Friday, March 29, 2024
Home » இஸ்லாம் வலியுறுத்தும் கருணை

இஸ்லாம் வலியுறுத்தும் கருணை

by Rizwan Segu Mohideen
October 27, 2023 12:54 pm 0 comment

எல்லா உயிர்களிடமும் இரக்கமும் கருணையும் காட்டுவதே மனிதப்பண்பாகும். நபி(ஸல்) அவர்களின் வாழ்வெங்கும் இந்த கருணை பரந்து விரிந்திருந்தது. அன்னாரின் மென்மையான குணத்தையும், மன்னிக்கும் தன்மையையும் அல் குர்ஆன் இவ்வாறு கூறுகிறது,

‘அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர். (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள். எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்தி விடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும். பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக. நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்’ (3:159).

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எல்லா உயிர்களிடத்தும் காட்டிய இரக்கமும் கருணையுமே அனைவரையும் ஈர்த்து நின்றது என்பதை இந்த இறை வசனம் எடுத்தியம்புகிறது. நபி (ஸல்) அவர்கள் கருணை நிறைந்தவராக விளங்கினார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

ஒரு தடவை, ‘ஒரு மனிதன் நியாயம் இன்றி கொல்லப்பட்டால், அது முழு மனித சமுதாயமும் கொல்லப்பட்டதற்கு சமமாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். இதன் ஊடாக கருணையின் உச்சத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மனித குலத்திற்கு எடுத்துக்காட்டினார்கள்.

அன்னார் மனிதர்களுடன் மாத்திரமல்லாமல் ஏனைய உயிரினங்களுடனும் குறிப்பாக விலங்குகளுடனும் பறவைகளுடனும் தாவரங்களுடனும் கூட மிகுந்த கருணையோடு நடந்து கொண்டடுள்ளார்கள்.

ஒரு தடவை, ‘முதுமையடைந்த ஒட்டகம் ஒன்று ஓடோடி வந்து மூச்சிறைக்க நபிகளாரின் முன்பாக நின்றது. அதனைப் பிடித்து அறுப்பதற்காக ஒருவர் கத்தியுடன் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘என்ன காரணத்திற்காக இதனை விரட்டுகிறீர்’ என்று அந்நபரிடம் வினவினார்கள். அதற்கு அந்நபர், ‘இந்த ஒட்டகம் வயதாகி முதுமையடைந்து விட்டது. இதனால் பலன் ஏதும் இல்லை, ஆகவே இதனை அறுத்து உணவாக்கவே விரட்டி வந்தேன்’ என்றார்.

அப்போது நபிகளார், ‘இந்த ஒட்டகம் எவ்வளவு காலமாக உம்மிடம் இருக்கிறது. இதன் மூலம் நீர் என்ன பயன் அடைந்தீர்?’ என வினவ, ‘இதன் தாய் இதனை எங்கள் வீட்டில் தான் ஈன்றது, குட்டியில் இருந்தே நாங்கள்தான் இதனை வளர்த்து வருகின்றோம், இது பல குட்டிகளை எங்களுக்கு ஈன்று தந்துள்ளது. அதிகமான பாலையும் தந்துள்ளது. விவசாயத்திற்கும் பயன்பட்டது, நல்ல வாகனமாகவும் இருந்தது’ என்றார் அந்நபர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவ்வளவு உதவி செய்த இந்த கிழட்டு ஒட்டகத்திற்கு இதுதான் நீர் செய்யும் கைமாறா?, அதனை அறுக்கக் கூடாது. இந்த ஒட்டகம் இயற்கையாக மரணிக்கும் வரை, அதற்கு உணவும், தண்ணீரும், உறைவிடமும் தந்து, அது இறந்த பின் நல்ல முறையில் அடக்கம் செய்வது உமது கடமை’ என்று கூறினார்கள். (ஆதாரம்-: நபிமொழி)

அதேநேரம் மிருகங்களைப் பயன்படுத்தி அளவுக்கு மீறிய கடினமாக வேலை வாங்குவதையும் நபிகளார் தடுத்துள்ளார்கள். குறிப்பாக அதன் உடம்பில் சூடுபோடுவது, அவைகளை ஊசி கொண்டு குத்துவது, வேகமாக விரட்டுவது போன்ற இரக்கமற்ற செயல்களை செய்யக்கூடாது என்றும் அன்னார் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் பறவைகள் கூட்டில் உறங்கி கொண்டிருக்கும்போது கல்லெறிந்து அவற்றைக் கலைப்பதையும் அன்னார் கண்டித்துள்ளார்கள். இதேபோன்று கருணையுடனும் இரக்கத்துடனுமே எல்லா உயிரினங்களுடனும் நபிகளார் நடந்து கொண்டார்கள்.

அன்னாரின் கருணை, இரக்க பண்புகள் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும். எல்லா உயிர்களுடனும் இரக்கமாகவும், கருணையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்ற மனித பண்பையே இஸ்லாம் பெரிதும் வலியுறுத்தி இருக்கிறது. அதற்கேற்ப வாழ்வொழுங்கை அமைத்துக் கொள்வது ஒவ்வொரு இறைவிசுவாசியின் பொறுப்பாகும்.

அப்துல் ரஹ்மான்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT