சர்வதேச பாலின இடைவெளி; 108-வது இடத்தில் இந்தியா | தினகரன்

சர்வதேச பாலின இடைவெளி; 108-வது இடத்தில் இந்தியா

2017-ம் ஆண்டுக்கான சர்வதேச பாலின இடைவெளி அறிக்கையை சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு (World Economic Forum) வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 108-வது இடத்துக்கு தள்ளப் பட்டுள்ளது. சீனா, பங்களாதேஷை விட இந்த குறியீட்டில் இந்தியா பின்னுக்குத் தள்ளப் பட்டுள்ளது. இந்தியாவின் பின்னடைவுக்கு பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதும் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவாக இருப்பதுமே முக்கிய காரணமாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலிலும் ஆணாதிக்கம் இருக்கிறது: கனிமொழி (திமுக எம்.பி.)

''இந்த புள்ளிவிவரமானது நாம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயமாக இல்லை. பெண் களின் நிலை எப்படியிருக்கிறது என்பதை இந்த புள்ளிவிவரம் வெளிக்கொண்டு வந்துள்ளது.

பல வருடங்களாக பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வேண்டும் என்பதை திமுக வலியுறுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது நான் 33% இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறேன். மாநிலங்களவையில் இச்சட்டம் நிறை வேறியபோதும் மக்களவையில் அது இன்னும் நிறைவேறவில்லை. மத்திய பாஜக அரசு நினைத் தால் இதை நிச்சயம் நிறைவேற்ற முடியும். இதற்காக டெல்லியில் நான் பலமுறை போராட்டங்கள் நடத்தியிருக்கிறேன். இனியும் தொடர்ந்து வலியுறுத்துவேன்.

பணியிட ங்களில் பாலின பேதமும் பாலியல் சீண்டலும் இன்னமும் தொடர்வது வேதனைக் குரியது. இதற்கு வலுவான சட்டங்கள் வேண்டும். பெண்களுக்கான வலுவான சட்டங்கள் வேண் டும் என்றால் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும். பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் உருவாக்கப்படும் சட்டம் பெண்களுக்கான சட்டமாக இருக்க முடியாது.

எல்லா இடங்களிலுமே ஆண்களுக்கான வாய்ப்பு, பெண்களை ஒப்பிடும்போது சற்று அதிகமாகவே இருக்கிறது. அரசியலிலும் ஆணாதிக்கம் இருக்கிறது. எந்த ஒரு கட்சியும் தானாக முன்வந்து 33% இடஒதுக் கீட்டை அளிக்காது. அதற்கு சட்டம் நிறைவேற்றப்பட்டால் தானாகவே அது நிகழும்.

பாலின சமத்துவத்தை சமுதாயத்தில் விதைக்க அடிப்படையில் இருந்து மாற்றத்தை விதைக்க வேண்டும். அதற்குப் பாலின சமத்துவத்தை பள்ளியில் இருந்தே போதிக்கும் அளவுக்கு கல்வித் திட்டத்தில் மாற்றம் வேண்டும்" என்று கனிமொழி கூறினார்.

எழுச்சி சாத்தியமே: ஓவியா

(சமூக செயற்பாட்டாளர்)

''பாலின இடைவெளி எப்படி இருக்கிறது என 144 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 108-வது இடத்தில் இருக்கிறது என்பது இந்திய அரசின் பித்தலாட்டங்களைத் தோலுரிக்கும் புள்ளிவிவரம். தன்னுடைய சரிபாதியை அடிமைகளாக வைத்திருக்கும் ஒரு நாடு உலக அரங்கில் மிகப் பெரிய ஜனநாயகம் என பெருமை பேசிக்கொண்டு குறைகளை மறைத்துக் கொள்கிறது. முதலில் நமது ஆட்சியாளர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்த்து பெண்கள் இனி எழவே முடியாதோ என்ற எண்ணத்துக்கு சென்றுவிடக் கூடாது. ஏனெனில் இதைவிட மோசமான சமுதாய கட்டமைப்பில் இருந்துதான் நாம் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். எனவே, எழுச்சி சாத்தியமே. பெண் விடுதலை சமுதாயம் அமைய வேண்டுமானால் தன்னலமற்ற பெண்கள் உருவாக வேண்டும். சமுதாய சிந்தனையுடன் பெண்கள் வளரும்போதுதான் பெண்ணுரிமை சமுதாயம் சாத்தியமாகும்.


Add new comment

Or log in with...