கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்டு பொருளாதாரத்தை முன்னேற்றும் திட்டம் | தினகரன்

கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்டு பொருளாதாரத்தை முன்னேற்றும் திட்டம்

 நல்லாட்சி அரசாங்கம் இரண்டு வருடங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதன் எதிர்காலப் பயணம் காத்திரமானதாக அமையும் எனவும்,பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காணக் கூடியதாக இருக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டி இருக்கிறார். கடந்து வந்த பாதை கடினமாகக் காணப்பட்ட போதிலும், அவசரப்படாமல் நிதானமாகச் செயற்பட்டு இரு தேர்தல்களின் போதும் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து விடாமல் முதற்கட்டமான நலன்களைப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இரண்டு வைபவங்களில் பிரதமர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மக்களை உரியமுறையில் சென்றடையுமானால் மக்களால் யதார்த்த நிலையை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். ஜனநாயக விரோத சக்திகளின் திட்டமிட்ட சதிகளை முறியடிக்கும் விதத்திலேயே அரசின் செயற்பாடுகள் உறுதிமிக்கதாக அமைந்திருப்பதை காணக் கூடியதாக உள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஐ.தே.க சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருக்கும் 'முன்னேற்றத்தின் ஒருதுளி' எனும் அறிக்கையின் மூலம் இரண்டு வருடப் பயணத்தின் பலன்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பிரதமர் ஆதாரபூர்வமான தகவல்களைத் திரட்டியெடுத்தே இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

பொருளாதார ரீதியில் மிக மோசமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருந்த நிலையில், நாட்டை 2015 ஜனவரி 8 இல் இன்றைய அரசு பொறுப்பேற்றது. அந்தத் தேர்தலில் நல்லாட்சி அரசு மலர்ந்திருக்காது விட்டால் இலங்கை இன்று உலகின் மரணித்த நாடுகளின் பட்டியலுக்குள் சென்றிருக்கும் என்ற பிரதமரின் கூற்று பிழையானதொன்றல்ல. நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதையே அரசு முதற்பணியாக ஆரம்பித்தது.

இதனிடையே நாட்டின் கடன் பளுவை நிவர்த்திக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளும் அரசு தள்ளப்பட்டிருந்தது. செலுத்தி முடிக்க முடியாத கடன் சுமைக்குள் நாட்டின் எதிர்கால சந்ததியை சிக்க விடாதிருப்பதற்காக கடந்த ஆட்சியினரால் எம்மீது சுமத்தப்பட்ட கடன் சுமையை குறைப்பதற்கு வியூகமொன்றை அமைத்துச் செயற்பட உறுதி பூண்டுள்ளது. சமநிலையான கடன் முகாமைத்துவ முறையொன்றை அரசு அறிமுகம் செய்திருக்கின்றது. இதனூடாக 2020 ஆகும் போது மொத்த கடனின் அளவை 70 சதவீதம் வரை குறைப்பதே இந்த வியூகமாகும்.

அரசின் பொருளாதாரக் கொள்கையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதே நாட்டின் முன்னேற்றத்துக்கு உகந்த வழியாகும். பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் மட்டுமே நாட்டின் வருமானம் அதிகரிக்க முடியும். வருமானமீட்ட முடியாத திட்டங்கள் எதனையும் அரசு முன்வைக்க முற்படவில்லை. அரசின் இலக்கு 2020 ஆகும் போது நடுத்தர வருமானம் பெறும் நாடாக இலங்கையை மாற்றுவதேயாகும். இந்த இலக்கில் வெற்றி பெற முடிந்தால் பொருளாதாரப் பாதையில் கணிசமான தூரத்தை எம்மால் தாண்டக் கூடியதாக இருக்கும்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு யாரையும் நாம் நம்பி இருக்க முடியாது. கிராமிய மட்டத்திலிருந்து வர்த்தகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். கிராமிய மட்டத்தில் உற்பத்திகளுக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும். கிராமியப் பொருளாதாரம் வலுவடைவதன் மூலம் ஸ்திரமான நிலையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வருமானம் தொடர்பில் யாரிலும் நாம் தாங்கி இருக்க முடியாது என்பதன் கருத்து ஒவ்வொரு பிரஜையும் தன்காலில் நிற்க வேண்டும் என்பதாகும்.

தொழில் ரீதியில் நோக்குகின்ற போது இந்த அரசு அரசாங்க ஊழியரின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது. அதேபோன்று தனியார்துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தின் அளவை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சகல இலங்கையரின் வருமானத்தையும் அதிகரிப்பதற்கு முடிந்திருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டி இருக்கின்றார். இப்படியான வருமானம் அதிகரிக்கும் போது கிராமிய மட்டத்திலிருந்து வறுமையை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதை நோக்க முடிகிறது.

கடந்து வந்த பாதையில் சவால்களுக்கு முகம் கொடுத்து தடைகளை அகற்றிப் பயணிக்க முடிந்ததால் பெருமிதமடையக் கூடிய நிலைக்கு தேசம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு வளமடைந்தால் மட்டுமே மக்களால் தலைநிமிர்ந்து நிற்க முடியும். ஆட்சியில் உள்ள அரசுதான் எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போமானால் அது எந்த வகையில் நியாயமானது என்று எம்மை நாமே கேள்விக்குட்படுத்திப் பார்க்க வேண்டும்.

இவற்றுக்கு மத்தியில் பிரதமர் விடுத்திருக்கும் அறைகூவலை மிக முக்கியமானதொன்றாக நோக்க வேண்டியுள்ளது. உலக பொருளாதாரப் போட்டியில் நாம் இணைந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இலங்கை உலகப் பொருளாதாரப் போட்டியில் பங்கேற்கப் பயந்தது. அது அவர்கள் வாங்கிய சுமக்க முடியாத கடன்பளுவினாலாகும். கடந்த அரசு விட்டுச் சென்ற கடனை படிப்படியாக செலுத்தும் அதே சமயம், உலகப் பொருளாதார போட்டிக்குள் தடைகளை அகற்றி தைரியமாக இலங்கை மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் மற்றொரு சவாலை எம்மால் வெற்றி கொள்ள முடியும்.

அரசாங்கத்தின் தூரநோக்குடன் கூடிய பயணம் அடுத்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை பலம் மிக்கதாக கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாகவே கொள்ள வேண்டியுள்ளது.


Add new comment

Or log in with...