Thursday, March 28, 2024
Home » இஸ்ரேல் – காசா யுத்தத்தினால் இடம்பெறுகின்ற உயிரிழப்புகளுக்கு எதிராக கண்டியில் ஊடக மாநாடு

இஸ்ரேல் – காசா யுத்தத்தினால் இடம்பெறுகின்ற உயிரிழப்புகளுக்கு எதிராக கண்டியில் ஊடக மாநாடு

by Rizwan Segu Mohideen
October 28, 2023 7:20 am 0 comment

காசாவில் மனித உயிரிழப்புக்களை நிறுத்தக் கோரி கண்டியிலுள்ள சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர் ஒன்றுசேர்ந்து ஊடக மாநாட்டினை கண்டி டெவோன் ஹோட்டலில் நடத்தினர். இதன் போது பலரும் பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர்.

வேவெல ஸ்ரீசுர்தராம விஹாராதிபதி அதிவண. பஞ்யா கீர்த்தி தேரர் கருத்துத் தெரிவிக்கையில் “ஹமாஸ் இயக்கத்திற்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையிலான போரினால் மனித உயிர்கள் பலி கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிறிய பிள்ளைகள், பெண்கள், முதியவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இது தொடர்பில் நாங்கள் கவலையுற்றுள்ளோம். எங்களுடைய பௌத்த தர்மம் யுத்தத்தை அனுமதிப்பதில்லை. ஆதலால் இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று எல்லோரும் ஒருங்கிணைந்து நீதிக்கான குரல் அமைப்பின் ஊடாக வேண்டி நிற்கின்றோம்” என்றார்.

கட்டுக்கலை அல் புர்க்கானிய்யா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் ராபி கருத்து தெரிவித்த போது, “கொடூரமான முறையில் காசாவில் மனிதர்களை கொன்று குவித்து வருகிறார்கள். எந்த இனமாக இருந்தாலும் எந்த சமயத்தவராக இருந்தாலும் யாராக இருந்தாலும் மனிதர்களை கொன்றொழிப்பதை அனுமதிக்க முடியாது. நாங்கள் ஒன்றிணைந்து இந்த மக்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனைகளை மேற்கொள்வதோடு அனைத்து இன மக்களும் ஒன்றினைந்து நீதிக்கான குரல் அமைப்பின் ஊடாக வேண்டுகோள் விடுப்போம். உடன் யுத்தம் நிறுத்தம் மேற்கொள்ளப்படுதுடன் இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும்” என்றார்.

தொழிலதிபர் யூ. எம். பாசில் கருத்து முன்வைத்த போது, “இஸ்ரேல்- பலஸ்தீன் யுத்தமானது மிகப் பெரிய அவலங்களைக் கொண்டு வந்திருப்பதை நாங்கள் காணுகின்றோம். இது யுத்த தர்மத்தின் எல்லைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. மனித நாகரீகம் அடைந்துள்ள இந்தக் காலத்தில் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது. ஒன்றுமே அறியாத சிறுவர்கள் பெண்கள் உட்பட வைத்தியசாலையில் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் கூட இதனால் கொல்லப்படுகின்றார்கள். ஆகவே அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதை உலக நாடுகள் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்றார்.

அருட்திரு யூடான் யலோ பீரிஸ் கருத்து முன் வைத்த போது, “ஒருவரை பலி எடுப்பதால் நியாயத்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன். அது பற்றி எல்லா சமயங்களும் போதித்துள்ளன. கிறிஸ்த சமயமும் பைபிளும் இதைத்தான் கூறுகின்றன” என்றார்.

முன்னாள் யட்டி நுவர பிரதேச சபையின் உறுப்பினர் வசீர் முக்தார் கருத்தினை முன்வைக்கும் போது “காசா பகுதியில் சிறு பிள்ளைகள கொன்றொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கொடிய வன்முறை நிறுத்தப்பட வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர்கள் போன்றவர்களுடைய உயிர் காவு கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த அவலநிலை வெகுவிரைவில் நிறுத்தப்பட வேண்டும். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுதல் வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

கணக்காளர் முபாரக், மாநகர சபை உறுப்பினர் அஸ்மி மரைக்கார், ரேனுகா உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளை ஊடங்களுக்குப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இக்பால் அலி
(மாவத்தகம தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT