15 நிறுவனங்களின் மோசடிகள் குறித்து விளக்கம் | தினகரன்

15 நிறுவனங்களின் மோசடிகள் குறித்து விளக்கம்

கோப் குழு 4 ஆவது அறிக்கை

பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் (கோப் குழு) நான்காவது அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பதினைந்து அரசாங்க நிறுவனங்களின் நிதி இழப்புக்கள், மோசடிகளை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி சபையில் சமர்ப்பித்தார்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி வரையான காலப் பகுதியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 15 நிறுவனங்கள் பற்றியே இந்த அறிக்கையில் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கோப் குழுவின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும், சிபாரிசுகளைப் நடைமுறைப்படுத்துவதில் பிரதம கணக்கியல் அதிகாரிகள் என்ற ரீதியில் அமைச்சின் செயலாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அறிக்கைகள் சமர்ப்பிப்பதில் எந்தவித அர்த்தமும் கிடையாது என சுனில் ஹந்துன்நெத்தி சபையில் தெரிவித்தார்.

இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதுடன், இதற்காக நிதி அமைச்சு விசேட குழுவொன்றை அமைத்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை ஆராய்ந்து வருவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பதில் வழங்கினார்.

இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து விசாரணைகளுக்கும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு கேள்விகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களை கொண்டிருப்பதாக சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டினார்.

நேற்று சமர்ப்பிக்கப்பட்ட கோப் அறிக்கையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் கம்பனி, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், சதொச, மக்கள் வங்கி, தேசிய லொத்தர் சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 15 நிறுவனங்களின் கொடுக்கல்வாங்கல்கள், அவற்றில் இடம்பெற்ற மோசடிகள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 3 சந்தர்ப்பங்களில் பயண இலக்கு பலகைகள் மற்றும் அவசர தொலைபேசி இலக்க விபர ஸ்டிக்கர்களை அச்சிடுவதற்கு 175,343 ரூபாவை செலவிட்டிருப்பதாகவும் முறையான கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்படாமலேயே இந்த பணம் செலவிடப்பட்டிருப்பதாகவும் மேற்படி கோப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாகாண பஸ்களை ஒழுங்குபடுத்துவதற்கு கட்டடமொன்றின் அங்கமொன்றை புதுபிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 37 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ள போதிலும், அது பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. 79 மில்லியன் ரூபாவை செலவிட்டு 1,307 ஜி.பி.எஸ். கருவிகள் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள போதிலும், பஸ்களிலுள்ள கருவிகள் செயற்படுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கா சதொச நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையான 870,963,097 ரூபாவில், 257,667,217 ரூபா ரூபாவே கிடைக்கவேண்டியிருப்பதாக கோப் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட 257,907 மெற்றிக் தொன் அரிசி தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கோப் குழு சதொசவுக்கு அறிவித்துள்ளது. 14,000 கரம்போட்களையும், 11,000 சதுரங்க ஆட்ட பலகைகளையும் கொள்வனவு செய்வதால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பிலும் கோப் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ள கோப் குழு ஹெட்ஜிங் கொடுக்கல் வாங்கலினால் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10.2 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட இழப்பீடு அதேவருடம் டிசம்பர் மாதம் 14.062 பில்லியன்களாக அதிகரித்தமை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

Or log in with...