தேசியப் பிரச்சினைத் தீர்வில் எதிரணியின் உதாசீனம்! | தினகரன்

தேசியப் பிரச்சினைத் தீர்வில் எதிரணியின் உதாசீனம்!

இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளாரென்பது நன்கு தெளிவாகவே புரிந்து விட்டது.

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் அறிக்கை மீதான அரசியலமைப்பு சபையின் விவாதத்தில் கடந்த வியாழக்கிழமையன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், உத்தேச அரசியல் யாப்பு விடயத்தில் தனது எண்ணத்தை வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்.

உத்தேச யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் காணப்படுகின்ற யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படுமானால் மத்திய அரசாங்கத்தின் சகல அதிகாரங்களுமே இல்லாமல் போகின்ற ஆபத்து ஏற்படுமெனவும் அதீத அச்சமொன்றை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அதிகாரப் பகிர்வு யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டுமென்று அவர் வலியுறுத்தியிருக்கின்றார். அதாவது வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு தற்போது இருக்கின்ற அதிகாரங்களைப் பார்க்கிலும், மேலதிக அதிகாரமெதுவும் வழங்கப்படலாகாது என்பதே அவரது உரையின் உள்ளார்ந்த அர்த்தமாகும்.

அதேசமயம், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு வாக்களித்தவாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றியமைத்தல், தேர்தல் முறைமையில் திருத்தம் செய்தல் ஆகியவற்றில் மாத்திரமே அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் மஹிந்த.

முன்னாள் ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையை நன்கு ஆராய்கின்ற போது, ஒரு விடயம் நன்கு தெளிவாகத் தெரிகின்றது.

வடக்கு, கிழக்குத் தமிழினம் தொடர்பாக யுத்தம் நிலவிய காலப் பகுதியில் அவர் எத்தகைய மனோநிலையைக் கொண்டிருந்தாரோ அன்றைய நிலைப்பாட்டிலிருந்து இன்றுமே அவர் மனமாற்றம் அடையவில்லை.

அவர் இப்போது கூறுவதெல்லாம் பழைய பல்லவிகள். அன்றைய அரசியல் நிலைமையையும் இன்றைய அரசியல் நிலைமையையும் ஒன்றாகக் கருதி முன்னைய நிலைப்பாட்டிலிருந்து இன்னுமே அவர் மாற்றமடையாதிருப்பது அரசியல் பக்குவமாகத் தென்படவில்லை.

தனது ஆட்சிக் காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளை ஐக்கிய தேசியக் கட்சியினர் குழப்பியடித்ததாக மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டுகின்றார். மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தின் போது இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இதயசுத்தியுடன் செயற்பட்டிருப்பது உண்மையாகவிருப்பின், இன்றைய அரசாங்கம் மேற்கொள்கின்ற தீர்வு முயற்சிகளுக்கு ஏன் முட்டுக்கட்டை போடுகின்றாரென்ற வினா இங்கே எழுகின்றது.

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அதிகாரத்தில் இருக்கின்ற அரசாங்கம் முன்னெடுக்கின்ற எந்தவொரு முயற்சியையும் சீர்குலைப்பதென்ற இலங்கையின் பாரம்பரியத்துடன் மஹிந்த அணியும் இசைந்து போகின்றதென்றே கருத வேண்டியிருக்கின்றது.

இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் கோரிக்கை தோற்றம் பெற்று அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாகி விட்டது. இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் நீண்ட பாதையைக் கடந்து வந்துள்ள போதிலும், மாகாண சபைகள் என்பதைத் தவிர வேறு எதுவுமே சிறுபான்மை மக்களுக்குக் கிடைத்ததில்லை.

மாகாண சபைகள் என்பது கூட தமிழினம் போராடி இரத்தம் சிந்திப் பெற்ற சிறியதொரு தீர்வுதான். ஆனாலும் நாட்டின் ஏனைய மாகாண சபைகளால் மக்களுக்குக் கிடைக்கின்ற வரப்பிரசாதங்களைக் கூட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களால் பெற முடியாமல் போய் விட்டது. தமிழ் மக்களின் சனத்தொகை கிழக்கில் பெரும்பான்மையாகக் காணப்படுகின்ற போதிலும், அம்மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவர் பதவி வகிக்க முடியாதபடி நிலைமை ஆகியிருக்கின்றது.

வடக்கு மாகாண சபையிலிருந்தும் அதிகாரப் பகிர்வுக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் நோக்குகின்ற போது, இலங்கையின் இரண்டாவது சிறுபான்மையினராகவும் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையினராகவும் விளங்குகின்ற தமிழ் மக்களுக்கு இதுவரை கிடைத்தது எதுவுமில்லையென்றே எண்ணத் தோன்றுகின்றது.

அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் கடந்த கால அரசாங்கங்கள் அனைத்துமே தமிழினத்தை முழுமையாக ஏமாற்றியிருக்கின்றன. இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் கூட இதில் பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

இவ்வாறான நிலையில், இன்றைய அரசாங்கம் ஏதோவொரு வகையில் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் காத்திரமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. தமிழினம் கோருகின்ற வடக்கு – கிழக்கு இணைந்ததான சுயாட்சித் தீர்வுக்கான பயணத்துக்கு, இன்றைய அரசின் தீர்வுகள் அடித்தளமொன்றை ஏற்படுத்திக் கொடுக்குமெனவும் நம்ப முடியும்.

இவ்வாறானதொரு நம்பிக்கை அறிகுறி தென்படுகின்ற நிலைமையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நிலைப்பாடு சிறுபான்மையினருக்கு வேதனையையே தருகின்றது. சிறுபான்மையினரின் நீண்ட காலக் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதன் ஊடாக எதிர்காலத்தில் இன ஐக்கியம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சிரேஷ்ட அரசியல் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ தோள்கொடுக்க வேண்டுமென்பதே சிறுபான்மையினரின் ஆதங்கம் ஆகும். 


Add new comment

Or log in with...