Home » இலங்கை மீது மீண்டும் நாட்டம் கொள்ளும் சுற்றுலாப்பயணிகள்!

இலங்கை மீது மீண்டும் நாட்டம் கொள்ளும் சுற்றுலாப்பயணிகள்!

by Rizwan Segu Mohideen
October 28, 2023 6:00 am 0 comment

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை சமீப காலமாக அதிகரித்திருப்பதாக மகிழ்ச்சி தருகின்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து சமீப காலமாக படிப்படியாக மீண்டு வருகின்ற இலங்கையைப் பொறுத்தவரை இது நல்லதொரு செய்தியாகும். சுற்றுலாப் பயணிகளின் வருகை மென்மேலும் அதிகரிக்குமானால் இலங்கைக்கு அந்திய செலாவணி வருமானம் அதிகரிப்பதுடன், பொருளாதார நெருக்கடியும் விரைவில் தீர்ந்து விடுமென்று நாம் நம்பலாம்.

உலக சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரை எமது நாடு மிகவும் பிரபல்யமான நாடு ஆகும். அழகிய கடற்கரைகள், மிகுந்த வனப்பு நிறைந்த மலையகப் பிரதேசம் மற்றும் தொல்லியல் அடையாளங்கள் உள்ள இடங்கள் என்றெல்லாம் இலங்கையில் மிகவும் அழகிய இடங்கள் ஏராளமாக உள்ளன. இலங்கையின் இயற்கை அழசை இரசிப்பதற்காகவும், இயற்கை வாழ்க்ைக முறையை அனுபவிப்பதற்காகவும் இலங்கைக்கு வருகை தருவதற்கு உலக நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் விரும்புவதுண்டு.

யுத்தம் தீவிரமடைவதற்கு முன்னர் இலங்கைக்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். மேற்கு நாடுகளைச் சேர்ந்த பெருமளவு உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததால் எமது நாடு பெருந்தொகை வருமானத்தை அக்காலத்தில் ஈட்டி வந்தது. ஆனால் யுத்தம் உக்கிரமடைந்ததும் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது படிப்படியாகக் குறைந்து போனது.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. நாடெங்கும் அமைதியான சூழ்நிலை நிலவியதனால் இலங்கையின் எப்பாகத்துக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வரக்கூடியதாக இருந்ததால், உலகின் பல நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர்.

ஆனால் அந்த சுமுகநிலைமை அதிக காலம் நீடிக்கவில்லை. ஈஸ்டர் பண்டிகையன்று பயங்கரவாதக் குழுவொன்று நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் அதலபாதாளத்துக்குச் சென்றது. பயங்கரவாதிகள் மேற்கொண்ட ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக இலங்கையின் பெருமளவு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதனால் உருவான அச்சம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதற்கே அச்சம் கொண்டனர்.

அதன் காரணமாக எமது நாட்டுக்கு ஏற்பட்ட வருமான இழப்பு கொஞ்சநஞ்சமல்ல. ஈஸ்டர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் காரணமாக சுற்றுலாத்துறை பூச்சிய நிலைமைக்குச் சென்றிருந்ததென்றும் கூறலாம். குண்டுத்தாக்குதல் அச்சம் இலங்கையை விட்டு நீங்குவதற்கு சிறுது காலம் சென்றது. படிப்படியாக சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரத் தொடங்கினர். நாட்டுக்கு வருமானமும் கிடைக்கத் தொடங்கியது.

ஆனால் அந்த நிம்மதியும் சிறிது காலத்துக்ேக நீடித்தது. உலகப் பெருந்தொற்றான கொவிட் இலங்கையிலும் பரவியதன் காரணமாக உலக நாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது மீண்டும் தடைப்பட்டது. சுமார் ஒன்றரை வருட காலத்துக்கு இவ்வாறான நிலைமை நீடித்தது எனலாம். இலங்கைக்கு மாத்திரமன்றி உலகநாடுகள் எதற்குமே சுற்றுலாப்பயணிகள் அக்காலத்தில் செல்லவில்லை. சுற்றுலாப் பிரதேசங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.

நாட்டுக்கு அந்நிய செலாவணி வருமானம் கிடைப்பது முற்றாகவே பாதிக்கப்பட்டமை ஒருபுறமிருக்க, சுற்றுலாத்துறையை நம்பி மறைமுகமான வருமானம் ஈட்டி வந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அக்குடும்பங்கள் அடுத்தவேளை உணவுக்கே அல்லல்பட வேண்டியதொரு நிலைமை அக்காலத்தில் உருவானது. வருடக்கணக்காக நீடித்த இந்நிலைமையானது தற்போது படிப்படியாக சீரடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அண்மைக்காலமாக அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. பொருளாதார நெருக்கடியும் படிப்படியாக சீரடைந்து வருவதனால், சர்வதேச நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கை மீது மீண்டும் நாட்டம் கொள்ளத் தொடங்கியுள்ளனர். அவர்களது வருகை அதிகரிக்குமானால் எமது நாட்டின் பொருளாதார நெருக்கடி குறைவதற்கான வாய்ப்பு உள்ளதென்பதை மறுப்பதற்கில்லை.

சுற்றுலாத்துறையினால் வருமானம் ஈட்டுகின்ற நாடுகள் உலகில் அதிகம் உள்ளன. எமது அயல்நாடான மாலைதீவும் அவற்றில் ஒன்றாகும். முதலீடு இல்லாமல் வருமானம் தருகின்ற ஒரு துறையாக சுற்றுலாத்துறை உள்ளது. சுற்றுலாத்துறைக்கு மிகவும் வாய்ப்பான ஒருநாடாக இலங்கை உள்ளது. எனவே சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT