அநுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளை டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு | தினகரன்

அநுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளை டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

 

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா நேற்று (06) பிற்பகல் அநுராதபுரம் சிறைச்சாலைக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

தமது வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் தமது போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளையும் அவர் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் 'உங்களது கோரிக்கைகள் நிறைவேற உரிய நடவடிக்கைகள் எடுக்கின்றேன்' என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறித்த மூன்று அரசியல் கைதிகளுக்கும் உறுதியளித்துள்ளார். 

இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசியல் கைதிகள் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வட-கிழக்கிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தது.

குறித்த அழைப்பினை ஏற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும், வடமாகாணக் கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண  சபை  உறுப்பினர்களும் அரசியல் கைதிகள் தொடர்பாக வழங்கிய உறுதிமொழிகளின் அடிப்படையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதற்குக் கோர முடிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில், கடந்த சனிக்கிழமை (04) யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட மாணவர் பிரதிநிதிகளுடன் மாணவர்களுக்கு உறுதிமொழிகள் வழங்கிய அரசியல்வாதிகள், அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று மூன்று அரசியல் கைதிகளினதும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தற்காலிகமாக முடித்து வைத்தனர்.

எனினும், இந்தச் சந்திப்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செல்வநாயகம் ரவிசாந்)
 


Add new comment

Or log in with...