ரஞ்சனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நவம்பர் 21 இற்கு ஒத்திவைப்பு | தினகரன்

ரஞ்சனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நவம்பர் 21 இற்கு ஒத்திவைப்பு

நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்ததோடு, அவ்வழக்கு உச்ச நீதிமன்றில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்று (25) நீதிமன்றில் ஆஜரான அவர், கடந்த 12 ஆம் திகதி விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் அழைப்பாணை தனக்கு கிடைக்கவில்லை எனவும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜரானதாக தெரிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இன்றைய தினம் அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கடந்த 12 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், இந்நாட்டிலுள்ள நீதவான்கள் மற்றும் வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் என, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இரண்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய மாகல்கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சுனில் பெரேரா ஆகியோரினால், உச்ச நீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...