Home » கையடக்கத்தொலைபேசியினால் மாணவருக்கு நன்மைகளை விட தீமைகளே அதிகம்!

கையடக்கத்தொலைபேசியினால் மாணவருக்கு நன்மைகளை விட தீமைகளே அதிகம்!

- ஸ்மார்ட் தொலைபேசியை விட்டு முற்றாக விலகியிருக்குமாறு இளவயதினருக்கு அறிவுரை கூறுகின்றார் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி ஹம்ஸா

by Rizwan Segu Mohideen
October 26, 2023 11:16 am 0 comment

“ஆசிரியர்கள் மாணவர்களை வழிப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றார்கள். அந்தப் பணியிலிருந்து ஆசிரியர்கள் தவறிவிட முடியாது.ஆனால் இன்று தமது கடமையைச் சரியாகச் செய்கின்ற ஆசிரியர்கள் கூட சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளையும், இன்னல்களையும் எதிர்கொள்கின்றனர். மாணவர்கள் ஆசிரியர்களுடைய வழிப்படுத்தலை உதாசீனம் செய்வதனாலேயே பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன” என அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா கூறினார்.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் (தேசியபாடசாலை) பெரா சரிட்டி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘நற்பிரஜைகளாவோம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் ஏ.எச்.பெளஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீதிபதி ஹம்ஸா தொடர்ந்து உரையாற்றுகையில் “அண்மைக்காலமாக ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்பான சிறுசிறு பிணக்குகளும், வழக்குகளும் நீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் ஆசிரியர் மாணவனைத் தாக்கினார், மாணவன் ஆசிரியரைத் தாக்கினார் மற்றும் பாடசாலைகளில் ஏற்படுகின்ற மோதல்கள் என்பன பற்றியெல்லாம் நீதிமன்றம் வரை பிரச்சினைகள் வருகின்றன. ஸ்மாட் கைப்பேசிப் பாவனை அதிகரித்துள்ளமையால் வருகின்றன பிரச்சினைகளும் தற்காலத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றன. அவற்றை விசாரிக்கின்ற போது மாணவர்களும்,மாணவிகளும் தெரிவிக்கின்ற கருத்துக்களை பார்க்கின்றவேளை வியப்பாகவிருக்கின்றது.

கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு கற்பிக்க வேறுவழியில்லாத சந்தர்ப்பத்தில் கைத்தொலைபேசிகள் சூம் இணையவழி கற்பித்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இதனால் பயனடைந்த மாணவர்கள் இருந்தாலும் வழிகெட்டுப்போன மாணவர்கள்தான் அதிகம். அன்பான மாணவர்களே! நீங்கள் கைத்தொலைபேசிப் பாவனையை விட்டு முற்றாக விலகியிருங்கள். கைத்தொலைபேசி உங்களது வயதுடன் நோக்கும் போது விரும்பத்தகாததொன்று. அதனால் மாணவர்கள் அடைந்த நன்மைகளை விட தீமைகளே அதிகம். படிக்கின்ற காலத்தில் மனதில் இலட்சியங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த இலட்சியத்தை அடைந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளை இனங்கண்டு அதனை நோக்கி நகரவேண்டும். பல அறிஞர்களைப்பற்றி பேசுகின்ற போது அவர்கள் தங்களது இலட்சியங்களை அடைந்துகொள்ள எடுத்துக்கொண்ட முயற்சிகளை நாம் அறிந்து கொள்ளலாம். பொருத்தமற்றவர்களுடனான தொடர்பு, அறிமுகமில்லாதவர்களுடைய நட்பு மற்றும் கைத்தொலைபேசிப் பாவனை போன்றவற்றின் மீது நாம் எச்சரிக்ைகயாக இருக்கவேண்டும். இன்று பல துறைகளில் பெண்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள் இதுபோன்றே நாமும் இலட்சியத்துடன் பயணிக்கின்ற போது நமக்கு எதுவும் தடையாகவிருக்க முடியாது. இலக்கு நோக்கி பயணிக்கையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்” எனக் குறிப்பிட்டார்.

“காதல் என்ற தோரணையில் பசப்பு வார்த்தைகளில் எமது மாணவர்கள் அந்த வலையில் வீழ்ந்து பல சீரழிவுகளைச் சந்தித்து வருகின்றனர். அவ்வலையில் வீழ்ந்தவர்கள் புகைப்படங்களைப் பரிமாறி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதனால் குறித்த பெண்களின் குடும்பமே சமூதாயத்தில் இழிவாக பார்க்கப்படுகின்ற நிலைமை உருவாகின்றது.

எனவே மாணவர்கள் கைத்தொலைபேசி பாவனையிலிருந்து முற்றாக விலகியிருப்பதன் மூலம் அவர்களையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். 14 தொடக்கம் 16 வயதுடைய பெண் பிள்ளைகள் கைத்தொலைபேசி தொடர்பான சிக்கலுக்குள் அகப்பட்டு இன்று நீதிமன்றங்களில் அலைந்து திரிவது கவலைக்குரியது.

அண்மைக் காலமாக பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யப்போவதாக அச்சுறுத்தி பணம்பறிக்கின்ற இணைத்தளக் கள்வர்கள் அதிகரித்துக் காணப்படுகின்றார்கள். எனவே இவ்வாறான சீரழிவிலிருந்து விடுபட்டு இலக்கு நோக்கி பயணிப்பவர்களாக மாணவர்கள் மாற்றமடைய வேண்டும்” என்று நீதிபதி கூறினார்.

எம்.எப். றிபாஸ்
(பாலமுனை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT