ஜப்பான் பொதுத் தேர்தலில் பிரதமர் அபே அமோக வெற்றி | தினகரன்

ஜப்பான் பொதுத் தேர்தலில் பிரதமர் அபே அமோக வெற்றி

வட கொரியாவுக்கு பதிலடி கொடுக்க உறுதி

ஜப்பான் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்ற பிரதமர் ஷின்சோ அபே வட கொரியாவுக்கு எதிராக வலுவான பதில் நடவடிக்கையை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

பிரச்சினைகளை கையாள்வதற்கான மக்கள் ஆணை ஒன்றை கோரியே அபே முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். குறிப்பாக அண்மைய மாதங்களில் வட கொரியா ஜப்பானுக்கு மேலால் ஏவுகணைகளை விட்டது அந்த நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் அபேயின் ஆளும் கூட்டணி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.

இதன்மூலம் போருக்கு பின்னரான ஜப்பானின் அமைதி சார்பு அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவர வழி ஏற்பட்டுள்ளது.

பிரதமர் அபே முன்னதாக நாட்டின் ஆயுதப்படைகள் முறைப்படுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கை மூலம் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார். எனினும் இதனால் நாடு மீண்டும் இராணுவமயமாகும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

தேர்தல் முடிவுகளை அடுத்து நேற்று டோக்கியோவில் ஊடக சந்திப்பில் பேசிய அபே கூறியதாவது, வட கொரியாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அதரடி பதில் நடவடிக்கையை மேற்கொள்ள கூட்டணியின் வெற்றி நம்பிக்கையை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பதில் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கவிருப்பதாக அபே குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி ரஷ்யா, சீனா போன்ற ஏனைய உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வட கொரியா மீது வலுவான அழுத்தம் தரப்படும் என்று உறுதி அளித்த அபே, “ஜப்பான் மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பை நான் உறுதி செய்வேன்” என்றும் கூறினார்.

அரசியல் சர்ச்சைகள் காரணமாக அபேவின் செல்வாக்கு அண்மைய மாதங்களில் வீழ்ச்சி கண்டிருந்தபோதும், ஜப்பான் தீவான ஹொகைடோவுக்கு மேலால் வட கொரியா இரண்டு ஏவுகணைகளை அனுப்பியது அவரது புகழ் திடீரென அதிகரிக்க காரணமானது.

வட கொரியாவோடு இராஜதந்திர அல்லது பொருளாதார உறவை கொண்டிராத ஜப்பான் வட கொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவுடனும் ஒரு இறுக்கமான உறவையே கொண்டுள்ளது. இந்நிலையில் ஜப்பான் தனது பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை தக்கவைத்துக் கொள்வது மாத்திரமே செய்ய முடியுமாக உள்ளதென நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் அபேவின் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி மற்றும் அதன் கூட்டணியான கொமெய்டோ கட்சி ஜப்பான் பாராளுமன்றத்தின் 465 இடங்களில் 313 இடங்களை வென்றுள்ளது. இதன்மூலம் அரசியலமைப்பை மாற்றவும் அந்த கூட்டணிக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.

அரசியலமைப்பில் உள்ள போரை எதிர்க்கும் உட்பிரிவான 9 ஆவது பிரிவை மாற்றுவது குறித்து அபே ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த உட்பிரிவில் ஜப்பான் இராணுவம் ஒரு தற்காப்பு படையாகவே ஏற்கப்படுகிறது.

அதிக சவால் கொண்ட இந்த மாற்றத்தை அடைவதற்கு அவர் 2020 ஆம் ஆண்டை கால எல்லையாக நிர்ணயித்திருந்தார். எனினும் நேற்றைய தேர்தல் முடிவுகளின்படி பிரதமர் அபே இந்த இலக்கை எட்டுவது இலகுவாகியுள்ளது.

பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான வலுவான உடன்பாடொன்றை எட்டுவதற்கும் அவர் எதிர்பார்த்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டாலும், அது பொதுமக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு விடப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட சூழ்நிலைகளில் துருப்புகள் நாட்டுக்கு வெளியில் போரிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் அரசிலமைப்பில் மறு பொருள்விளக்கம் ஒன்றை அபே இரண்டு ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்டார். எனினும் இந்த மாற்றம் பரந்த அளவில் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்க காரணமானது.

அபேவின் அமோக வெற்றியின் மூலம் ஜப்பானின் எதிர்க்கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

குறிப்பாக முன்கூட்டிய தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் செல்வாக்கு மிக்க டோக்கியோ ஆளுநர் யுரிகோ கொய்கே தலைமையில் அண்மையில் உருவாக்கப்பட்ட கன்சர்வேடிவ் கட்சி மீதே அனைவரதும் அவதானம் சென்றது. அந்த கட்சி தேர்தலில் அதிக முன்னேற்றம் காணும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின.

எனினும் அந்த கட்சியை பின்தள்ளி மைய வலதுசாரி அரசியலமைப்பு ஜனநாயக கட்சி மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 9இல் திருத்தம் கொண்டுவரும் அபேவின் திட்டத்திற்கு இந்த கட்சி எதிர்ப்பு வெளியிட்டு வருகிறது.

அபோவின் இந்த வெற்றியின்மூலம் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைமை பதவிக்கு மூன்றாவது மூன்று ஆண்டு தவணையை அவர் உறுதி செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கட்சி வரும் செப்டெம்பரில் இதற்கான வாக்கெடுப்பை நடத்துகிறது.

இந்த வெற்றியோடு ஜப்பானின் நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்தவராக இடம்பிடிக்கவும் அபேவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அபே 2012 ஆம் ஆண்டு தொடக்கம் பிரதமர் பதவியில் இருந்து வருகிறார்.


Add new comment

Or log in with...