நவநீதம் பிள்ளை கூறிய விடயங்களை ஜே.வி.பி ஏற்கனவே கூறியது | தினகரன்

நவநீதம் பிள்ளை கூறிய விடயங்களை ஜே.வி.பி ஏற்கனவே கூறியது

 

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்குரிய இடம் இல்லாமலாக்குவது தொடர்பான பேச்சு, பெடரல் கதைகள்,சைற்றம் பற்றிய விடயங்கள், பௌத்த பிக்குகளின் எதிர்ப்புக்கள், பாராளுமன்றத்திற்கு குண்டு வீசும் கதை போன்ற விடயங்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்த கருத்துக்கள்.

கேள்வி: - நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு மக்களுக்கு கருத்துக்களைக் கூறிய உங்களது கட்சியே இன்று நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக பேசுகின்றது. இதற்கான காரணம் என்ன?

பதில்: - மக்கள் பெரும் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்தார்கள். எனினும் இன்று அந்த மாற்றத்தை ஏற்படு த்த இந்த கூட்டு ஆட்சியால் முடியவில்லை. திருட்டு, ஊழல் மோசடிகளைத் தடுத்து நிறுத்தப் போவதாக அன்று கூறினார்கள். எனினும் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாதம் கடப்பதற்கு முன்னரே மத்திய வங்கியின் பிணை முறி மோசடியைச் செய்தார்கள். அதற்கப்பாலும் நிதித் துறையில் ஏராளமான விடயங்கள் இடம்பெற்றுள்ளன. மக்கள் எதிர்பார்த்ததைப் போன்று பழைய ஊழல் மோசடிக்காரர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படவில்லை. இடம்பெற்ற ஒரே ஒரு மாற்றம், அன்று குடும்பத் திருடர்கள். இன்று கூட்டுத் திருடர்கள். இவ்வாறு பார்க்கும் போது இன்று மக்களின் அனைத்து எதிர்பார்ப்புக்களும் சீர்குலைந்து போயுள்ளது.

கேள்வி: - முன்னைய திருடர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக ஜனாதிபதி விஷேட விசாரணைப் பிரிவு, நிதி மோசடிப் பிரிவு போன்ற நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவே?

பதில் :- அவ்வாறு மேற்கொண்ட விசாரணைகளில் ஒரு விடயத்திற்கே நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அது முன்னைய அரசாங்கத்தின் உயர் அரச அதிகாரியான முன்னாள் ஜனாதி பதியின் செயலாளருக்கும், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவ ருக்கும் சில் துணி மோசடிகளுக்காக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. எனி னும் பத்து நாட்கள் செல்வதற்குள் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். இங்கு தெளிவான அரசியல் டீல் ஒன்றுள்ளது. இந்த வழக்கில் ஆஜரான சட்டமா அதிபர் திணைக் களத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி இரண்டாவது தடவை பிணை கோரிக்கைக்காக நீதிமன்றத்திற்குச் செல்ல வில்லை.

அவர் நீதிமன்றத்திற்குச் செல்வதை நிராகரித்திருந்தார். இங்கு அரசியல் தலையீடு உள்ளமை இந்த விடயத்தின் மூலமே தெளிவாகின்றது. மூன்று மாங்காய்களை மரத்திலிருந்து பறித்த தாய் ஒருவரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையுடன் சிறையில் அடைக்கின்றார்கள். எனினும் ஆறாயிரம் இலட்ச த்தைத் திருடிய அரச சேவையின் உயர் அதிகாரியை பத்து நாட்களில் விடுவிக்கின்றார்கள். இன்று சட்டம் நியாயமாக இல்லை என்பதோடு மக்கள் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. எனவே நீங்கள் கூறிய அந்த விசாரணைப் பிரிவுகள் இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.

கேள்வி: - மாங்காய் பறித்ததற்கும், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இந்நாட்டின் நீதிமன்றம் இரண்டு விதமாகச் செயற்பட்டுள்ளது என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?

