உத்தேச யாப்பு தொடர்பில் நம்பிக்கை தரும் நகர்வுகள் | தினகரன்

உத்தேச யாப்பு தொடர்பில் நம்பிக்கை தரும் நகர்வுகள்

நவீன யுகத்திற்கு ஏற்ப நாட்டில் சுபீட்சமும், விமோசனமும் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தோடு இந்நாட்டில் வாழும் சகல மக்கள் மத்தியிலும் சக வாழ்வையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியமும் முக்கியத்துவமும் ஆழமாக உணரப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் இவற்றுக்குப் பெரிதும் பங்களிக்கக் கூடிய வகையிலான புதிய அரசியலமைப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதற்கு இணக்கப்பாட்டு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதுவும் கடந்த கால யாப்புக்களில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தவே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இதன் நிமித்தம் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றியதோடல்லாமல் பல்வேறு நடவடிக்கைகளும் அர்ப்பணிப்போடு முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தடிப்படையில் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அந்த அறிக்கை மீதான விவாதம் நேற்றுமுன்தினம் முதல் அரசியலமைப்பு பேரவையில் இடம்பெறுகின்றது. என்றாலும் இங்கு முதலில் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமானது. அதாவது இது உத்தேச அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையே அன்றி இது ஒரு அரசியலமைப்பு அல்ல. இது ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கை மாத்திரம்தான்.

இருந்தும் தற்போதைய இணக்கப்பாட்டு அரசாங்கம் நாட்டுக்கு ஏற்ற அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்னெடுத்து வரும் இந்நடவடிக்கைகளை குழப்பி அதன் மூலம் அற்ப அரசியல் இலாபம் தேடுவதில் கூட்டு எதிரணியினரும், சில இனவாதிகளும் முயற்சித்து வருகின்றனர். இதன் நிமித்தம் பொய்களையும், சந்தேகங்களையும் மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். இதன் வெளிப்பாடாக உத்தேச யாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சந்தேககக் கண்கொண்டு நோக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு பௌத்த பீடங்கள் விடுத்திருக்கும் அறிக்கைகளும் நல்ல சான்றாக விளங்குகின்றன.

ஆனால் கூட்டு எதிர்க்கட்சியினரும், சில இனவாதிகளும் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டு 40 வருடங்களான போதிலும் அது குறைபாடுகள் அற்றது, பூரணத்துவம் மிக்கது எனக் கருதுகின்றனர் போலும். ஆனால் இந்த யாப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவே அதனை அறிமுகப்படுத்திய முதல் பத்து வருட காலத்திற்குள்ளேயே 13 திருத்தங்களை மேற்கொண்டிருக்கின்றார். கடந்த 40 வருடங்களில் சுமார் 20 திருத்தங்கள் இந்த யாப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன்படி இது பூரணத்துவம் அற்ற யாப்பு என்பதுடன், அது காலசூழ்நிலைகளுக்கு ஏற்ப திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

அதேநேரம் இந்த யாப்பில் சுமார் 20 திருத்தங்களை மேற்கொண்ட போதிலும் நாட்டில் சுபீட்சமோ, மக்கள் மத்தியில் சகவாழ்வு, நல்லிணக்கமோ கட்டியெழுப்பப்படவில்லை. அத்தோடு பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாது தொடர்ந்த வண்ணமுள்ளன. இந்நாடு சுதந்திரமடையும் போது இந்நாட்டுக்கு கீழ் மட்டத்தில் காணப்பட்ட பல நாடுகள் இலங்கையைப் பின்தள்ளி பல மடங்கு முன்னேறி அபிவிருத்திப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு பலவேறு விடயங்களிலும் கவனம் செலுத்திய இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் தலைவர்கள் நாட்டின் விமோசனத்திற்கும், சுபீட்சத்திற்கும் உந்துசக்தியாக அமையக் கூடியதும், எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான நியாயமான அரசியல் யாப்பை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து இருக்கின்றனர்.

ஆனாலும் அரசாங்கத்தின் இந்நடவடிக்கைகள் தொடர்பில் பரப்பப்பட்டுள்ள பொய்கள், சந்தேகங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய தேவை எற்பட்டிருக்கின்றது. இதனை உணர்ந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு நடத்திய தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, 'உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் சிலரிடம் நிலவும் தவறான அபிப்பிராயங்களை நீக்குவதற்கு மூன்று படிமுறைகளை முன்னெடுக்கப் போகின்றேன்' என்றும் 'இதன்படி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாட்டையும், சகல மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வ மதத்தலைவர்கள் மாநாட்டையும், இவ்விவகாரம் தொடர்பில் ஆர்வம் காட்டுகின்ற கல்விமான்களையும், புத்திஜீவிகளையும் உள்ளடக்கிய மாநாட்டையும் நடாத்த எதிர்பார்த்துள்ளேன்' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

உண்மையில் இது பெரிதும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்நடவடிக்கை அதிக நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறான சர்வகட்சி மாநாடுகள், சர்வமதத் தலைவர்கள் மாநாடுகள், கல்விமான்கள் புத்திஜீவிகள் மாநாடுகள் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்டுள்ளன. அவை பெரிதும் நன்மை பயத்துள்ளன. குறிப்பாக 1984 களில் ஜே.ஆர் ஜயவர்தன தலைமையில் நடாத்தப்பட்ட சர்வகட்சி மாநாடு சுட்டிக்காட்டத்தக்கதாகும். கூட்டு எதிரணியினரின் பொய்ப் பிரசாரங்களையும், அவர்கள் பரப்பி வரும் ஐயங்களையும் செல்லுபடியற்றதாக்குவதற்கு இது பெரிதும் உதவும்.

இந்நடவடிக்கையின் பயனாக இன்று அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் கூட அதன் தேவையை வலியுறுத்தக் கூடியவர்களாக மாறலாம். அதனால் அதற்கு ஏற்ப தெளிவுபடுத்தல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்நடவடிக்கை உரிய முறைமையில் முன்னெடுக்கப்படும் போது கூட்டு எதிரணியினரின் உண்மை முகம் புலப்படும்.

ஆகவே நாட்டில் சுபீட்சத்தையும், சகவாழ்வு, நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு ஏற்ப எல்லா நகர்வுகளும் இடம்பெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Add new comment

Or log in with...