பாஜகவின் அச்சத்தைக் காட்டுகிறது: 'மெர்சல்' சர்ச்சை குறித்து குஷ்பு சாடல் | தினகரன்

பாஜகவின் அச்சத்தைக் காட்டுகிறது: 'மெர்சல்' சர்ச்சை குறித்து குஷ்பு சாடல்

பாஜகவின் அச்சத்தைக் காட்டுகிறது என்று 'மெர்சல்' படத்தின் சர்ச்சை குறித்து குஷ்பு கடுமையாக சாடியிருக்கிறார்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.

'மெர்சல்' படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்கள் நீக்கப்பட வேண்டும் என்று பாஜக கட்சியைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் மெர்சலாயிட்டேன். முழுவதும் ஒன் மேன் ஷோ. இந்தத் தீபாவளிக்கு கண்களுக்கு விருந்தாக இருக்கிறார் நடிகர் விஜய். சோர்வான ஒரு நொடி கூட இல்லை. படத்தை வைத்த கண் வாங்காமல் பார்ப்போம். ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் என பல சமூக பிரச்சினைகளை தைரியமாக நேரடியாகத் திரையில் பேசியதற்கு பாராட்டுகள்.

சிலருக்கு மெர்சலால் பல இரவுகள் தூக்கம் இழக்க நேரிடும். படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் எனச் சொல்வது சுதந்திரத்தை நசுக்குவதைப் போல. அது பாஜகவின் அச்சத்தையே காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.


Add new comment

Or log in with...