எரிபொருள் நெருக்கடியின் பின்னணியில் சூழ்ச்சிகள்! | தினகரன்

எரிபொருள் நெருக்கடியின் பின்னணியில் சூழ்ச்சிகள்!

இன்றைய காலகட்டத்தில் எரிபொருள் என்பது ஒரு அத்தியாவசியப் பொருளாக விளங்குகின்றது. உணவு, உடை, உறையுள் போன்ற ஒரு முக்கியத்துவத்தை அதுவும் பெற்றுள்ளது.

இந்த எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் விநியோகத்தில் இரண்டொரு நாட்கள் சீரின்மை, தாமதங்கள் ஏற்படுமாயின் மக்களின் இயல்பு வாழ்வே பாதிக்கப்பட்டு விடுவதை அவதானிக்க முடிகின்றது. அந்த அளவுக்கு எரிபொருட்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இந்த யுகத்தில் இதன் முக்கியத்துவத்தையும், தேவையும் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் கடந்த சில தினங்களாக நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. அதனைப் பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பும் நிலயங்களில் வாகனங்கள் சகிதம் மக்கள் நீண்ட வரிசைகளில் மணித்தியாலக்கணக்கில் காத்து நிற்கின்றனர்.

அதேநேரம் கொழும்பிலும், ஏனைய நகர்ப் பிரதேசங்களிலும் இந்த நாட்களில் வழமைக்கு மாறாக மக்கள் வருகையிலும், வாகனப் போக்குவரத்திலும் குறைவு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவை யாவும் இந்த எரிபொருள் பெற்றிருக்கும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடுகளாகும்.

இவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ள எரிபொருளின் விநியோகத்தில் செயற்கை நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சிகள் இடம்பெற்றிருப்பதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டிருக்கிறார்.இது தொடர்பில் தம் பக்க நியாயங்களையும் அவர் முன்வைக்கவும் தவறவில்லை.

தற்போது நாட்டில் நிலவும் இந்த எரிபொருள் நெருக்கடி தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக அவர் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் இவ்விடயங்களைத் தெரிவித்திருக்கின்றார்.

அதாவது, இலங்கையின் எரிபொருள் பாவனை வரலாற்றில் முதல் தடவையாக இந்நாட்டுக்கு வந்து சேர வேண்டிய எண்ணெய்க் கப்பல் காலதாமதம் அடைந்திருக்கின்றது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்யும் 40 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் நவம்பர் மாதம் 2ஆம், 3ஆம் திகதிகளில் இலங்கைக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், அக்கப்பல் இன்று (08) நள்ளிரவு தான் வந்து சேர உள்ளது. அதேவேளை, இக்கப்பல் எரிபொருளை நிரப்புவதற்காக நான்கு நாட்கள் தாமதமடைந்திருக்கின்றது. அத்தோடு எரிபொருளை நிரப்பவும் 10 மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளது. இதே காலப்பகுதியில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் பழுதடைந்திருக்கிறது.

இவை இவ்வாறிருக்க, 15.10.2017 அன்று இந்திய எண்ணெய்க் கம்பனியால் கொண்டு வரப்பட்ட பெற்றோலில் கண்ணுக்கு புலப்படக் கூடிய துகள்கள் காணப்பட்டதால் அக்கப்பலின் எரிபொருள் 18.10.2017 இல் நிராகரிக்கப்பட்டதோடு அக்கப்பல் திருமலையில் தரித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று எரிபொருளுடன் கூடிய கப்பலை 31.10.2017 அளவில் இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக இந்திய எண்ணெய் கம்பனி உறுதி செய்தது.

ஆனாலும் அந்த உறுதிமொழி இறுதி சந்தர்ப்பத்தில் மீறப்பட்டுள்ளது. அதேநேரம் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதனை நன்கறிந்துள்ள இந்திய எண்ணெய்க் கம்பனி இலங்கைக்கு 16 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோலை வழங்க முன்வந்தது. ஆனால் அதனோடு சேர்த்து தரங்குறைந்த டீசலையும் தம்மிடமிருந்து கொள்வனவு செய்யுமாறும் அரசாங்கத்திற்கு அந்நிறுவனம் நிபந்தனை விதித்திருக்கின்றது.

இந்தக் காலப்பகுதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படப் போவதாக குறுந்தகவல் செய்திகளும் பரப்பப்பட்டுள்ளன. அத்தோடு இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை அரசியல் பிரசாரமாக்குவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அலாதியான ஆர்வத்தையும் காட்டுகின்றது.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக எடுத்து நோக்கும் போது, தற்போது ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு செயற்கையாக தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றது என்பதைப் புலப்படுத்துகின்றது. சதி, சூழ்ச்சிகள் இடம்பெற்றிருப்பதாகவே தெரிகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாகவும், சந்தேகங்களை தோற்றுவிக்கக் கூடியனவாகவும் உள்ளன.

இதன் ஊடாக எரிபொருளுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கவும், அதனூடாக அரசாங்கத்தின் மீது மக்களை அதிருப்தி கொள்ளச் செய்யவும் சூசகமான முறையில் முயற்சிகள் செய்யப்ட்டு இருக்கின்றன.

இந்த நிலையில்தான் தற்போது செயற்கையாக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டின் பின்னணி, அதில் எழுந்துள்ள ஐயங்களை எடுத்துக் கூறி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இந்நெருக்கடி தொடர்பில் ஆராயவென ஜனாதிபதி அமைச்சரவை உபகுழுவொன்றையும் நியமித்திருக்கின்றார். என்றாலும் இந்த செயற்கைத் தட்டுப்பாட்டின் உண்மைத்தன்மை தொடர்பில் காலதாமதம் இன்றி ஆராய்ந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். அத்தோடு இந்நெருக்கடியில் சதி, சூழ்ச்சிகள் இடம்பெற்றிருக்குமாயின் அவற்றில் ஈடுபட்டோருக்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தவறக் கூடாது. அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும். ஏனெனில் சிலரது அற்ப நலன்களுக்காக மக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தி நாட்டின் இயல்பு நிலையை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கக் கூடாது.


Add new comment

Or log in with...