எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண மூவர் குழு தட்டுப்பாட்டுக்கு ஐ.ஓ.சி நிறுவனம் பொறுப்பல்ல | தினகரன்

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண மூவர் குழு தட்டுப்பாட்டுக்கு ஐ.ஓ.சி நிறுவனம் பொறுப்பல்ல

 

நாட்டில் நிலவும் பெற்றோல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூவரடங்கிய விசேட குழுவொன்றை நேற்று நியமித்துள்ளார்.

நேற்றுக் காலை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான சரத் அமுனுகம, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகிய மூவரடங்கிய குழுவே நேற்றைய தினம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.

எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியும் இக்குழுவும் இணைந்து இந்தியாவுடன் இராஜதந்திர ரீதியாக பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் நாட்டில் களேபரத்தை உருவாக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென பெற்றோலியம் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாகவும் தெரிய வருகிறது. பிரதமர் சபையில் விளக்கம்

இதேவேளை, மற்றொரு எரிபொருள் கப்பல் நாளை நாட்டிற்கு வர இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.எரிபொருள் நாட்டிற்கு வருவது தாமதமானதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து விசாரணை நடத்துவதாக குறிப்பிட்ட அவர்,எரிபொருள் நெருக்கடி பிரச்சினைக்கு ஜ.ஓ.சி நிறுவனம் பொறுப்பு என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். ஜ.ஓ.சி நிறுவனம் தேவையில்லாவிட்டால், ஏன் மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் அதனுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வில்லை எனவும் அவர் வினவினார்.

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் அநுர குமார திசாநாயக்க எம்.பிஎழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய பிரதமர் மேலும் குறிப்பிட்டதாவது:

இன்று வரும் எரிபொருள் கப்பலுக்கு மேலதிகமாக நாளை அல்லது நாளை மறுதினம் இந்தியாவில் இருந்து மற்றொரு கப்பல் இலங்கை வருகிறது. இது தொடர்பில் நானும், ஜனாதிபதியும் இந்திய தூதுவருடன் பேசினோம். பெற்றோல் தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கவலையடைகிறோம். இந்த வார இறுதிக்குள் இரு கப்பல்கள் வருகின்றன.

அமைச்சரவை முடிவின் பிரகாரம் தான் இந்திய ஒயில் கம்பனியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.ஜ.ஓ.சி தேவையில்லாவிட்டால் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அதனை ரத்து செய்திருக்கலாம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிராக நீதிமன்றம் சென்றவர்கள் யார்.

இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்கையில் திருகோணமலை குதங்களை பெற்றோல் கூட்டுத்தாபனம் பயன்படுத்தவில்லை.அதற்கான பலமும் இருக்கவில்லை.சகல குதங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் உடன்பாடு ஏற்பட்டது. இந்தியாவுடனான ஒப்பந்தத்தை செயற்படுத்த வேண்டும்.இந்திய கம்பனி தேவையில்லை எனின் தமது 10 வருட ஆட்சியில் குதங்களை முன்னேற்றியிருக்கலாம்.இந்தியாவுடன் தொடந்து பேசி வருகிறோம். இவற்றை முன்னேற்றினால் முழு நாட்டிற்கும் தேவையான எரிபொருளையும் இந்தியாவின் ஒரு பகுதிக்கு தேவையான எரிபொருளையும் வழங்க முடியும்.

எரிபொருள் மத்திய நிலையமாக எமது நாட்டை மாற்ற இருக்கிறோம்.

எரிபொருள் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் போது ஜ.ஓ.சி இருந்ததாலே எரிபொருள் வழங்க முடிந்தது. எரிபொருள் எடுத்து வர தாமதமானதற்கு யார் பொறுப்பு கூற வேண்டும் என்பது தொடர்பாக ஆராயப்படும்.இதற்கு ஜ.ஓ.சி பொறுப்பு என்பதை ஏற்க முடியாது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத், லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...