாவர். சவூதி தலைமையிலான கூட்டுப்படை 2015 மார்ச் மாதம் யெமன் சிவில் யுத்தத்தில் தலையிட்டது தொடக்கம் வான் தாக்குதல்கள் மற்றும் தரைவழி மோதல்களில் மேலும் 49,960 பேர் காயமடைந்திருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...