வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்குமாறு சுற்றுநிரூபம் | தினகரன்


வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்குமாறு சுற்றுநிரூபம்

திருகோணமலையில்...

 

இந்தியன் ஒயில் நிறுவனத்தினால் எரிபொருள் கொள்வனவு கப்பல் திருப்பியனுப்பப்பட்டதை அடுத்து, தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்குமாறும், போத்தல்கள், பிளாஸ்ரிக் கொள்கலன்கள் போன்ற இதர பாத்திரங்களில் எரிபொருள் வழங்க வேண்டாம் என, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சுற்றுநிரூபமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கவினால், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள, 2017/01 எனும் இலக்கத்தைக் கொண்ட சுற்றுநிரூபத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போலியான எரிபொருள் தட்டுப்பாடொன்று ஏற்படுத்தப்பட்டதை அடுத்து, வாகன உரிமையாளர்களின் தங்களது எரிபொருள் தாங்கிகளை நிரப்ப முயற்சிப்பதன் காரணமாக தேவையற்ற எரிபொருள் தட்டுப்பாடொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் அதிகமானோர் நிற்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போத்தல்கள் மற்றும் பிளாஸ்ரிக் கொள்கலன்களுடனும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் நிற்பதால் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப வருவோரின் வரிசை நீண்டு செல்வதாகவு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் தொடர்ச்சியாக பெற்றோல் வழங்கப்பட்டு வரும் நிலையில், மேற்படி காரணத்தால் குறித்த நன்மையை வாகன உரிமையாளரால் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு, வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குமாறும், போத்தல்கள் மற்றும் பிளாஸ்ரிக் கொள்கலன்களுடனும் வருவோருக்கு எரிபொருள் வழங்க வேண்டாம் எனவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை கேட்டுக்கொள்ளவதாக அச்சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதனை மீறும் வகையில் செயற்படும் நிலையில், குறித்த விடயம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு அவர்களே பொறுப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசை...

மூதூரில்...

நாடளாவிய ரீதியில் பெற்றோலுக்கான தட்டுப்பபாடு நிலவி வரும் நிலையில் திருகோணமலை மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறுவதற்காக இன்று செவ்வாய்கிழமை (07) அதிகாலை முதல் பொது மக்களும் அரச அலுவலகங்களுக்கும் செல்வோரும் நீண்ட வரிசையில் அசௌகரியங்களுக்கு மத்தியில் பெற்றோல் பெறுவதற்காக காத்துக் கொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு 100 ரூபாவுக்கும் முச்சக்கர வண்டிக்கு 300 ரூபாவுக்கு பெற்றோல் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(தோப்பூர் தினகரன் விசேட நிருபர்)

 


திருகோணமலையில்...

நாட்டில் எற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக திருகோணமலை நகரில் இரவு பகலாக எரிப்பொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் வரிசையாக போத்தல்களுடனும், முச்சகக்ரவண்டிகளுடனும், மோட்டார்சைக்கிள்களுடனும் நீண்ட வரிசையில் பெற்றோல் பெறுவதற்காக காத்துகிடப்பதை படங்களில் காணலாம்.

(அன்புவழிபுரம் தினகரன் நிருபா் - வடமலை ராஜ்குமார்)

 


மன்னாரில்...

மன்னாரில் பெற்றோலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மன்னார் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றிற்கு முன்னால்  நேற்று    திங்கட்கிழமை (06) காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் நின்றதுடன், எரிபொருள் நிரப்பும் பணியாளர்களுடன் வாகன உரிமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளமையையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

மன்னார் நகரில் மூன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் காணப்பட்டுள்ள போதும், அவற்றில் மன்னார் சந்தை பகுதியில் உள்ள  மாந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மாத்திரம் எரிபொருட்கள்   காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில்  நேற்று    திங்கட்கிழமை (06) காலை 11 மணி முதல் வாகன உரிமையாளர்கள் பெற்றோலினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் நின்றதுடன், பெற்றோலை பெற்றுக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டு காணப்பட்டனர்.

இதனால் பெற்றோலை வழங்கும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு, பெற்றோலை போத்தல்களில் பெற்றுக்கொள்ள வந்தவர்களுக்கு பெற்றோல் வழங்கப்படாத நிலையில் அவர்கள் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நாட்டில் எரிபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களே காட்டிக்கொள்ளுவதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனினும் அனைவருக்கும் பெற்றோல் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும், தம்மிடம் கையிருப்பில் உள்ள பெற்றோல், வாகன உரிமையாளர்கள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வாகனங்களுக்கு பெற்றோல் வழங்கப்பட்டு வருவதாகவும், பாகுபாடு இன்றி சமமான முறையில் பெற்றோல் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும், மன்னார் நகரில் உள்ள மாந்தை   பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(மன்னார் நிருபர் - லம்பர்ட் ரொசாரியன்)


கல்முனையில்...

கல்முனைப்பிராந்தியத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சத்தில் இன்று மக்கள் பெரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியத்தொடங்கியுள்ளனர்.

அதற்கேற்றாற்போல் சில நிலையங்களில் பெற்றோல் இல்லை என்ற அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது. இதுவும் மக்கள் மனங்களில் தட்டுப்பாடு என்ற செய்தியை மேலும் வலுப்படுத்திறநிற்பதால் மகக்ள் முண்டியடிக்கின்றனர்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்த நிலையில் நாட்டின்  பல்வேறு பகுதியில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்புடன் வருகைத்தந்தவர்களுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் கிடைப்பதில்லை என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் எரிபொருள் கிடைக்கும் நேரத்தை உறுதியாக கூற முடியாதென எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, எரிபொருள் ஓரளவு உள்ள இடங்களில், பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொம்பனி தெரு எரிபொருள் நிலையத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் பதற்றமாக நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில், போத்தல்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வோர் இடையில் குறுக்கிட்டு எரிபொருளை வாங்க முயற்சின்றனர்.

எனினும் வாகன சாரதிகளுக்கு மட்டும் எரிபொருள் வழங்க முடிவு செய்துள்ளமையால் போத்தல்களில் பெற்றுக்கொள்ள வருவோர் மோதல்களில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக பல எரிபொருள் நிலையங்களில் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, நவீன மோட்டார் வாகனங்களுக்கு அதிகமான எரிபொருள் வழங்கப்படுவதாகவும், மோட்டார் சைக்கிள் மற்றும் சாதாரண மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை மந்தமான நிலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் எரிபொருள் வழங்கப்படுகின்ற எரிபொருள் நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

(காரைதீவு குறூப் நிருபர் - சகா)


ஹட்டனில்...

பெற்றோலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் வாகனங்களை காணக்கூடியதாக உள்ளது.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 'பெற்றோல் இல்லை' என்ற பாதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

இதனிடையே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலை மட்டுப்படுத்தி விநியோகிக்குமாறு கனிய எண்ணை கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் மலையக பிரதேசங்களில் குறிப்பாக ஹட்டன் மற்றும் நுவரெலியா, நானுஓயா, தலவாக்கலை போன்ற பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

ஹட்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கையிருப்பில் உள்ள எரிபொருளை பெற்றுக்கொள்ளுவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தது. குறித்த நிலையித்திலிருந்து கையிருப்பில் உள்ள எரிபொருளை துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...