புதிய அரசியலமைப்பு; அரசின் உறுதியான நிலைப்பாடு | தினகரன்

புதிய அரசியலமைப்பு; அரசின் உறுதியான நிலைப்பாடு

நாட்டு மக்களில் பெரும்பான்மையினர் 2015 ஜனவரி 8ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணிப் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். ஜனாதிபதி தேர்தலின் போதும் அதன்பின்னர் 2015 ஆகஸ்டில் நடை பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும் மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாப னங்களில் நாட்டின் நீண்டகாலப் பிரச்சினையான இனநெருக்கடிக்கு உகந்த தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவாக புதியதொரு அரசியலமைப்பு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்ப ட்டிருந்தது. இதனை நாட்டு மக்கள் அங்கீகரித்து ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான கூட்டு அணிக்கு தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கினர்.

இதற்கப்பால் ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரித்திருந்தது. இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை எட்டும் பொருட்டு புதிய அரசியல மைப்பு உருவாக்கப்படும் என்ற உத்தரவாதமே தமிழ்த்தரப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கக் காரணமாக அமைந்தது.

பிரதமர் ரணில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவர் மீதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களும் ஒரு அதீத நம்பிக்கை வைத்தே தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இத்தகையதொரு நிலையில்தான் நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தை அரசியல் யாப்புச் சபையாக மாற்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை மாற்றுவது, தேர்தல் முறையை மாற்றியமைப்பது, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு போன்றவற்றை உள்ளடக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வேலை த்திட்டத்துக்கு ஆரம்பப்புள்ளி போடப்பட்டது. இதற்காக பிரதமர் தலைமை யிலான உபகுழுவுக்கு 21 எம்.பீக்களை உள்ளடக்கி பணிகள் தொடங்கப்பட்டன.

இந்தக்குழு அரசியல் தீர்வு குறித்தும் ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் இடைக்கால அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்தது. இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 30, 31ஆம் திகதிகளிலும் நவம்பர் முதலாம் திகதியும் விவாதத்தை நடத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. மூன்று தினங்கள் முழுமையான விவாதத்தை நடத்தியதன் பின்னர் புதிய அரசியலமைப்புக்கான இறுதிக்கட்ட யோசனைகள் குறித்து கலந்துரையாட தீர்மானிக் கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் இதனை பிரதான பௌத்த பீடங்களான அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களின் முதன்மை மகாநாயக்கர்கள் புதிய அரசியலமைப்பு யோசனையை அரசு கைவிட வேண்மெனவும் அப்படியொன்று தற்போதைய நிலையில் அவசியமற்றது என தெரிவித் ததாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இரண்டு மகாநாயக்கர்களும் நாட்டிலில்லாத ஒரு சூழ்நிலை யிலேயே அரசியலமைப்பு முயற்சியை குழப்பும் நோக்கில் சில தீய சக்திகள் இவ்வாறான தொரு நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே, முன்னாள் ஜனாதிபதியும் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான மஹிந்த ராஜபக்ஷ அரசின் அரசியலமைப்பு முயற்சியை கடுமையாக சாடியிருந்தார். இது தமிழ் மக்களுக்கு சமஷ்டியை பெற்றுக் கொடுக்கும் ஒரு முயற்சி எனக் கூறி பௌத்த சிங்கள மக்களை தவறாக வழி நடத்தும் ஒரு முயற்சி யாகவே இதனை நோக்க வேண்டியுள்ளதாக புத்திஜீவிகள் பலரும் கருத்துத் தெரிவித்திருக் கின்றனர். சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகள், எதிர்பார்ப்புக்களை கவனத்தில் கொள்ளாது அவசர்களது உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் இனவாதப் போக்கில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இந்தச் சக்திகள் தீவிரம் காட்டி வருகின்றன.

மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களை முன்வைத்து காய் நகர்த்தும் இந்த தீயசக்திகள் சில ஊடகங்களை தம் கைக்குள் போட்டுக் கொண்டு சிங்கள மக்களை தவறாக வழிநடத்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாகச் சாடியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஏற்கனவே மல்வத்தை, அஸ்பிரிய பீடங்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களது இணக்கம் பெற்றுக்கொண்டதன் பின்னரே மக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார். புதிய யாப்புக்கு மக்களாணை கிடைத்திருக்கும் நிலையில் சில தவறான செயற்பாடுகளுக்கு சில ஊடகங்கள் விலைபோயிருப்பதாக பிரதமர் சாடியுள்ளார்.

இதனிடையே இன்னொரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றோம். ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய தீபாவளி வைபவத்தின் போது உரையாற்றிய ஜனாதிபதி பிரச்சினைகளை ஒரே மேசையிலிருந்து பேசுவது பெறுமதியானது எனவும் மக்களையும், மகாநாயக்கர்களையும் திசைதிருப்ப சில அடப்படை வாதிகள் முயற்சிப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்த தீயசக்திகள் விடயத்தில் நாட்டு மக்கள் அவதா னமாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஜனாதிபதியும், பிரதமரும் அரசாங்கமும் ஒருமித்த நாடு என்ற கோட்பாட்டின் கீழ் நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியில் அக்கறை காட்டி வரும் ஒரு சூழ்நிலையில் அதிலும் கூட குற்றம் கண்டுபிடிக்க முனைகின்றனர். எழுத்துக்களை வைத்து மக்களை குழப்பும் முயற்சிகளில்தான் இந்தத் தீயசக்திகள் முனைப்புக் காட்டிவருகின்றன. புதிய யாப்பு உருவாவதை தடுப்பதற்காக இனவாதப் போக்குடைய பௌத்த பிக்குகளை அணி திரட்டி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷ இதில் முன்னிலை வகிக்கின்றார். அவரால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட “எலிய”என்ற அமைப்பினூடாகவே இது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாக இருப்பினும் 2015 ல் மக்கள் வழங்கிய ஆணைப்படி அரசாங்கம் அதன் பயணத்தை முன்னெடுக்கும். யார் எந்த வழியில் தடைகளைப் போட முனைந்தாலும் அவற்றை அகற்றி பாதையை சீர்செய்து கொண்டு நல்லாட்சிப் பயணம் முன்னேறிச் செல்லும் என உறுதிபடத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதியும், பிரதமரும் பெரும்பான்மை மக்களின் விருப்புக்றேற வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கி நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படுமென உறுதியளித்துள்ளனர். அரசாங்கத்தின் இந்தத் திடசங்கற்பம் வெற்றி இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.


Add new comment

Or log in with...