போதை அரக்கனிடமிருந்து இளையோரை பாதுகாப்பதில் விஷேட கவனம் | தினகரன்

போதை அரக்கனிடமிருந்து இளையோரை பாதுகாப்பதில் விஷேட கவனம்

உலக மயமாக்கலின் மூலம் மனித சமூதாயம் நன்மைகளைப் பெற்றுள்ளது போன்று பல்வேறு தீமைகளையும் அடைந்திருக்கின்றது. இது தொடர்பில் உலகலாவிய ரீதியில் கலந்துரையாடல்களும், கருத்து பரிமாறல்களும் இடம்பெறவே செய்கின்றன.

இந்த உலக மயமாக்கலின் விளைவாக சமூக, கலாசார கட்டுக்கோப்புகள் ஒன்றில் செயலிழந்துள்ளன அல்லது தகர்ந்துள்ளன. வெளிநாட்டு சமூக, கலாசார பழக்க வழக்கங்களும், நடத்தை கோளங்களும் எல்லா சமூகங்களிலும் ஊடுருவி பரவியுள்ளன. அவற்றின் விளைவான தாக்கங்களுக்கும், பாதிப்புகளுக்கும் எல்லா முகம் கொடுத்துள்ளன. இதன் காரணத்தினால் புதிய புதிய பிரச்சினைகள் தோற்றம் பெற்று,அவை சமூக கலாசார சீரழிவுகளுக்கும் வழிவகுத்திருக்கின்றன.

அத்தோடு நடத்தை மற்றும் உணவு பழக்கவழக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் இந்த மாற்றங்களும், தாக்கங்களும் மாற்றங்களும் உடல், உள ஆரோக்கியத்திற்கு உகப்பானவை அல்ல. அவை கெடுதல்களை ஏற்படுத்தக் கூடியவை. இவை மிகத் தெளிவான உண்மை. என்றாலும் அப்பாதிப்புகளும் தாக்கங்களும் உடனடியாக வெளிப்படுபவை அல்ல. அதற்கு சிறிது காலம் எடுக்கும். அதனால் இப்பழக்கவழக்கத்தின் விளைவுகள் குறித்து பெரும்பாலானவர்கள் அசிரத்தையாக நடந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் இளம் பராயத்தினர் மனக்கிளர்ச்சி நிலையில் இருப்பதை பெரிதும் விரும்புகின்றனர். இது இலங்கைக்கு புதிதாக வந்து சேர்ந்திருக்கும் ஒரு பழக்கமே அன்றி வேறில்லை. அது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு பழக்கமாகும்.

இந்த நிலைமையை அடைந்து கொள்ளும் நோக்கில் கடந்த காலங்களில் மதுசாரம், போதைப் பொருட்கள் போன்றன தான் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது இப்போதைப் பொருட்களுக்கு அப்பால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் கூட போதை நிலையை அடைந்து கொள்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் சட்ட விரோதமான முறையில் பயன்படுத்தப்படுகின்றது. எந்தவொரு மருந்துப் பொருளையும் மருத்துவரின் சிபார்சுகளுக்கு முரணாக பயன்படுத்தும் போது பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும்.அவற்றில் சில மருந்து பொருட்கள் இப்போதைநிலையை வழங்கக் கூடியனவாக உள்ளன.

குறிப்பாக கடும் நோய்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக மருத்துவ நிபுணர்களின் சிபார்சுகளுக்கு அமைய பயன்படுத்தப்படும் சில மாத்திரைகளை மருத்துவ சிபாரிசுகளுக்கு முரணாகப் பாவிக்கும் போது போதை நிலை ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் வெளியாகியுள்ளன.

இவ்வாறான மாத்திரைகள் சட்ட விரோமான முறையில் சில பாடசாலைகளுக்கு அருகில் மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்த போது கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இம்மாத்திரைகளை மருத்துவர்களின் சிபார்சுகளுக்கு முரணாகப் பாவிக்கும் போது ஏற்படும் உடல், உள பாதிப்புகள் மிகவும் பாரதூரமானவை.

பொதுவாக ஒரு மனிதன் போதை நிலையை அடைவதென்பது அவனது உடல் இயக்கம் கட்டுப்பாட்டு நிலையை இழக்கப்பதன் வெளிப்பாடாகும். அதாவது, மனிதனின் முழு உடல் இயக்கமும் மூளையிலுள்ள மூளியின் ஊடாகவே கட்டுப்படுத்தப்படுகிறது. உளக் கிளர்ச்சி நிலையை அடைந்து கொள்ளும் நோக்கில் பயன்படுத்தப்படும் பொருட்களால் இந்த மூளியின் செயற்பாடுகளில் நெருக்கடிகள் ஏற்படுகின்றன.அப்பொருட்களை தொடர்நதும் பாவிக்கும் போது அதன் சீரான செயற்பாடுகள் தொடர்நதும் பாதிப்படைந்து மூளிக்கும் உடல் இயக்கத்துக்கும் இடையிலான தொடர்பாடல் சீரற்றுப் போய்விடும். இதன் விளைவாக ஏற்படும் பாதிப்புப்புக்களும் மிகவும் பாராதூரமானவை.ஆனாலும் அவை குறித்து பெரிதாகக் கவனம் செலுத்தப்படாதுள்ளன.

இவை கொள்ளை இலாபம் அளிக்கும் வியாபாரமாக விளங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் காரணத்தினால் தான் இவ்வாறான மாத்திரைகள் சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்டு இளம் பராயத்தினரையும் மாணவர்களையும் இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால் இவை மாணவர்கள் மற்றும் இளம் பராயத்தினர் மத்தியில் மிக மோசமான சீரழிவுகளை ஏற்படுத்தக் கூடியவை. இவற்றினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பெருந்தொகையான பணத்தைச் செலவிடவும் நேரிடும்.

இவ்வாறான நிலையில், இச்சீரழிவிலிருந்தும், பாதிப்பிலிருதும் இளம் பராயத்தினரையும், மாணவர்களையும் மீட்டெடுப்பதில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் சட்டம், ஒழுங்கு மற்றும் தென் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்காவின் தலைமையில் உயர் மட்டக் கலந்துரையாடலொன்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன்போது சில அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.

அந்தடிப்படையில் போதைப்பொருட்களை மாத்திரமல்லாமல் இந்நாட்டில் அங்கீகாரம் பெற்றுள்ள மாத்திரைக​ைள சட்ட விரோதமான முறையில் கொண்டு வருவதையும், அவற்றை போதை மாத்திரைகளாக விற்பனை செய்வதையும், பாவிப்பதையும் கட்டுப்படுத்தும் நோக்கில் சட்டங்கள் கடுமையாக்கப்பட உள்ளன. அத்தோடு மனக்கிளர்ச்சி பெறும் நோக்கில் இம்மருந்து பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவதையும், விற்பனை செய்வதையும், பாவிப்பதையும் கட்டுப்படுத்தவும் பரந்தடிப்படையிலான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளன.

ஆகவே நாட்டின் எதிர்காலப் பரம்பரையினரின் எதிர்கால நலன்களைக் கொண்டு முன்னெடுக்கபடவிருக்கும் இந்நடவடிக்கையை மக்கள் நலன்களில் அக்கரை கொண்டுள்ள சகலரும் வரவேற்றுள்ளனர். நாட்டு மக்கள் போதை அரக்கனில் இருந்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகும். 


Add new comment

Or log in with...