Friday, March 29, 2024
Home » இஸ்ரேலின் தரைப்படை போர் விமானங்களுடன் மத்திய காசாவுக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல்

இஸ்ரேலின் தரைப்படை போர் விமானங்களுடன் மத்திய காசாவுக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல்

- தரைவழி தாக்குதலுக்கு ஒத்திகை: உயிரிழப்பு அதிகரிப்பு

by Rizwan Segu Mohideen
October 28, 2023 9:42 am 0 comment

இஸ்ரேலிய தரைப்படை போர் விமானங்களின் உதவியோடு நேற்று (27) காசாவுக்குள் ஆழ ஊடுருவியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வரும் இஸ்ரேல் தொடர்ந்து இரண்டாவது நாளாகவே காசாவுக்குள் படைகளை அனுப்பியுள்ளது.

இந்தப் போர் 21 நாட்களைத் தொட்ட நிலையில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்று இடைவிடாது தொடர்ந்தது. மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஐரோப்பிய தலைவர்கள் அழைப்பு விடுத்தபோதும் இஸ்ரேல் தனது தாக்குதல்களில் இருந்து பின்வாங்காது நாளுக்கு நாள் அதன் தீவிரத்தை அதிகரித்து வருகிறது.

காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 7000ஐ தாண்டி வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் ஆரம்ப நாட்களில் தினசரி 200 தொடக்கம் 300 பேர் வரை கொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது நாளொன்றுக்கு 700க்கும் அதிகமானோர் கொல்லப்படும் அளவுக்கு மோசடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள் 400க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்திருந்தது.

காசாவில் இஸ்ரேல் முழு முற்றுகையை கடைப்பிடித்து வரும் சூழலில் அங்கு மனிதாபிமான நெருக்கடியும் மோசமடைந்துள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இதுவரை அந்தப் பகுதியில் எகிப்துடனான ரபா எல்லை வழியாக 74 உதவி லொறிகள் நுழையவே அனுமதி கிடைத்துள்ளது. எனினும் இவை போதுமானதாக இல்லை என்று உதவிக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன. மோதல் வெடிப்பதற்கு முன்னர் தினசரி காசாவுக்கு சுமார் 500 லொறிகள் சென்றதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

காசாவில் இருக்கும் 35 மருத்துவமனைகளில் 12 மூடப்பட்டிருப்பதோடு எரிபொருள் தீர்ந்து வரும் நிலையில் தமது செயற்பாடுகள் கணிசமான அளவு குறைக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசாவில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளால் மக்கள் விரைவில் மரணிக்க ஆரம்பிப்பார்கள் என்று ஐ.நா எச்சரித்துள்ளது. “காசா மக்கள் குண்டுகள் மற்றும் தாக்குதல்களால் மாத்திரம் உயிரிழப்பதில்லை. காசாவில் நிலவும் முற்றுகையின் விளைவால் மேலும் பலர் உயிரிழப்பார்கள்” என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசாரினி தெரிவித்துள்ளார்.

காசா எல்லையில் ஆயிரக்கணக்கான துருப்புகளை குவித்து வைத்திருக்கும் இஸ்ரேல் மத்திய காசா மீது குறுகிய காலத்திற்கு தரைவழியாக ஊடுருவிச் சென்றது. போர் விமானங்கள் மற்றும் ஆயுதமற்ற விமானங்களின் உதவியோடு தரைப் படை மத்திய காசாவில் கூடுதல் இலக்குகளில் சுற்றிவளைப்புகளை நடத்தியது என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.

இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட கறுப்பு வெள்ளை படத்தில் கவச வாகனத் தொடரணி ஒன்றும் தாக்குதல் ஒன்றுக்குப் பின்னர் வானில் பெரும் புகைமூட்டம் எழுவதும் தெரிகிறது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகார் கூறும் போது, ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் அடுத்த கட்டப் போருக்கு தயாராவதற்காக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், வரும் நாட்களில் காசாவில் பீரங்கி தாக்குதல்களை தொடரும் என்றார்.

இந்நிலையில் ஹமாஸின் மேற்குக் கான் யூனிஸ் படைப் பிரிவின் தளபதி மிதாத் மபஷரை தமது படையினர் கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அது கூறியது.

இதேவேளை போர் நிறுத்த உடன்பாடு ஒன்று எட்டப்படும் வரை மேலும் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்தி வைத்திருப்பதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் அதிகாரியான அபூ ஹமீதை மேற்கோள்காட்டி ரஷ்யாவின் கமர்சன் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி கடத்தி வரப்பட்ட இந்தப் பணயக் கைதிகள் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பதற்கும் காலம் தேவைப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் 229 பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய தலைமை இராணுவ பேச்சாளர் டானியல் ஹகரி தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு இதுவரை நான்கு பணயக்கைதிகளை விடுவித்துள்ளது. ஹமாஸ் பிரதிநிதிகள் ரஷ்யா விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்திருக்கும் நிலையில் இஸ்ரேலிய படையினரால் நேற்று (27) மேலும் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஜெனின் பகுதியில் மூவரும், கல்கிலியாவில் ஒருவரும் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி மோதல் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சராசரியாக மாதாந்தம் கொல்லப்படும் பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலின் வடக்கு எல்லையில் கடந்த மூன்று வாரங்களாக ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இராணுவத்திற்கு இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலுடனான லெபனான் எல்லையில் ஒன்றுக்கு மேற்பட்ட வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

வடக்கு இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா போராளிகள் ஊடுருவி தாக்குவதை தவிர்ப்பதற்கு இஸ்ரேல் படைகள் மரங்கள், புதர்களுக்கு தீ வைத்து அழித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் இஸ்ரேல் எல்லைக்கு அருகில் இருக்கும் எகிப்தின் டாபா நகரில் இடம்பெற்ற ஏவுகணை தாக்குதல் ஒன்றில் ஆறு பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றுக் காலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் அம்பூலன்ஸ் நிலை ஒன்று மற்றும் காசா மருத்துவமனை நிர்வாகத்திற்குள் இருக்கு கட்டிடம் ஒன்றில் ஏவுகணை விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT