எரிபொருள் தட்டுப்பாடு எவ்வாறு தோற்றம் பெற்றது | தினகரன்

எரிபொருள் தட்டுப்பாடு எவ்வாறு தோற்றம் பெற்றது

நாட்டிலுள்ள அநேக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசையில் மக்களும் வாகன ங்களும் காத்திருந்ததை கடந்த சில தினங்களாக காணக்கூடியதாக இருந்தது. பொலிஸ் பாதுகாப்பும் சில இடங்களில் போடப்பட்டிருந்தது. சில இடங்களில் பெற்றோல் இல்லை என அட்டைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் நிச்சமாக எரிபொருள் தொடர்பான பிரச்சினை உள்ளது என்பதாகும். முதலில் தரங்குறைவான எண்ணெயைக் கொண்டுவந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது என்ற செய்தியே வெளியாது.

அதைத் தொடர்ந்து எரிபொருள் தட்டுப்பாடு குறித்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. சிறிய சம்பவம் நடந்தாலே களேபரம் அடைவது எமது மக்களின் இயல்பு. சம்பவங்களையும் விடயங்களையும் ஆராயாது முடிவு எடுப்பது எமது மக்களின் ஒரு பழக்கமாகும். அன்று இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. இணையதளங்கள், வதந்திகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக எரிபொருள் தட்டுப்பாடு என்ற செய்தி நாடெங்கும் பகிரப்பட்டது. அதனால் மக்கள் முண்டியடித்துக்கொண்டு எரிபொருளை வாங்கத் தொடங்கினார்கள்.

அத்துடன் சேமிக்கவும் முற்பட்டார்கள். வழமைபோல் மக்கள் எரிபொருளை நிரப்பி இருந்தால் இவ்வாறான இக்கட்டான நிலைமையை தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் ஒரு கப்பல் சென்றால் இன்னொரு கப்பல் வரும். மேலும் எண்ணெய் குதங்களிலும் எரிபொருள் இருந்திருக்கும்.

எவ்வாறான நிலைமையிலும் பிரச்சினை உள்ளதை நாம் மறுக்க இயலாது. அமைச்சர்களின் கூற்றுக்களில் ஒரு விடயமும், அதிகாரிகளின் கூற்றில் வேறொருவிடயமும் வெளிப்பட தொழிற்சங்கங்கள் வேறொரு விடயம் குறித்துப் பேசுகின்றன. சிலர் பிரச்சினை எதுவுமில்லை என்றும் கூற முற்படுகின்றார்கள். ஒரு சிலர் அரசியல் இலாபத்துக்கு வழி தேட முனைகினறார்கள். ஆனால் இந்த விநாடிவரை தெளிவான தீர்வொன்றும் கிட்டவில்லை. அதன்படி பாவனையாளர்கள் குழப்பம் அடைவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

எரிபொருள் இல்லாமல் போக்குவரத்து செய்ய முடியாது. போக்குவரத்து நின்றுவிட்டால் நாடே ஸதம்பித்துவிடும். சிறிய அனுமானத்தை மேற்கொண்டால் களஞ்சியங்களில் போதுமான அளவு எரிபொருள் இருந்தால், எண்ணெய் சுத்திகரிப்பு சரிவர நடைபெறுமானால் ஒரு கப்பல் திரும்பி சென்றால் மாத்திரம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட காரணமாக அமையாது. எண்ணெய் விநியோகம் தொடர்பான அடுத்த முக்கிய துறை எரிபொருள் விநியோகமாகும். அதுவும் சீராக நடைபெற்றால் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிட்டும்.

தரங்குறைந்த எண்ணெணையை திருப்பி அனுப்பியது குறித்து எவ்வித விவாதமும் இல்லை. தரங் குறைந்த எண்ணெணையை வாகனங்களுக்கு பாவித்திருந்தால் இதைவிட பாரிய பிரச்சினை ஏற்பட்மிருக்கும். இதற்கு முன்னரும் தரங் குறைந்த எரிபொருளை விநியோகித்ததாக எரிபொருள் கூட்டுத்தாபனம், இந்திய எண்ணெய் நிறுவனம் என்பவற்றின் மீது குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஏற்கனவே ஒரு தடவை அவ்வாறான எண்ணெய் விநியோகம். காரணமாக வாகனங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

எரிபொருள் என்பது அதிக கேள்வியுள்ள அத்தியாவசியப் பொருள் என்பதால் அதனூடாக நடைபெறும் மோசடி வர்த்தக நடவடிக்கைகளும் அதிகமாகும். ஆகவே நிறுவனமானது இவற்றிற்கெல்லாம் அகப்படாமல் சிறந்த சேவையை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

தவறு எங்கே என்றால் எண்ணெய் விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட வழி ஏற்படுத்தியதேயாகும். எரிபொருள் தொடர்பான பீதி ஏற்படுவதற்கு முன்னர் மக்களைத் தெளிவுபடுத்தியிருக்கலாம். மேலும் எரிபொருள் விநியோகத்தை சிறப்பாக மேற்கொண்டிருக்கலாம்.

அதிகாரிகள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏனைய தொழில்களும் பாதிப்பு அடையும். பொது போக்குவரத்தும் பாதிக்கப்படும். விசேடமாக முச்சக்கரவண்டிகளின் போக்குவரத்தும் பெருமளவு பாதிக்கப்படும். அதனை நம்பி வாழும் இலட்சக்கணக்கானோரும் பாதிப்படைவார்கள். இப் பிரச்சினையின் போது முச்சக்கரவண்டி சாரதிகள் அதிகளவு அரசை விமர்சனம் செய்தார்கள். அது குறித்து அவர்களைக் குறைகூற முடியாது.

தரங்குறைவான எரிபொருள் தொடர்பாக நீண்ட காலமாகவே பிரச்சினை உள்ளது. ஆனால் அதற்கு சரியான தீர்வு என்றும் எட்டப்படவில்லை. இதனால் சிரமத்துக்குள்ளாவது பொதுமக்களே. நாட்டிற்கு அவசியமான எண்ணெய் விநியோகம் இரண்டு துறை மூலம போட்டி ரீதியாக நடைபெறுகின்றது.

ஒன்று எண்ணெய் கூட்டுத்தாபனம், மற்றையது இந்திய எண்ணெய் நிறுவனம், இந்திய நிறுவனத்துக்கு தான் விரும்பிய வகையில் செயல்பட முடியாது. அந்நிறுவனம் ஒப்பந்தங்களுக்கு உட்பட்டே எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட வேண்டும். எங்கேயோ தவறு நடந்துள்ளது. அத்தவறை கண்டு பிடிப்பது மிக முக்கிய விடயமாகும். 


Add new comment

Or log in with...