'அப்பா... மோடி வந்திருக்கிறார்' | தினகரன்

'அப்பா... மோடி வந்திருக்கிறார்'

'அப்பா...உங்களைப் பார்க்க பிரதமர் மோடி வந்திருக்காங்க' என்று கருணாநிதியிடம் காதுக்குள் கூறினார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். அதைக் கேட்டு உற்சாகத்துடன் சிரித்தார் கருணாநிதி.

சென்னை வந்த பிரதமர் மோடி நேற்று கோபாலபுரத்திற்குச் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் உடன் சென்றார்.

மத்திய பாதுகாப்புப் படை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சென்றார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் கருணாநிதியின் வீட்டிற்குச் சென்றனர். இந்த சந்திப்பின் போது திமுகவினரும் கோபாலபுரத்தில் இருந்தவர்களும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

கோபாலபுரம் வந்த மோடிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் ஸ்டாலின். அப்போது கனிமொழி எம்.பி பச்சை நிறச் சால்வை கொடுத்து வரவேற்றார்.

மோடி நேராகச் சென்று கருணாநிதியின் கையை பிடித்துக் கொண்டு பேசினார். இந்தச் சந்திப்பு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. பாஜகவையும், மோடியையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையிலும் அரசியலில் மூத்த தலைவரை வாஞ்சையுடன் சந்தித்து நலம் விசாரித்தார் மோடி.

"அப்பா... பிரதமர் மோடி வந்திருக்கிறார், கவர்னர் வந்திருக்கிறார், பாஜக தலைவர் தமிழிசை வந்திருக்கிறார்" என்று ஒவ்வொருவராக பெயரைக் கூறி கருணாநிதியிடம் விளக்க அதைக் கேட்டு சிரித்தார் கருணாநிதி. அப்போது அருகில் ராஜாத்தி அம்மாள் நின்றிருந்தார். கருணாநிதியின் உடல் நலம் பற்றி மோடி கேட்டறிந்தார்.

வீட்டில் இருந்த கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை தனியாக சந்தித்து தமிழிசை, மோடி ஆகியோர் நலம் விசாரித்தனர். அப்போது அனைவரையும் வரவேற்றார் தயாளு அம்மாள். அவரது உடல் நலம் பற்றியும் கேட்டறிந்தார்.

சென்னைக்கு பலமுறை வந்திருந்தாலும், முதன் முறையாக கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்துள்ளார் பிரதமர் மோடி. இம்முறை பயணத்திட்டத்தில் இல்லாத இந்தச் சந்திப்பு சில நிமிடங்கள்தான் என்றாலும் தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி அதிக உற்சாகத்துடன் காணப்பட்டார்.

'முரசொலி' பவளவிழாவிற்கு பிரதமர் மோடிக்கோ, பாஜகவிற்கோ எந்த வித அழைப்பும் அனுப்பவில்லை. ஆனாலும் 'தினத்தந்தி' 75வது ஆண்டு நிறைவுக்காக நேற்று சென்னைக்கு வந்த மோடிக்கு முரசொலி பவளவிழா புத்தகத்தை அளித்தார் கருணாநிதி. அரைநாள் பயணம் என்றாலும் சென்னையில் புதிய அதிர்வை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளார் மோடி. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் அரசியல் நோக்கம் நிச்சயம் உண்டு என்றே கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை திடீரென சந்தித்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியுள்ள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மத்திய அரசுக்கு எதிராக திமுக சற்றே அடக்கி வாசித்தது. ஒருகட்டத்தில் பாஜகவை பகிரங்கமாகவே திமுக எதிர்க்கத் தொடங்கியது.

கருணாநிதியின் சட்டசபை வைரவிழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை பங்கேற்க வைத்து பாஜகவுக்கு எதிரான பிரமாண்ட கூட்டணிக்கும் திமுக அடித்தளம் போட்டு வைத்தது. இந்த நிலையில் கருணாநிதி உடல்நலம் தேறி 'முரசொலி' அலுவலகம் சென்றார்.

