விபத்துகளுக்கு காரணம் யார்? | தினகரன்

விபத்துகளுக்கு காரணம் யார்?

கடந்த வாரம் பத்திரிகைகளில் காணப்பட்ட சில விபத்துத் தொடர்பான தலைப்புகளே இவை.

* மதுகம கலவான பாதையில் வானொன்றும் ஜீப் வண்டியும் மோதி வானில் பிரயாணம் செய்த மூன்று வயது சிறுமி பலி, 12 பேர் காயம்

* தெல்தெனிய ரங்கல தென்னேகடே பிரதேசத்தில் பஸ் வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்ததால் இருவர் பலி 25 க்கும் அதிகமானோர் படுகாயம்.

* தெல்தெனியவில் பாதையைவிட்டு விலகிய கார் மோதி மூவர் மரணம்.

யுத்த காலத்தில் யுத்தம் மற்றும் மிதிவெடி, குண்டுவெடிப்பு காரணமாக இறந்தவர்களை விட அதிகமானோர் விபத்து காரணமாக இன்று உயிரிழப்பதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.

விபத்துக்கள் தொடர்பாக ஊடகங்கள் மூலம் எவ்வளவுதான் அறிவுறுத்தினாலும் அவை குறைந்த தாகத் தெரியவில்லை. இது தொடர்பாக நாம் ஆராய்வதை விட பாதை பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட என்ன கூறுகின்றார் என்பதைக் கேட்போம். தற்போது மூன்று மணித்தியாலயத்துக்கு ஒருவர் விபத்து காரணமாக இறப்பதை நாம் காணமுடியும்.

அதாவது நாளொன்றுக்கு எட்டுபேர் வீதம் மரணமடைகின்றார்கள். ஆறு வருடங் களுக்கு முன்னர் எட்டு மணித்தியாலத்துக்கு ஒருவரே மரணமடைந்தனர். அதாவது நாளொன்றுக்கு மூன்று பேரே மரணமடைந்தார்கள். இந்நிலைமை அதிகரித்திருப்பதால் நாட்டில் கண்ணுக்குத் தெரியாத பல பிரச்சினைகள் உருவாகி உள்ளதை அறியக் கூடியதாகவுள்ளது. தற்போது நடை பெற்றுள்ள ஆய்வுகளின்படி விபத்துகளுக்கான ஆறு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

1. கவனயீனமாக வாகனம் செலுத்துதல்

2. அதிக வேகமாக வாகனங்களை ஓட்டுதல்

3. மது போதையில் வாகனம் செலுத்துதல்

4. பாதுகாப்பற்ற, தரக்குறைவான தலைக்கவசத்தை அணிதல்

5. கை தொலைபேசியை பாவித்தவாறு வாகனத்தை செலுத்துதல்

6. வாகன சாரதிக்கு நித்திரைப் போதல்

இதில் முதலாவது கவனயீனமாக வாகனங்களை செலுத்துதலில் முதலிடம் பெறுவது மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி விபத்துக்களே என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேற்படி விபத்துக்கள் மூலமே அதிகளவான மரணங்களும் சம்பவிக்கின்றன.

இரண்டாவதாக அதிக வேகம் காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் விபத்துகள் இடம்பெறுகின்றன.

மதுபோதையில் வாகனங்கள் செலுத்துவதாலும் விபத்துகள் அதிகரித்துள்ளன. பாதுகாப்பற்ற தலைக்கவசம் தற்போது சில வருட காலமாக சாரதிகளால் மேற்கொள்ளப்படும் கைத்தொலைபேசி பாவனை காரணமாகவும் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. மறுமுனையில் பேசுபவருடன் சண்டையிடுதல், அதிர்ச்சியான செய்திகளை செவிமடுத்தல் என்பன காரணமாக கட்டுப்பாட்டை சராதி இழப்பதனால் விபத்துகள் நேருகின்றன.

அடுத்த காரணம் தூக்கம். அதற்கான இரண்டு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் தொற்றா நோய்கள் அதிகரித்துள்ளது. விசேடமாக கொலஸ்ரோல், நீரிழிவு, இரத்த அழுத்தம், தொடர்பாக சிசிச்சைப் பெறுவோர் அதிகரித்துள்ளனர். அவர்கள் பாவிக்கும் மருந்துகள் காரணமாக தூக்கம் கொள்கின்றார்கள். அப்போது அவர்கள் வாகனங்களை செலுத்திக் கொண்டிருந்தால் விபத்துகள் ஏற்படுகின்றது. அதேபோல் அதிகமாக களைப்படைந்திருந்தாலும் தூக்கத்துக்கு வசப்படுகின்றார்கள்.

தொடர்ந்து பல மணி நேரம் வாகனங்களைச் செலுத்துவதும் காரணமாகும். வாகனங்களை செலுத்துபவர்கள் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஓய்வின்றி வாகனங்களைச் செலுத்துகின்றார்கள். வேறு நாடுகளில் சாரதிகள் வாகனங்களை செலுத்தக்கூடிய கால அளவு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் எமது நாட்டில் அது போன்ற சட்டங்கள் எதுவுமில்லை.

