சம்பந்தன் வெளிப்படுத்தும் சாதகமான அணுகுமுறை | தினகரன்

சம்பந்தன் வெளிப்படுத்தும் சாதகமான அணுகுமுறை

 

அரசியலமைப்புச் சபை வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தின் மூன்றாம் நாள் அமர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஆற்றியிருக்கும் உரை அனைத்துத் தரப்புகளாலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிதொன்றாகும்.

அரசிலமைப்புச் சபையை 1972 ஆம் ஆண்டுக்கு பின்னோக்கி அழைத்துச் சென்றுள்ள அவரது உரை காத்திரமானதும் சிந்திக்கத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. ஜனநாயகத்துக்கு உயரிய இடமளிக்கப்பட வேண்டுமெனவும் அது பாரபட்சமாக இருந்து விடக் கூடாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாற்பது வருடங்களுக்குப் பிறகு புதிதாகவே ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.1977 இல் ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான அரசு 5/6 பெரும்பான்மையுடன் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி 1972 இல் உருவாக்கப்பட்ட அரசியலை முற்றாக நிராகரித்து 1978 இல் புதிய அரசியலமைப்பைத் தயாரித்தார்.

 72இலும் 78இலும் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்புகள் இரண்டுமே ஆட்சியிலிருந்த கட்சிகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டன. ஆனால் 2015இல் அதிகாரத்துக்கு வந்த இன்றைய அரசாங்கமானது முற்றிலும் வேறுபட்ட விதத்தில் பாராளுமன்றப் பிரேரணையின் மூலமாக முழுப்பாராளுமன்றத்தையும் அரசியலமைப்புச் சபையாக மாற்றி சகல தரப்பினர்களதும் கருத்துக்களையும் பெறறுக் கொண்டு புதிய அரசியலமைப்பைத் தயாரிக்க முனைப்புக் காட்டியுள்ளது.

இங்கு நூறு வீதமாக ஜனநாயகத்துக்கே வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு 40 வருடங்களுக்குப் பின்னர் தயாரிக்கப்படும் இந்த புதிய யாப்பானது முற்றிலும் வித்தியாசமான விதத்தில் முன்னெடுக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சுடடிக்காட்டி இருப்பது போன்று நாட்டின் உயர்ந்த சட்டமானது நாட்டு மக்களின் முழு அளவிலான ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட வேண்டும். சகல பிரஜைகளினதும் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படுவதாக அமைய வேண்டும்.

முக்கியமாக சிறுபான்மை மக்களின் குறிப்பாக தமிழ் மக்கள் நீண்ட காலமாக கோரிவரும் சுயாட்சி என்ற பிரச்சினையை இந்த நல்லாட்சி அரசின் காலத்திலேயே தீர்க்க வேண்டும் எனவும் இதனைத் தவறவிட்டால் சர்வதேச அழுத்தம் மேலும் மோசமடையலாம் எனவும் சம்பந்தன் வலியுறுத்திக் கூறி இருக்கின்றார்.

வெளிநாட்டு அழுத்தங்கள் மூலம் பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதை விட தாங்களாக ஒன்றுபட்டுத் தீர்த்துக் கொள்வதானது சிறந்தது என்று தமிழினம் விரும்புகின்றது என்ற தொனியில் எதிர்க்கட்சித் தலைவரின் உரை அமைந்துள்ளது. இது சாதகமான போக்கையே வெளிக்காட்டி நிற்பதை உணர முடிகின்றது. தேசிய இணக்கப்பாடு இதில் பிரதானமானதாகும். பொதுவான விடயங்களின் தேசிய இணக்கப்பாடு எட்டப்படுமானால் பிரச்சினைக்கான தீர்வு நெருங்கி வருவதற்கான சாதகத் தன்மையை ஏற்படுத்த முடியும்.

ஏற்கனவே மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதி இறுதிவரை நிறைவேற்றப்படவில்லை. அன்று அவர் தேசியப்பிரச்சினையை நீடிக்க விடாமல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து அல்லது புதியதொரு அரசியலமைப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்துடன் தீர்வு காணப்படுமென சர்வதேசத்துக்கு கூறியிருந்தார். அதியுச்ச அதிகாரப் பகிர்வுபற்றிக் கூட அவர் அன்று கூறிவந்தார்.

ஆனால் இன்று அதிகாரத்திலிருந்து மக்களால் நிராகரிக்கப்பட்டதன் பின்னர் அவர் தனது அன்றைய நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டுள்ளார். நாட்டின் தலைவராக இருந்த ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது அரசியல் நாகரிகமாக இருக்க முடியாது. இதனை சுயநல நோக்குடனான அரசியலாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது.

சம்பந்தனின் மற்றொரு ஆதங்கத்தையும் இவ்விடத்தில் நோக்க வேண்டியுள்ளது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு எட்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணங்கள் இன்றளவும் நிவர்த்தி செய்யப்படவில்லை. யுத்தம் முடிந்த பின்னரும் கூட நேர்மையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாமலிருப்பது தூரதிர்ஷ்டவசமானது என்று அவர் இங்கு குறிப்பிட்டிருக்கிறார்.

சம்பந்தனின் உரையிலிருந்து நாம் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகம் இன்று விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வந்திருக்கின்றது. விட்டுக்கொடுப்பு என்பதன் அர்த்தம் எதைத் தந்தாலும் ஏற்றுக் கொள்வது என்பதல்ல. தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடியதான அவர்களது அரசியல் இருப்பை,ஆட்புல ஒருமைப்பாடு, இறைமை என்பன பாதுகாக்கப்படக் கூடிய தீர்வாக அமையப் பெறல் வேண்டும்.

நாடு பிளவுபடாத சகல இன மக்களும் ஜனநாயக உரிமைகளை அனுபவிக்கக் கூடியதான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான அரியதொரு தருணம் இன்று உருவாகியுள்ள நிலையில் இந்த புதிய அரசியலமைப்புக்கு வலுச் சேர்க்க வேண்டிய கடப்பாடு ஜனநாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் கடப்பாடாகும். எதிர்க்கட்சித் தலைவரின் சிந்தனைப் போக்கு ஏனைய தலைவர்களிடமும் ஏற்பட வேண்டும் என்பதே நாட்டின் எதிர்பார்பாகும்.


Add new comment

Or log in with...