பின்னர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் சென்னை வந்த பிரதமர் மோடி நேற்று திடீரென கருணாநிதியை சந்தித்து பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் பிரதமர் மோடி வர வேண்டும் என விரும்பியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட மத்திய அமைச்சர் அருண்ஜேட்லிதான் கருணாநிதியையும் சந்திக்கலாமே என பிரதமர் மோடியிடம் கூறினாராம்.

இதனை ஏற்றுதான் கருணாநிதியை சந்திப்பது என பிரதமர் மோடி முடிவு செய்தாராம். நீண்ட காலமாக பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த சிலர், இப்படியான சந்திப்பால் படு உற்சாகமாக இருக்கிறார்கள்.

தமிழகம் வரும் போதெல்லாம் போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்திப்பார் மோடி. இம்முறை சென்னை வந்துள்ள மோடி, கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததுதான் பெரும் புதுமை.

பாஜகவிற்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. அதிமுக, திமுக என இரு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்துள்ளது பாஜக. மத்தியில் மோடி பிரதமரான பின்னர் திமுக உடனான தொடர்பு உருவாகவில்லை. காரணம் ஜெயலலிதாவுடன் மோடி பாராட்டிய நட்புதான்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது திமுக.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, 2ஜி வழக்கு விசாரணையில் தீர்ப்பு திகதி இன்று வெளியாக உள்ள நிலையில் சென்னையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்திருப்பது மிகப் பெரும் பரபரப்பாகும்.

அதிமுகவினருக்கு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு எப்படி கழுத்திற்கு மேல் கத்தியாக தொங்கியதோ அதே போன்று திமுகவினரின் கழுத்திற்கு மேல் தொங்கும் கத்தி 2ஜி வழக்கின் தீர்ப்பு ஆகும்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-_2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.இவ்வழக்கின் தீர்ப்புத் திகதி இன்று அறிவிக்கப்படுகிறது.

கனிமொழி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் நீண்ட கால சிறைத் தண்டனை வழங்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சட்டத்துறை சார்ந்தோர் கூறுகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது வீட்டில் வந்து ஓய்வெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனை உறுதி செய்த திமுக எம்பி கனிமொழி, "திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை" என்றார்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பிரதமர் மோடிக்கு கனிமொழி நன்றி தெரிவித்தார். மரியாதை நிமித்தமாகத்தான் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தார் என்றும் கனிமொழி கூறினார்.

அண்மையில் முக முத்துவின் பேரன் திருமணத்தில் கலந்து கொண்ட அழகிரி தனது தந்தையான கருணாநிதியை மதுரையில் வந்து ஓய்வெடுக்குமாறு அழைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நேற்று பங்கேற்ற 'தினத்தந்தி' பவளவிழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஷ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

தினத்தந்தியின் பவளவிழா கொண்டாட்டம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி நேற்றுக் காலையில் சென்னை வந்து சேர்ந்தார்.

சென்னை விமானநிலையத்தில் இருந்து சிறப்பு ஹெலி​ெகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கடற்படைத் தளத்திற்கு வந்து அங்கிருந்து குண்டுதுளைக்காத கார் மூலம் பிரதமர் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்கு வந்தார்.

மோடியின் உரை:

"அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகப் பத்திரிகைகள் பாடுபட வேண்டும்” என ‘தினத்தந்தி’ பவளவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறியுள்ளார்.

விழா மலரை பிரதமர் மோடி வெளியிட்டார்.

விழாவில் அனைவரையும் வரவேற்று ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேசினார். அவர் பேசுகையில், “தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ‘தினத்தந்தி’ செய்துள்ள சேவைகளுக்கும், சாதனைகளுக்கும் இந்த மேடையில் வீற்றுள்ள புகழ்பெற்ற மேன்மைமிக்கவர்களே சான்றாகும். எங்களது கல்வி நிறுவனங்கள் மூலம் 1965-ம் ஆண்டுமுதல் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கி கல்வித் துறைக்கும் நாங்கள் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளோம் என்றார். 

 


Add new comment

Or log in with...