ஆலயத்தில் இறைச்சிக்கடை சட்டம்; மக்கள் கூடும் இடத்தில் மிருக பலிக்கு தடை | தினகரன்

ஆலயத்தில் இறைச்சிக்கடை சட்டம்; மக்கள் கூடும் இடத்தில் மிருக பலிக்கு தடை

 

இந்து ஆலயங்களில் மிருக பலி இடுவதற்கு யாழ்மேல் நீதிமன்றம் இன்று (24) தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்து ஆலயமான கவுணாவத்தை நரசிம்மர் ஆலய வேள்வியின் போது ஆடுகள், கோழிகள் என்பனவற்றை வெட்டி பூசை வழிபாடுகளில் ஈடுபடுவதனை தடை செய்யுமாறு தடையீட்டு எழுத்தாணை கோரி அகில இலங்கை இந்து மகா சபையினால் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆலயத்தில் பத்தாயிரம் தொடக்கம் பதினையாயிரம் வரையிலான மக்கள் கூடும் சமய விழாவில், முன்னூறு தொடக்கம் ஐநூறு வரையிலான கோழிகள், ஆடுகள் வெட்டப்பட்டு இறைச்சியாக்கப்பட்டு ஆலயத்தினுள் விற்பனை செய்யப்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

ஆலயத்தினுள் வேள்வியினை நடாத்துவதற்கு சங்கானை பிரதேசசபை, தெல்லிப்பழை பிரதேசசபை, உடுவில் பிரதேசசபை, சண்டிலிப்பாய் பிரதேசசபை, கோப்பாய் பிரதேசசபை ஆகியன அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்குவதற்கு இறைச்சிக்கடை சட்டத்தினை பயன்படுத்தியுள்ளமை கேவலமான விடயம் என தெரிவித்த நீதிபதி இறைச்சிக்கடைச் சட்டம், மிருக வதைச் சட்டம், அரசியல் சட்டம் ஆகிய சட்டங்களின் படி ஆலயங்களில் மக்கள் கூடும் பொது இடங்களில் மிருகங்களை பலியிடல் குற்றச்செயலாகும்.

முன்னூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த சமய அனுஷ்டானமான மிருக பலியிடலை நிறுத்துவது சட்டப்படி தவறானது என கவுணாவத்தை நரசிம்மரால் கூறப்பட்டது.

இதற்கு இறைச்சிக்கடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இறைச்சிக்கடை சட்டத்திற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்மந்தம் உள்ளது என நீதிபதி மன்றில் கேள்வியெழுப்பினார்.

இறைச்சிக் கடை சட்டமென்பது இறைச்சிகளை விற்பனை செய்யும் சட்டமாகும் இதனை தவறாக புரிந்து கொண்ட வலிகாமம் பகுதி பிரதேச செயலாளர்கள் தான்தோன்றித்தனமாக அனுமதி வழங்கியுள்ளதாகவும் மன்றில் நீதிபதி குறிப்பிட்டார்.

பிரதேச சபைகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டில் கோழிகள், ஆடுகளை வெட்டி மக்கள் கூடும் பொது இடங்களில் சமூக சீர்கேட்டினை ஏற்படுத்தியுள்ளன.

2014 ஆம் ஆண்டு வேள்விக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்ட போதும் குறிப்பிட்ட நீதவானுக்கு அவ்வாறு அனுமதி வழங்க அதிகாரம் இல்லை என தெரிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், இது தொடர்பில் மேல்நீதிமன்றம், மேல் முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்பவற்றுக்கே அதிகாரம் உள்ளதாகவும் மன்றில் சுட்டிக்காட்டினார்.

பொது இடத்தில் மிருகங்களை பலியிட முடியுமா என மன்றில் கேள்வியெழுப்பிய நீதிபதி, பேருந்து நிலையத்தில் மிருக பலியிடமுடியுமா? யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானம் மக்கள் கூடும் பொதுஇடம் அங்கு மிருகபலியிட முடியுமா? தலதா தாளிகையில் 1 இலட்சம் மக்கள் கூடும் சமய நிகழ்வில் மிருகங்களை பலியிட அனுமதி கோர முடியுமா? உள்ளுராட்சி சபைகள் இதற்கு அனுமதி வழங்குமா?

அதே போல் நல்லூர் ஆலய திருவிழாவின் போது மிருகங்களை பலியிட முடியமா? கிறிஸ்மஸ் நிகழ்வின் போது அந்தோனியார் கொச்சிக்கடை ஆலயத்தில் மிருகங்களைப் பலியிட முடியுமா என்றும் கேள்வியெழுப்பியதுடன், யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட ஆலயங்களில் மிருகபலி இடுவதற்கு தடை விதித்து தீர்ப்பளித்தார்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...