பதில் : - ஏழை அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம், அதிகாரமிக்க வசதியானவர்களுக்கு ஒரு சட்டம். இப்போது இருப்பது அவர்களின் சட்டமும், அவர்களின் இருப்புமேயாகும். ஒரே நாட்டின் சட்டம் இன்று இரண்டு விதங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்விடயங்கள் காட்டுவது ஆட்சியா ளர்களின் இருப்பிற்காக சட்டத்தைப் பயன்படுத்துகின்றார்கள். நீதிக்காக சட்டத்தைப் பயன்படுத் துகின்றார்கள் என்பதல்ல. உண்மையிலேயே அரசாங்கத்திற்கு இவற்றை சரி செய்து கொள்வதற்கான தேவையுமில்லை. இன்று மக்கள் கேட்பது நீதி நியாயத்தையேயாகும். சட்டத்தினால் நீதி நியாயம் கிடைப்பதில்லை. நீதியை நிலைநாட்டுங்கள் என்பதே மக்களின் கோரிக்கையாகும். எனவே இந்த முதலாளித்துவ ஆட்சியில் மக்களுக்கு சரியான நீதி நிலைநாட்டப்படுவதில்லை. .

கேள்வி -: இவ்வாறான அனைத்து செயற்பாடுகளையும் சரி செய்து கொள்வதற்கு புதிய அரசியலமைப்புத் தேவை. அனேகமானோர் கோரிக்கை விடுத்திருக்கும் போது சமயத் தலைவர்கள் உள்ளிட்ட எதிர்கட்சியினர் புதிய அரசியலமைப்புத் தேவையில்லை எனக் கூறுகின்றனரே...?

பதில் -: தற்போதுள்ள அரசியலமைப்பு 39 வருடங்கள் பழைமையானது. இந்த 39 வருடங்களினுள் உலகம் மிகவும் மாற்றமடைந்துள்ளது. புதிய சமூகம் உருவாகியுள்ளது. அந்த புதிய சமூகத்திற்கு சட்டம் ஒன்று தேவை. தற்போதுள்ள அரசியலமைப்பு காலாவதியாகியுள்ளது. இதனால் நாட்டுக்கு புதிய அரசியலமைப்புத் தேவை என்ற தெளிவான நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.

அந்த புதிய அரசியலமைப்புத் தேவைப்படுவது ஜனநாயகத்தை ஏற்படுத்தி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை இல்லாமலாக்கி, தேர்தல் முறையினை மாற்றி மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய உறுப்பினர்களை உருவாக்குவதற்கேயாகும். அதே போன்று அனைத்து இனத்தினதும் உரிமை களைப் பாதுகாப்பதற்குமாகும். 30 வருட யுத்தத்தை முடித்து நாம் புதிய அத்தியாயத்திற்குள் வந்திருக்கின்றோம். இன்னும் மரணித்துப் போன புலியின் தோலை நசுக்கி, புலியின் நகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை. எனவே ஜே. வி. பி என்ற வகையில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற மிகத் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.

கேள்வி: - ஸ்ரீ.ல.சு.கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை யினை நீக்குவதற்கு விரும்பவி ல்லை. அதே போன்று புதிய அரசியலமைப்பு தேவையில்லை என மகா சங்கத்தினரும் சுட்டிக் காட்டுகின்றனரே...?

பதில்: - உண்மையிலேயே தற்போது பொய்யான தகவலே பரப்பப்பட்டிருக்கின்றது. தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பு உருவாக்க முன்மொழிவுகள் அரசியலமைப்பு நகல் என்ற கருத்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இதனால்தான் இந்த பிக்குகள் போன்ற சமயத் தலைவர்கள் குழப்பமடைந்திருக்கின்றார்கள். உண்மையில் பார்த்தால் புதிய அரசியலமைப்புக்கான நகல் முன்வைக்கப்பட்டோ அல்லது தயாரிக்கப்படவோ இல்லை. இப்போதிருப்பது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்திருக்கும் கருத்துக்களும், ஆலோசனைகளும் மாத்திரமேயாகும். எனவே யாரும் குழப்பமடையத் தேவையில்லை.

அடுத்த விடயம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை வைத்துக் கொண்டு அரசிய லமை ப்பை மாற்றுமாறு ஸ்ரீ.ல.சு.கட்சி கூறுகின்றது. அந்த கருத்து தவறானது. கடந்த ஜனாதிபதி தேர்த லின் போது இந்த நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையினை நீக்குவேன் என மக்களுக்கு வாக் குறுதி வழங்கியது ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவரான தற்போதைய ஜனாதிபதிதான்.