இதுவரை நாம் சாரதிகளினால் ஏற்படும் விபத்துகள் பற்றியே குறிப்பிட்டிருந்தோம். இதேவேளை பாதசரிகள் பற்றியும் குறிப்பிட வேண்டும். பாதசாரிகளில் பலர் பாதையைக் கடக்க கடவைகளைப் பயன்படுத்துவதில்லை. அநேகமாக கிராமப்புறங்களில் நூற்றுக்கு தொண்ணூறு விதமானோர் பாதுகாப்பற்ற முறையிலேயே பாதையைக் கடக்கின்றார்கள்.

பாதைகளில் உள்ள குறைபாடுகளும் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றது. அவற்றை ஆராய்ந்து சில தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளன. இருட்டான இடங்களில் வீதி விளக்குகளை அமைத்தல், வளைவான இடங்களில் கண்ணாடிகளைப் பதித்தல் என அவற்றில் சிலவாகும்.

எவ்வாறாயினும் எமது நாட்டில் இடம்பெறும் விபத்துகள் தவிர்கக் கூடியனவாகவும் உள்ளன. உதாரணமாக அண்மையில் 13 மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்று விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியைப் பற்றிக் குறிப்பிடலாம். முச்சக்கர வண்டியில் குறைந்த பட்சம் சாரதியோடு நான்கு பேரே பிரயாணம் செய்ய முடியும். அவ்வண்டியில் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோர்கள் இதுபற்றி அறிந்திருக்கவில்லை. பொலிஸாரும் அவ்வண்டியை ஒரு போதும் காணாதது ஆச்சரியப்படத்தக்க விடயமே. இவ் விபத்தில் பாதிப்படைந்த சிறுமியொருவர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்.

அம் மாணவிக்காக அரசாங்கம் இருபது இலட்சம் ரூபாவுக்கு மேல் செலவுசெய்துள்ளது. இவ்வாறு 20 தொடக்கம் 24 பேர்வரை காயமடைந்து சிகிச்சை பெறுகின்றார்கள். அவர்களுக்காக நாளொன்றுக்கு அரசாங்கம் 150 இலட்சம் ரூபாவரை செலவு செய்கின்றது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் பல வருடங்களாக காத்திருப்போரும் உண்டு. கவனயீனமாக வாகனங்களைச் செலுத்துவதனால் காயமடைவோருக்காக செலவிடும் பணத்தை இவர்களுக்கு செலவிடலாம் அல்லவா?

இவ்வாறு நமக்குத் தெரியவராத பாரிய சமூகப் பிரச்சினைகள் சமூகத்தில் உருவாகி வருகின்றது. வருடமொன்றுக்கு 36,000 வாகன விபத்துக்கள் நடைபெறுகின்றது. கடந்த வருடம் வாகன விபத்துக்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,961 ஆகும். அதில் 1894 பேர் குடும்பத் தலைவர்களாவர். அதனால் அந்த குடும்பத்தின் வருமானம் இழக்கப்படுகின்றது. இதன்போது அக்குடும்பத்தை நடத்தும் பொறுப்பு குடும்பத் தலைவிக்கு ஏற்படுகின்றது. சில வேளைகளில் பிள்ளைகள் பாதுகாப்பற்றவர்களாக காணப்படுகின்றார்கள். அவர்களை மது பாவனைக்கும் வேறு துர்நடத்தைகளிலும் ஈடுபடுத்த சிலர் காத்திருக்கின்றார்கள்.

சாரதிகள் முறையான பயிற்சி பெறாமையினாலும் இந்நிலமை உருவாகியுள்ளது. சாரதி பயிற்சி பாடசாலைகள் மூலம் சாரதியொருவருக்கு 5 மணித்தியாலத்துக்கும் குறைவான நேரம் பாதைகளில் வாகனங்களை செலுத்தியதன் பின்னரே சாரதியொருவரை உருவாக்குகின்றார்கள். இதுபோதுமான பயிற்சிக் காலமல்ல.

பாதையில் பயணம் செய்யும் போது தன்னை எப்போதும் இரண்டாவதாக பயணிப்பவர் என கருத்தில் கொண்டால் அதிகமாக விபத்துக்களைத் தவிர்க்கலாம். அதேபோல் பாதசாரிகளும் பாதை தமக்கு எப்போதும் பாதுகாப்பற்றது என எண்ணியே பயணம் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் வாகன விபத்து என்பது எமக்கு நிரந்தரமான தீர்வற்ற ஊடகங்கள் மூலம் எப்போதும் பேசப்படும் விடயமாக மாத்திரமே காணப்படும்.

தாரக விக்ரமசேகர
தமிழில்: வீ. ஆர். வயலட்


Add new comment

Or log in with...