2020ஐ நோக்கிய வரவு செலவுத் திட்டம் | தினகரன்

2020ஐ நோக்கிய வரவு செலவுத் திட்டம்

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவதும் மங்கள சமரவீர நிதியமைச்சரின் முதலாவதுமான வரவு செலவுத் திட்டம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமரப்பிக்கப்பட்டது. இம்முறை வரவு செலவுத் திட்டம் எந்த விதத்திலும் நாட்டு மக்களை பாதிப்பதாக அமையமாட்டாது என ஏலவே நிதியமைச்சர் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிட்டுக் காட்டக்கூடியதொன்றாகும்.

முன்னொருபோதுமில்லாத வகையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முந்திய நாளான நேற்று முன்தினம் புதன்கிழமை நிதியமைச்சர் மங்கள் சமரவீர சில அதிரடி முடிவுகளை அறிவித்திருந்தார். இதன் பிரகாரம் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணப் பொதியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்.

நெத்தலி, உருளைகிழங்கு, பருப்பு, கருவாடு, தேங்காய் எண்ணெய், மரக்கறி எண்ணைய் உட்பட மேலும் பல அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியை குறைத்து நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க நிதியமைச்சர் துரித நடவடிக்கை எடுத்திருக்கிறார். இந்த விலைக்குறைப்பானது புதன்கிழம நள்ளிரவு முதலே அமுலுக்கு வந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இம்முறை வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பெருத்த எதிர்பார்ப்புகளை மக்கள் கொண்டிருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்புகள் வீண்போகவில்லை. மக்கள் பக்கம் சார்ந்து நின்று ஓரளவுக்கேனும் சந்தோஷப்படக்கூடிய அளவுக்கு கடினப் போக்கெதனையும் கடைப்பிடிக்காமல் ஒரு இலகு முறையிலான மக்களால் வரவேற்கப்படக்கூடியதான பட்ஜட்டை நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்திருக்கிறார். நாட்டின் எதிர்கால அபிவிருத்தி, பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற முக்கிய விடயங்களிலும் நிதியமைச்சர் கவனம் செலுத்தி இருப்பதை அவதானிக்க முடிகிறது.

உலகில் எந்தவொரு நாட்டிலும் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் காலப் பகுதியில் முன்கூட்டியே பொருட்களின் விலைக்குறைப்புகள் இடம்பெற்றதே கிடையாது. சந்தைப் பொருளாதாரத்தில் சவால்கள நிறையவே காணப்படுவதால் அப்படியானதொரு நெருக்கடிமிக்கதானதொரு சந்தர்ப்பத்தில் நிதியமைச்சரின் முன்மாதிரியானது எந்தச் சவாலுக்கும் முகம் கொடுக்கத்தயார் என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பது புதிய சவால்கள் பலவற்றுக்கு மத்தியிலாகும். இதில் முதன்மையானது இலங்கை பெருந்தொகை கடனை, அடுத்த இரண்டு வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதாகும். மறுபுறம் எமது நாட்டின் விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதி முழுமையாக செயலிழந்துபோயுள்ளமையும் மற்றொரு சவாலாகும்.

நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு, அபிவிருத்தி இரண்டும் மிக பிரதானமானவையாகும். பொருளாதாரம், அபிவிருத்தி இரண்டுக்குமான இலக்கு சரியாக அமையவேண்டியது மிக முக்கியமானதாகும். அந்த இலக்கு நோக்கிய பயணத்தினூடாகவே நாட்டை மேம்படுத்த முடியும்.

அந்த அடிப்படையில் 2020 ஆம் ஆண்டை நோக்கிய பொருளாதார, அபிவிருத்திப் பயணம் குறித்த வேலைத் திட்டம் காத்திரமாக அமைய வேண்டும். அதன்படி 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பின்னணியை கவனத்தில் கொள்ளும்போது அதன் பொருளாதாரப் பின்னணியை எடுத்துக்கொண்டால் இலங்கை சர்வதேசத்துக்கு மிகப் பெரியதொரு கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டியுள்ளது.

இதனை நிதியமைச்சர் நேற்று வர்ணித்தபோது மீதொட்டமுல்ல குப்பைமேட்டை விடவும் உயர்ந்தது எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்தக் கடன் சுமையை முகாமைத்துவப்படுத்தக்கூடிய விதத்தில் நிதியை பயன்படுத்த வேண்டியுள்ளது. அப்படிச் செய்யத்தவறினால் நாட்டின் தேசிய பொருளாதாரம் முழுமையாக இடிந்துவிழக்கூடிய நிலைமையே ஏற்படலாம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இந்த வரவு செலவுத் திட்டத்தில் மக்கள வரப்பிரசாதங்களை எதிர்பார்க்கின்றனர். மக்களின் அந்த எதிர்பார்ப்புகள் வீண்போகாத வகையில் காத்திரமான விலைச்சூத்திரங்களைப் பயன்படுத்தி இந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருக்கிறார். வறுமைக்கோட்டில் வாழும் மக்களையும் கவனத்தில் எடுத்து அந்த மக்களால் ஓரளவேறும் திருப்தி கொள்ளக்கூடிய வகையில் வரவு செலவுத் திட்டகணக்கு விபரங்களை நிதியமைச்சர் சமர்ப்பித்திருக்கிறார் எனக்கொள்ள முடியும்.

இதேவேளை இன்னொரு முக்கிய விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டியுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலும் நிவாரணமாக பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கி இருக்கிறார். இந்த நிதியொதுக்கீடு என்பது மேலதிகச் செலவாகவே கருதவேண்டியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருக்கும் நிலையில் உடனடியாக அமுலுக்கு வந்துள்ள நிலையில் வர்த்தகர்கள் அதற்கமைய விலைக்குறைப்புச் செய்து பாவனையாளர்களுக்கு வழங்குமாறு நிதியமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

2018ஆம் ஆண்டில் 1.9 ட்ரில்லியன் ரூபாவை கடன் தொகையாக திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையிலும் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சாதாரண மக்களுக்கான வரிச் சலுகை கூடுதலாக வழங்கப்பட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டம் 100 வீதம் நிறைவு பெற்றதாகக் கொள்ளமுடியாது போனாலும் சாதாரண பொது மக்களுக்கான நியாயமான நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் வரவு செலவுத் திட்டமாகக் கொள்ளமுடியும் என்பதை உறுதிபடத் தெரிவிக்கமுடியும்.

சில விடயங்களில் இறுக்கமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றபோதிலும் சாதாரண மக்கள் பக்கம் சார்ந்ததொரு பட்ஜட்டாக இதனை நோக்க முடியும் வசதி படைத்தவர்கள் மீது பாரிய சுமைகள் எதுவும் சுமத்தப்படவில்லை என்பதையும் கவனத்தில்கொள்ள முடிகிறது.


Add new comment

Or log in with...