அவர் சோபித்த தேரரின் இறுதிச் சடங்கின் போது அவரது உடலுக்கு முன்னால் நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்குவதாக சபதமிட்டு வாக்குறுதியளித்தார். எனவே கட்சி எதைக் கூறினாலும் அவரால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. புதிய அரசியலமைப்பு தேவை எனக் கேட்பதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை நீக்குவதற்கேயாகும். இதற்காகத்தான் சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்கிறோம். ஸ்ரீ.ல.சு. கட்சி தமது அதிகாரத் தேவைகளுக்காக செயற்படுவது இந்நாட்டிற்கு பெரும் பிரச்சினை.

கேள்வி: - நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை நீக்காமல் தற்போதைய ஜனாதிபதி 2020ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டால் எப்படியாவது தோற்கடிப்போம் என நீங்கள் அண்மையில் கூறியிருந்தீர்களே?

பதில்: - ஆம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாம் மஹிந்த ராஜபக்ஷவிடத்திலும் இந்த விடயத்தினைக் கூறியிருந்தோம். மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி பதவியைக் கோருவதற்கு உரிமையில்லை, சட்ட ரீதியான அதிகாரம் இல்லை, சட்ட விரோதமான ஜனாதிபதித் தேர்தலை நடாத்த வேண்டாம் என்றும், அவ்வாறு சென்றால் எப்படியாவது தோற்கடிப்போம் என்றும் கூறியிருந்தோம்.

தற்போதைய ஜனாதிபதிக்கும் எடுத்துக் கூறியிருக்கின்றோம், நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்காது மீண்டும் போட்டியிட முனைந்தால் நாம் கட்சி என்ற ரீதியில் கண்டிப்பாக நாம் அவரைத் தோற்கடிப்போம் என்றும் அது மாத்திரமல்ல, அந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை நீக்குவ தற்குத் தேவையான கூடிய பங்களிப்பை நாம் செய்வோம். ஜனாதிபதி மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய விடயத்திற்கே மக்கள் ஆணை கிடைத்தது. அந்த மக்கள் ஆணையினை எட்டி உதைத்து விட்டு மஹிந்த செய்த வேலையைச் செய்ய முனைந்தால் நாம் கண்டிப்பாக மைத்திரிபால சிறிசேனவையும் தோற்கடிப்போம்.

கேள்வி: - சர்வதேசத்தின் தேவைக்காகவே எமது நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி இடம்பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் -: சர்வதேசத்திற்கும், ஏகாதிபத்தியவாதிகளுக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கின்றன. நாம் அவர்களைத் தலையிட விடாது, அவர்கள் தலையிடுவதற்கு முயற்சிப்பதற்கான காரணத்தை நீக்க வேண் டும். அதனால்தான் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குவதைப் போன்று வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்ப, இடம்பெயர்ந்த மக்க ளை இந்நாட்டின் தேசிய பிரச்சினையாகக் கருதி தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளு மாறு யுத்தம் நிறைவடைந்த உடனேயே நாம் கட்சி என்ற வகையில் பல கோரிக்கைகளை முன்வைத்து கூறினோம்.

இந்த விடயங்களைப் பயன்படுத்திக் கொண்டுதான் ஐக்கிய நாடுகள் அமைப்பு எமது நாட்டில் தலை யிட்டது. இன்றிருப்பதும் அதே பிரச்சினைதான். நாம் எமது நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாக் காவிட்டால், ஜனநாயகத்தைப் பாதுகாக்காவிட்டால் அவர்களுக்கு எமது நாட்டில் தலையீடு செய்வ தற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. ஏகாதிபத்தியத்தின் தலையீடுகளை உண்மையாகவே தோற்கடிக்க முடிவ து அவர்கள் தலையிடுவதற்கான காரணங்களை ஒழிப்பதன் மூலம் மாத்திரமேயாகும். அவர் கள் கூறும் வரையில் இருக்கத் தேவையில்லை. இந்த விடயங்களை நவநீதம்பிள்ளை முன் மொழிவுகளாகக் கொண்டு வந்தார். நாம் இதனை 2009 மே மாதம் 26ம் திகதியே கூறிவிட்டோம். இந்த அரசாங்கம் சமர்பித்துள்ள ஒன்றிணைந்த அறிக்கையில் இதனைச் செய்வதாக வாக் குறுதியளித்தது. எனினும் நவநீதம் பிள்ளை கூற முன்னரே நாம் கட்சி என்ற வகையில் இதனைக் கூறி னோம். அன்று நாம் கூறிய விடயங்கள் செய்யப்பட்டிருந்தால் இன்று இந்த தலையீடுகள் இருந்திருக்காது.

கேள்வி: - புதிய அரசியலமைப்பின் மூலம் பெடரல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது என சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அதே போன்று எதிர்கட்சியினரும் இவ்விடயத்தை எடுத்துக் காட்டுகின்றனர். இதன் உண்மை நிலை என்ன?

பதில் :- எமது நாடு சிறியதொரு நாடு. இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர், மலே போன்ற இனத்தவர்கள் வாழ்கின்றனர். எனவே இந்நாட்டிற்கு ஒரு போதும் பெடரல் முறை சரிவராது. அதனைச் செய்யவும் முடியாது. அவ்வாறு யாராவது கேட்பார்களாயின் அது ஒரு கனவே. கற்பனை மாத்திரமேயாகும். வடக்கை எடுத்துக் கொண்டால் தமிழ் மக்களின் பெரும்பாலானோர் வடக்கில் இல்லை. பெடரல் ஆட்சிக்கு இலங்கையில் இடமில்லை. இலங்கைக்கு ஒரு போதும் பெடரல் ஆட்சி சரிவராது. கொண்டு வரப்படவுள்ள அரசியலமைப்பில் யாரும் அவ்வாறு பெடரல் ஆட்சி யைக் கேட்கவும் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பும் இன்று பெடரல் ஆட்சியைக் கேட் பதில்லை.

கேள்வி: எனினும் வடக்கு கிழக்கு இணைந்த ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றதே...?

பதில் - : அதனை ஒரு போதும் செய்ய முடியாது. இலங்கை வரலாற்றில் மக்கள் விடுதலை முன்னனிதான் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வடக்கு கிழக்கை பிரித்தது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் பிரசுரித்த முதலாவது வர்த்தமானி அறிவித்தலானது வடக்கு கிழக்கு இணைப்பை நீடிப்பதற்கானதாகும். இன்று தம்பட்டம் அடிப்பவர்களுக்கு அன்று உண்மையான தேவை இருந்திருந்தால் இவற்றை நிறுத்தியிருக்கலாம். அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்காவிட்டால் எமக்கு நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்திருக்காது. இந்தப் பிரச்சி னையும் வந்திருக்காது. மக்கள் விடுதலை முன்னனிதான் இந்நாட்டில் அந்த மாகாணங்கள் இரண்டு மாகாணங் களாக இருப்பதற்காகத் தலையீடு செய்தது. எமது நாட்டின் மக்கள் பகிர்வுக்கமைய அந்த மாகாணம் ஒரு மாகாணமாக இருக்க முடியாது. எனவே அந்த இரு மாகாணங்களையும் ஒரு போதும் ஒன்றிணைக்க முடியாது. நாம் மக்கள் விடுதலை முன்னனி என்ற வகையில் தெளிவாகவே கூறுகின் றோம், புதிய அரசியலமைப்பில் அவ்வாறு நடக்காது.

கேள்வி :- எவ்வாறாயினும் அதிகாரப் பகிர்வு என்ற விடயத்திற்கும் பெரும் எதிர்ப்பு எழுகின்றது. இதனடிப்படையில் ஆளுநர்களுக்கு இருக்கும் அதிகாரங்களை முதலமைச்சருக்கு வழங்குவதே முக்கியமாக அமைகின்றது?

பதில்: - நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்கும் நிலையின் கீழ் ஆளுநரின் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என நாம் கூறப் போவதில்லை. எனவே ஆளுநரின் அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்க ப்பட்டால் இந்நாட்டில் உருவாவது பெயரளவிலான ஜனாதிபதி ஒருவரேயாகும். அவ்வாறான நிலை யில் ஆளுநருக்கு அதிகாரங்கள் இருக்கவே வேண்டும். ஆனால் இந்த அதிகாரங்களைக் கோரி யது தெற்கின் முதலமைச்சர்களே. அவ்வாறு கேட்பது அவர்களுக்குத் தேவையான வகையில் விளை யாட்டுக்களைக் காட்டுவதற்கேயாகும்.

