மியன்மார் திரும்பும் ரொஹிங்கிய அகதிகளுக்கு நிலம் கிடைக்காது | தினகரன்

மியன்மார் திரும்பும் ரொஹிங்கிய அகதிகளுக்கு நிலம் கிடைக்காது

மின்மாரில் இருந்து பங்களாதேஷை நோக்கி தப்பி வந்த ரொஹிங்கிய முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த இடத்திற்கு திரும்பியபோதும் தமது நிலத்தின் உரிமையை பெற வாய்ப்பு இல்லை என்றும் அவர்களின் பயிர்கள் அரசினால் அறுவடை செய்யப்பட்டு விற்கப்பட்டிருக்கும் என்றும் மியன்மார் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

மியன்மார் இராணுவத்தின் படை நடவடிக்கை ஒன்றுக்கு தூண்டிய ஓகஸ்ட் 25 ஆம் திகதி ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் ஒன்றை அடுத்து இதுவரை சுமார் 6,00,000 ரொஹிங்கிய மக்கள் எல்லை கடந்து பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மீள் குடியேற்ற திட்டத்துடன் தொடர்புபட்ட மியன்மாரின் ஆறு அதிகாரிகளை ரோய்ட்டர்ஸ் பேட்டி கண்டுள்ளது. மியன்மார் அரசு அகதிகள் நாடு திரும்புவதற்கு உறுதி அளிப்பது குறித்த திட்டம் ஒன்றை வகுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

நாடு திரும்பும் அகதிகளுக்கு தமது நிலம் மற்றும் பயிர்களுக்கு உரிமை கோருவது பற்றி ரகைன் மாநிலத்தின் விவசாயத்துறை அமைச்சர் க்யவ் லிவினிடம் கேட்கப்பட்டபோது, “அது அவர்களை பொறுத்தது. பிரஜா உரிமை அற்றவர்களுக்கு நில உரிமை இல்லை” என்றார்.

அண்மைய வெளியேற்றத்திற்கு முன்னர் மியன்மாரில் வாழ்ந்து வந்த சுமார் ஒரு மில்லியன் ரொஹிங்கிய முஸ்லிம்களும் பிரஜா உரிமை அற்றவர்கள் என்பது குறிப்படத்தக்கது.

அந்த அகதிகளின் பயிர்களை அறுவடை செய்து விற்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ரொஹிங்கிய மக்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை விட்டுவிட்டே தப்பிச் சென்றிருப்பதாக மியன்மார் அரச ஆவணங்கள் காட்டுகின்றன.

ரகைன் மாநிலத்திற்கு திரும்பும் அகதிகளை தமது நிலத்தில் அன்றி புதிய கிராமங்களில் தங்கவைக்க மியன்மார் திட்டமிட்டுள்ளது. இது நிரந்தர அகதி முகாம் அமைக்கும் திட்டமென விமர்சனம் எழுந்துள்ளது.

வெளியேறி இருக்கும் 5,89,000 ரொஹிங்கிய மக்கள் மற்றும் சுமார் 30,000 முஸ்லிம் அல்லாதோர் வடக்கு ரக்கைனின் மோதல் பகுதியில் சுமார் 71,500 ஏக்கர் நெல் வயல்களை விட்டுச் சென்றுள்ளனர். இவை ஜனவரி மாதம் அறுவடை செய்யப்பட வேண்டி இருப்பதாக அந்த மாநில அதிகாரிகள் வகுத்திருக்கும் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...