22 ஆவது கடற்படை தளபதியாக எஸ்.எஸ். ரணசிங்க நியமனம் | தினகரன்

22 ஆவது கடற்படை தளபதியாக எஸ்.எஸ். ரணசிங்க நியமனம்

 

ட்ரவிஸ் சின்னைய்யா குறைந்த காலம் இலங்கை கடற்படை தளபதியாக செயற்பட்டார்

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமவன் சரத்சந்திர ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்படை அலுவலர்களின் பிரதானியாக செயற்பட்ட இவர், இன்றுடன் (25) ஓய்வு பெறும் ட்ரவிஸ் சின்னைய்யாவின் இடத்திற்கு இலங்கை கடற்படையின் 22 ஆவது தளபதியாக ஜனாதிதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனம் நாளைய தினம் (26) அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

1982 நவம்பரில், 11 ஆவது ஆட்சேர்ப்பில்  கடற்படையில் இணைந்த எஸ்.எஸ். ரணசிங்க, கடேட் அதிகாரியாக நியமனம் பெற்றார்.

தனது ஆரம்ப பயிற்சிகளை திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் விஞ்ஞான துறையில் பெற்ற அவர், 11 ஆவது ஆட்சேர்ப்பில் மிகத் திறைமை வாய்ந்த மத்திய நிலை அதிகாரிக்குரிய கௌரவத்திற்கான வாளை பெற்றுக்கொண்டார். இதன் மூலம் பிரித்தானியாவின் அரச கடற்படை விஞ்ஞான பிரிவில் 1984 - 1985 காலப் பகுதியில் தனது மேலதிக கற்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை பெற்றார்.

வீர விக்ரம விபூஷண, ரணவிக்ரம பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ள அவர், இலங்கை கடற்படையின் பல்வேறு சேவைத் தரத்திற்கு உயர்த்தப்பட்டார். கப்பல் மற்றும் படகுகள் தொடர்பில் பல்வேறு கட்டளைகளை வழங்கி யுத்தத்தின்போது சிறப்பாக செயற்பட்ட அதிகாரி எனும் புகழையும் அவர் கொண்டுள்ளார்.

இதே வேளை, இதுவரை கடற்படைத் தளபதியாக செயற்பட்ட ரியர் அட்மிரல் ட்ரவிஸ் ஜெரமி லியாந்துரு சின்னைய்யா, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் ஓய்வை (ஓகஸ்ட் 22) அடுத்து கடந்த ஓகஸ்ட் 23 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றதோடு, 50 வருட இலங்கையின் இராணுவ வரலாற்றில் இராணுவ உயர் பதவி வழங்கப்பட்ட முதலாவது தமிழர் எனும் புகழ் பெற்ற இவர், இன்றுடன் 64 நாட்கள் இலங்கை கடற்படைத் தளபதியாக கடமையாற்றி மிகக் குறைந்த காலப்பகுதியில் கடற்படையில் இராணுவத் தளபதியாக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...