காமினி செனரத் உட்பட மூவரும் முன்பிணை கோரி மனுத் தாக்கல் | தினகரன்


காமினி செனரத் உட்பட மூவரும் முன்பிணை கோரி மனுத் தாக்கல்

நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி ஆளணியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவரும் தாங்கள் கைது செய்யாமல் இருப்பதைத் தடுக்கக் கோரி நீதிமன்றத்தில் தனித்தனியாக அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நீதிமன்ற விசாரணைகளுக்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் முகமாகவே இவர்கள் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான 04 பில்லியன் ரூபா நிதி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களாக கோட்டை நீதவான் இவர்கள் மூவரையும் பெயரிட்டுள்ளது. அதேநேரம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாதவாறு நீதிமன்றம் இம் மூவருக்கும் எதிராக தடை விதித்துள்ளது.

காமினி செனரத், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர், பியதாச பலகே, சமுர்த்தியின் முன்னாள் ஆணையாளர் நீல் பண்டார ஹப்புவின்ன ஆகிய மூவரும், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நிதி மோசடி விசாரணைப்பிரிவின் பணிப்பாளர், சட்டமா அதிபர் மற்றும் ஏனைய பலருக்கும் எதிராகவே இந்த அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...