அம்பாறையில் 37 பெண்கள் தேர்தலில் குதிக்கத் தயார் | தினகரன்

அம்பாறையில் 37 பெண்கள் தேர்தலில் குதிக்கத் தயார்

 

 

எந்தக்கட்சியுடனும் இணையத்தயார்!

அம்பாறை வேள்வி அமைப்பின் தலைவி கலாநிதி அனுசியா சூளுரை!

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் நேரடியாக. போட்டியிடுவதற்கென 37 பெண்கள் தயார்நிலையில் உள்ளதாக வேள்வி அமைப்பு தெரிவித்துள்ளது.

வேள்வி அமைப்பின் சமகால அரசியல்நிலைப்பாடு தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) காரைதீவு பிஸ்மில்லா விடுதியில் செய்தியாளர் மாநாடொன்று நடாத்தப்பட்டது. அதில் தனது கருத்தை தெரிவித்த வேள்வி அமைப்பு அமைப்பின் தலைவி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார்.

நாம் கட்சிசார்பற்ற அமைப்பு எனவே எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்ட எந்தக்கட்சியுடனும் கூட்டுச்சேர்ந்து போட்டியிடுவோம். தவறினால் சுயேச்சையாக போட்டியிடுவோம். எம்மைச் சேர்க்கும் கட்சி நிச்சயம் வெற்றியடையும்.

இவ்வாறு அம்பாறை வேள்வி, பெண்களுக்கான சமய சமுக பண்பாடு பொருளாதார அபிவிருத்திக்கான மன்றம் அமைப்பின் தலைவி அனுசியா சேனாதிராஜா சூளுரைத்தார்.

மாநாட்டில் வேள்வி அமைப்பின் தலைவி கலாநிதி அனுசியா சேனாதிராஜா, ஆலோசகர் பி. ஸ்ரீகாந்த், உப தலைவி மொகைடீன் றிலீபா பேகம், பொருளாளர் ஏ.ஆர்.எம். சுபைர், நிறைவேற்று உறுப்பினர் எச்.எ. பிரேமாவதி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைத்தனர்.

அங்கு கலாநிதி அனுசியா மேலும் கூறுகையில், எமது வேள்வி அமைப்பானது 3,000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு இயங்கிவருகின்றது. 24 நிறைவேற்று உறுப்பினர்கள் உள்ளனர். சமூகத்திலுள்ள பிரச்சினைகளை தேவைகளை  பெண்கள்தான் அறிவார்கள்.

எனவே எமது பயிற்றப்பட்ட பெண் பிரதிநிதிகள் தேர்தலில் நின்று சேவை செய்யக் காத்திருக்கின்றனர்.

இன்று தேர்தலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை நாம் கவனமாகக் கையாளவேண்டும்.

எந்தக் கட்சி வேண்டுமானாலும் எம்முடன் தொடர்புகொண்டு எமது வலுவான பெண் வேட்பாளர்களை இணைத்துக் கொள்ளலாம். அது அவர்களுக்கு பலமாகும். வெற்றியும் நிச்சயமாகும்.

வெவ்வேறு தொகுதிகளில் வெவ்வேறு கட்சிகளுடன் நாம் இணைந்து போட்டியிடத் தயாராகவுள்ளோம். சமூகத்தில் இறங்கி சேவையாற்றும் உள்ளூர்ப் பெண்களே எம்மிடமிருக்கின்றனர்.

அது மட்டுமல்ல சிறந்த வலுவான வாக்கு வங்கி எம்மிடமுண்டு. நாம் உமது அமைப்பின் கோட்பாடுகளுக்கமைவாக சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அரசியல் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவோம் என்றார்.

பொருளாளர் சுபைர் கூறுகையில், சமுகத்தில் பெண்கள் பல விதங்களில் பாதிக்கப்பட்டவர்களாகவும் அதே வேளை பொறுப்புள்ளவர்களாகவும் உள்ளனர்.

பெண்கள் பாதுகாக்கப்படவேண்டும். கிராமத்திலுள்ளவர்களை நன்கு அறிந்தவர்கள் அவர்களே. அவர்களால் இலகுவாக வாக்குகளைப்பெற்று அபிவிருத்தியில் கூடுதல் பங்களிப்பைச் செய்யமுடியும்.

அதற்காக சில நிபந்தனைகளை நாம் விதித்து கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவோம்.

ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கும் நாம் எதிர்காலத்தில் மட்டக்களப்பு திருகோணமலை என்று எமது அரசியல் செயல்பாட்டை விஸ்தரிக்கவுள்ளோம்.

இப்போது காலம் முன்னேறிவிட்டது. பெண்கள் ஆண்களை விட சிந்திக்க தொடங்கிவிட்டார்கள். ஆண்களை நம்பி அவர்கள் வாழவில்லை.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண்ணிருப்பாள் எனக்கூறப்பட்டதுண்டு. ஆனால் இப்போது அது ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஆணிருப்பான் என மாறியுள்ளது.

எனவே அவர்கள் சொந்தக்காலில் நிற்கும் வகையில் அரசியலில் குதிக்கவுள்ளனர் என்றார்.

ஆலோசகர் பி. ஸ்ரீகாந் கருத்துரைக்கையில், பெண்கள் அரசியலுக்கு வர இந்த நல்லாட்சியில் 25 வீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதானது, அது எளிதாகப் பெறப்பட்டதொன்றல்ல.

பல அமைப்புகளினது போராட்டங்கள் அழுத்தங்களுடாக இது பெறப்பட்ட ஒன்று. அதில் வேள்விக்கும் கணிசமான பங்குண்டு என்பதை இங்கு உரிமையோடு தெரிவிக்கின்றேன்.

பெண் வேட்பாளர் 25 வீதம் நியமிக்கப் படவேண்டும் என்பதற்காக பண முதலைகளையோ அரசியல்வாதியின் உறவினரையோ இணைப்பது எமது நோக்கமல்ல. சமூகத்திற்கு சேவையாற்றக்கூடிய வலுவான பெண்களே நியமிக்கப்பட வேண்டும். இது விடயத்தில் நாம் மிகவும் கவனமாயிருப்போம். என்றார்.

உபதலைவர் றிலீபா கருத்துரைக்கையில், அம்பாறை மாவட்டத்தின் மூவின, நான்கு சமயப் பெண்களையும் இணைத்து சிறப்பாக இயங்கி வரும் வேள்வி அமைப்பு இம்முறை தேர்தலில் குதித்து பெண்ணுரிமையைக் காக்கும் . அதே வேளை பிரதேச அபிவிருத்தியையும் பெண்களின் வாழ்வாதாரத்தையும் முன்கொண்டு செல்லவிருக்கின்றனர் என்றார்.

பிரதிநிதி பிரேமாவதி கூறுகையில், உண்மையில் இந்த 25 வீதம் போதாது. இது 40 வீதமாகவேண்டும். இறக்குமதியாகும் பெண்களை விட கிராமத்துப் பெண்களையே நாம் சேவைக்காக பயிற்சி வழங்கி தயார்படுத்தியுள்ளோம். அவர்களுக்குத்தான் தெரியும் எமது கிராமத்தின் தேவையும் பெண்களின் தேவையும் என்றார்.

ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்புகையில் தங்கள் அமைப்பு மூலம் கட்சியொன்றின் சார்பில் போட்டியிடும் ஒருவர் பின்னர் கட்சிதாவினால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.

எமது உறுப்பினர்கள் வேள்வியின்பால் அதிக விசுவாசமானவர்கள். அதனையும் மீறினால் அவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்க நடவடிக்கைஎடுப்போம் என்று பதிலளித்தனர்.

தேர்தல் நெருங்குகின்றது தங்களிடம் தேர்தல் விஞ்ஞாபனம் ஏதுமுள்ளதா? என்று மற்றுமொரு ஊடகவியலாளர் கேட்டதற்கு தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடுவோம் எனவும் பதிலளித்தனர்.

கட்சிகள் எவ்வாறு உங்களோடு தொடர்பு கொள்வது? எனக்கேட்டதற்கு...

நாம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் செயலாளர்களுக்கு எமது நிலைப்பாடுபற்றி மடல் அனுப்பவுள்ளோம். அதன்பின்னர் அவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு உரிய வேட்பாளர்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.

எந்தவொரு கட்சியும் அழைக்கவில்லையெனில் நாம் சுயேட்சையாகப் போட்டியிடுவோம் என்றனர்.

(காரைதீவு குறூப் நிருபர் - சகா)
 


Add new comment

Or log in with...