வைத்திய சங்கம் அரசாங்கத்தின் யோசனைக்கு சாதகமான மறுமொழி | தினகரன்

வைத்திய சங்கம் அரசாங்கத்தின் யோசனைக்கு சாதகமான மறுமொழி

 

சைற்றம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அவசியமான பின்னணி உருவாகி வருகின்றது. முதற் தடவையாக வைத்திய சங்கம் அரசின் யோசனைகளுக்கு சாதகமான மறுமொழியை வழங்கியுள்ளது. ஆனால், இன்னும் மேலும்பல தெளிவில்லாத விடயங்கள் உள்ளதாகவும் அவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமென வைத்திய சங்கம் கூறியுள்ளது. சைற்றம் எதிர்ப்பானது அடிப்படையில் வைத்திய சங்கத்துக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்குமிடையே உருவாகிய பிரச்சினை எனக் கூறலாம். இவ்விரு தரப்பினரும் ஷைலொக் நியாயத்துக்குள்ளேயே செயற்பட்டு வந்தார்கள். உடனடியாக சைற்றத்தை மூடவேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாகும். அரசின் ஆலோசனை என்னவென்றால் அதன் உரிமையை மாற்றி சுயாதீன நிறுவனமாக நடத்திச் செல்வது சிறந்தது என்பதாகும்.

வைத்திய சங்கததின் எண்ணம் என்னவென்றால் இந்நிறுவனத்தை நடத்திச் செல்வதென்றால் அதன் தரத்துக்காக வைத்திய சபையின் அனுமதியைப் பெறவேண்டும். மேலும் அதனை அரச நிறுவனமாக நடத்திச் செல்ல வேண்டும். அதைத்தவிர அச்சங்கத்தின் இன்னுமொரு வேண்டுகோள் என்னவென்றால் சைற்றம் நிறுவனத்தின் முகாமைத்துவம் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகள் பற்றி ஆராய வேண்டும். எவ்வாறாயினும் அரசின் ஆலேசானை இறுதி முடிவோ இறுதி அறிக்கையோ இல்லை என்பதால் பல தரப்பினரும் இது தொடர்பாக விவாதம் நடத்தி சரியான முடிவுக்கு வர முடியும். இதனை சாதகமான முடிவாகக் கருதலாம்.

சில பிரச்சினைகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு அரசியலமைப்பைக் குறிப்பிடலாம். புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என பலத்த எதிர்ப்புத் தெரிவித்த சிலர் இன்று அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளார்கள். அவர்களே ஜனாதிபதி சரியெனவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வை ஜனாதிபதியால் மாத்திரமே எடுக்க முடியும் என்றும் கூறுகின்றார்கள். காலத்துக்கு வழிவிட்டு நாம் பொறுமையுடன் காத்திருந்தால் சில பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய மூலோபாயங்கள் கிடைக்கும். அதற்காக நாம் புரையோடிப் போகும்வரை காத்திருக்கத் தேவையில்லை. சில தீவிர போக்காளர்கள் மாறுவதற்கு காலம் எடுக்கும் காலத்துடன் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

சைற்றம் எதிர்ப்பின் மூலம் நாட்டில் தனியார் கல்விக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், தனியார் கல்வி என்பது யதார்த்தமாகும். அதனை ஒரு காலத்திலும் மறுக்க முடியாது. நாட்டின் அனைத்து தடைகாண் பரீட்சைகளுக்கும் தனியார் கல்வி தலையிட்டு வருகின்றது. அதைத் தவிர சர்வதேசப் பாடசாலைகள் நாடு பூராவும் வியாபித்துள்ளன. அவற்றை நாம் மூடிவிட முடியாது. உதாரணத்துக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்காக அனைத்து ரியூசன் வகுப்புகளையும் மூட வேண்டும் என அடிக்கடி கூறினாலும் அதை நடைமுறைப்படுத்த இயலாதுள்ளது.

சைற்றம் பிரச்சினையுடன் இணைந்துள்ள பிரதான பிரச்சினையாக இருப்பது, அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கு என்ன நடக்கும் என்பதாகும். அங்கு கல்வி கற்றவர்கள் யாரும் தகுதியில்லாதவர்கள் இல்லை. அதுதவிர வைத்தியக் கல்விக்காக பெருமளவு பணத்தையும் செலவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு அநியாயம் நடக்கக் கூடாது என்பதே அனைவரினதும் எண்ணமாகும். இந் நிறுவனத்தில் வைத்திய கல்வி அல்லாத வேறு மாணவர்களும் உள்ளார்கள். அவர்கள் எவ்வித இடைஞ்சலுமின்றி அங்கு கல்வி கற்கின்றார்கள். பிரச்சினை வைத்திய பீடத்துக்கு மாத்திரம்தான். அரச வைத்திய சங்கமும் மற்றும் வைத்திய சபையும் இம் மாணவர்களுக்கு அநியாயம் ஏறப்டாத வகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாண இணைய வேண்டும்.

வைத்தியர்களின் சங்கம் சைற்றத்தின் பெயரை மாத்திரம் மாற்றுவதால் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டாது என கூறியுளள்து. எமக்குத் தெரிந்த வரையில் அரசின் முயற்சியாக அமைப்பது இந்நிறுவனத்தை தரமான நிறுவனமாக மாற்றி அதனை தொடர்ந்து இயங்கச் செய்வதாகும். அவ்வாறு இதனை தனியான அரச நிறுவனமாக நடத்திச் செல் முடியும். அவ்வாறில்லையென்றால் தரமான சுயாதீன நிறுவனமாக நடத்த முடியும். இரண்டாவது முறையிலான உயர் கல்விப் பெற்றுக் கொடுக்கும் பட்டதாரி – டிப்ளோமா வழங்கும் பல நிறுவனங்கள் நாட்டில் காணப்படுகின்றது. சைற்றம் வைத்தியசாலையையும் அவ்வாறான நிறுவனமாக மாற்றுவதில் எவ்வித தவறுமில்லை. வைத்தியசபையும் வைத்திய சங்கமும் வளைந்து கொடுக்கக் கூடிய கொள்கையொன்றை இப்பிரச்சினை தொடர்பாக கொண்டிருக்க வேண்டும்.

சைற்றம் நிறுவனத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள இழப்புகளை யாரும் கணக்குப் பார்க்கவில்லை. இதுவரை நடந்த ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என்பவற்றின் காரணமாக அரசாங்கம் பெரும் பொருளாதார இழப்புகளை ச்நதித்துள்ளது. தற்போது புதிய மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது. அம் மாற்றமானது சாதகமான முடிவு எடுப்பதற்குத் தேவையான பின்னணியை ஏற்படுத்தும் என நம்பலாம்.

வீ.ஆர். வலயட்


Add new comment

Or log in with...