கேள்வி :மற்றொரு குற்றச்சாட்டு என்னவெனில், புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு உள்ள இடம் இல்லாமலாக்கப்பட்டுள்ளது என்ற விடயம். அவ்வாறான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதா?

பதில்: - தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் பிரகாரம் எவரும் பௌத்த மதத்திற்கு இருக்கும் இடத்தை இல்லாமலாக்க வேண்டும் என கூறவில்லை. கருத்துக்களை முன்வைத்த அனைவருமே கூறிய விடயம் பௌத்த மதத்திற்கு இருக்கும் இடத்தை அப்படியே வைத்துக் கொண்டு ஏனைய மதங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றேயாகும். இன்று ஒரு குழு அமைப்பாக ஒன்று சேர்ந்து கொண்டு இனவாதம், மதவாதத்தை கிழப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது. இவை வங்குரோத்து அடைந்த அரசியல் குழுவினர் மேற்கொள்ளும் செயல். அவர்களின் அதிகார பேராசைகளுக்காக வரலாற்றிலிருந்தே செய்து வந்திருப்பது இனவாதத்தையும், மதவாதத்தையும் கிழப்பியதேயாகும். இன்று எமது பௌத்த தேரர்களுக்குச் சென்றுள்ள தவறான கருத்து க்களும் அந்த சந்தர்ப்பவாதிகள் உருவாக்கிய கருத்துக்களே.

கேள்வி: - இந்த புதிய அரசியலமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால், பாராளுமன்றத்திற்கு குண்டு வீச வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கூறியுள்ளாரே...?

பதில் -: அவரின் கதைகள் ஐந்து சதத்திற்கு பெறுமதியில்லாதது. அவர் அரசியல் கல்லறையில் வீழ்ந்த ஒருவர். நாம் எனில் அவர் கூறும் விடயங்களை ஒரு போதும் கணக்கெடுப்பதில்லை. அவரின் வாய் வீச்சால் ஒவ்வொரு இடங்களுக்குச் சென்று ஒவ்வொரு கதைகளைக் கூறுகின்றார். அவ்வாறு கூறும் எதுவும் செல்லுபடியற்றது.

கேள்வி: -சைற்றம் எதிர்ப்பு நடவடிக்கையில் மக்கள் விடுதலை முன்னணி கட்சி முன்னணி வகிக்கின்றது. உங்களது கட்சியின் நிலைப்பாடு இந்நாட்டிற்கு தனியார் கல்வி தேவையில்லை என்பதா?

பதில்: - சைற்றம் நிறுவனம் என்பது சட்ட விரோதமானது என்பதோடு தரத்தில் குறைந்த வைத்தியர்களை உருவாக்கும் ஒரு நிறுவனம். உண்மையிலேயே அது திருட்டு பட்டத்தை வழங்கும் ஒரு கடை. சைற்றம் நிறுவனம் மூடப்பட வேண்டும். இவ்விடயத்தில் இரு பேச்சுக்கள் இல்லை. தற்போதைய உயர் கல்வி அமைச்சர் எதிர்கட்சியில் இருக்கும் போது இது சட்ட விரோதமானது, தரமற்றது எனக் கூறிய ஒருவர். எனவே அன்று அவர் ஏற்றுக் கொண்ட விடயத்தை இன்று வாதங்களின்றி ஒழிக்கப்பட வேண்டும்.

கேள்வி: - சைற்றம் நிறுவனத்திற்கு எதிராகச் செயற்பட்டவர்களுக்கு சாபம் உண்டாகட்டும் என உயர் கல்வி அமைச்சர் கூறியிருக்கின்றார். இது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: - இலவசக் கல்வியியின் உண்மையான உரிமையினை அனுபவிக்கும் இந்நாட்டின் இலட்சக்கணக்கான மாணவர்கள், அந்த மாணவர்களின் பெற்றோர்களின் சாபம் அந்த கூற்றைத் தெரிவித்தவர் மீதே உண்டாகட்டும். எனவே நாம் புதிதாக இது தொடர்பில் பேச வேண்டியதில்லை.

துமிந்த அளுத்கெதர
தமிழில்: எம்.எஸ்.முஸப்பிர்
(புத்தளம் விஷேட நிருபர்)

 


Add new comment

Or log in with...